ஜஸ்டிஸ்  கட்சிக்கு  நிதி  வசூல்

 

குண்டூர்  ஜஸ்டிஸ்கட்சி  மகாநாட்டில்  கட்சிப்பிரசாரத்துக்கு  ஒரு  லட்சத்துச்  சொச்ச  ரூபாய்  வரை  கையொப்பமிடப்பட்டிருக்கிறது.  இதில்  கட்சித்  தலைவர்  பொப்பிலி  ராஜா  அவர்கள்  25000 ரூபாய்க்குக்  கையொப்பமிட்டிருக்கிறார்.  இது  தவிர  பொப்பிலிராஜா  அவர்கள்  தலைமை  ஸ்தானம்  பெற்றது  முதல்  மாதம்  1க்கு  5000 ரூபாய்  முதல்  7500 ரூபாய்  வரை  மாதந்தோறும்  கட்சிக்காக  என்று  செலவழித்து  வந்திருக்கிறார்.  இவர்  கட்சியின்பேரால்  ஒரு  சின்னக்  காசு  பயன்  அடைந்தவர்  அல்ல  என்பதோடு  அவருக்கு  ஏற்கனவே  ராஜா  பட்டமும்,  அவர்  தகப்பனாருக்கு  மகாராஜா  பட்டமும்,  பல  லட்சக்கணக்கான  சொத்துக்களும்  வருவாய்களும்  இருந்து  வருகின்றன.

மற்றும்  நான்கு  ராஜாக்கள்  தலைக்கு  15000 ரூபாய்  வீதம்  அதாவது  செல்லப்பள்ளி,  வெங்கிடகிரி,  மீர்சாபூர்,  பர்வாக்கிமிடி  ஆகியவர்கள் 6000 ரூபாய்க்கு  கையொப்பமிட்டிருக்கிறார்கள்.  மற்றும்  மந்திரிகளாகிய   தோழர்கள்  பி.டி.  ராஜன்  அவர்கள் 5000மும்,  திவான்பகதூர்  குமாரசாமி  செட்டியார்  5000மும்  கையொப்பம்  செய்திருக்கிறார்கள்.  ஆக  நபர்  7க்கு  ரூபாய் 95000 கையொப்பமாகி  இருக்கின்றது.

காங்கிரசுக்காரர்கள்  போல  இந்தப்  பணம்  ஏழைகளை  வஞ்சித்தும்  பெண்  மக்களை  ஏமாற்றியும்  வசூலிக்கப்படாமல்,  பணக்காரர்கள்  என்கின்ற  கூட்டத்தாரே  முன்  வந்து  தாராளமாய்  உதவி  இருப்பதானது,  அக்கட்சியானது  ஏழைகள்,  பிற்படுத்தப்பட்டவர்கள்  ஆகியவர்கள்  நன்மைக்கு  செல்வவான்கள்  கலந்து  உழைப்பது  என்பதை  ருஜுப்படுத்துகிறது.

குடி அரசு  துணைத் தலையங்கம்  13.10.1935

 

You may also like...