ஸ்தல ஸ்தாபனங்களும் காங்கிரஸ்காரர்களும்

 

இந்திய தேசியக் காங்கிரஸ் என்பது பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனமென்றும், பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்க ஸ்தாபனமாய் வெகுகாலமாய் இருந்து வந்த மத ஸ்தாபனங்களுக்கு யோக்கியதையற்றுப் போனவுடன் அதற்குப் பதிலாய் காங்கிரஸ் ஸ்தாபனத்தைத் தங்கள் ஆதிக்கத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் நாம் 10, 12 வருஷ காலமாகவே சொல்லி வருகிறோம்.

அதற்கும் 7, 8 வருஷங்கள் முன்பு இருந்தே வெகுகாலமாகப் பிரபல காங்கிரஸ்வாதிகளாய் இருந்த டாக்டர் நாயர், சர்.பி.தியாகராய செட்டியார் போன்ற அறிஞர்களும் அந்தப் படியே சொல்லி காங்கிரசுக்கு எதிராகத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதாக ஒரு ஸ்தாபனத்தைத் தென்னிந்தியா வெங்கும் ஏற்படுத்திப் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் சூழ்ச்சிக்கும் காங்கிரஸ் ஆயுதமாய் இருப்பதை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இது இம்மாகாண மாத்திரமல்லாமல் மற்ற சில மாகாணங்களிலும் பரவி இருக்கிறது.

மேற்கண்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆரம்பித்த காலத்தில் காங்கிரசுக்குத் தென்னிந்தியாவில் அடியோடு செல்வாக்கற்றுப் போய், செல்வமும், பொறுப்பும் வரி செலுத்தும் தன்மையும் உள்ள பார்ப்பனரல்லாதார் 100க்கு 99 பேர்கள் காங்கிரசை விட்டு விலகி மேல் கண்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் ஜஸ்டிஸ் இயக்கத்தில் சேர்ந்து இருந்தார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பனர்கள் ஒரு யுக்தி செய்து பார்ப்பனரல்லாதார் சங்கமென்றே சென்னை மாகாணச் சங்கமென்ற ஒன்றை ஆரம்பித்துச் சில புதுவேகமுள்ள வாலிபர்களையும் பொதுநல சேவையில் ஈடுபட்டு முன்னுக்கு வரவேண்டிய சில பார்ப்பனரல்லாதாரையும் அதில் பிணைத்து,

“”தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பது சர்க்காருடைய கட்சி”யென்றும், “”பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக என்று தெ.இ.ந.உ. சங்கத்தார் என்னும் ஜஸ்டிஸ் கட்சியார் கேட்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ்காரர்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்றும் சொல்லி மற்றும் சில பார்ப்பனரல்லாதாரையும் வேறுபல வழிகளில் ஆசைக்காட்டி கைவசப்படுத்தி ஜஸ்டிஸ் கட்சியை எதிர்க்கவும், அதன் தலைவர்களைத் தூற்றவும் செய்து வந்தார்கள்.

நாளாவட்டத்தில் காங்கிரஸ் பார்ப்பனர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை மெல்ல மெல்ல கை நழுவவிட்டதோடு மாத்திரமல்லாமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத் துரோகமானதென்று சொல்லி அதற்கு விரோதமாயும் வேலை செய்ததோடு ஜஸ்டிஸ் கட்சியை அழிப்பதே காங்கிரசின் முக்கிய கொள்கை என்கின்ற அளவுக்கு வந்து விட்டார்கள். இன்றும் அதே பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த மத்தியில் ஜஸ்டிஸ் கட்சி பொது ஜனங்களின் ஆதரவினால் சட்டசபையிலும், அரசாங்க நிர்வாக சபையிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும், பார்ப்பனர்களுக்குச் சமமாகவும், சிலவற்றில் மேலாகவும் ஆதிக்கம் பெற்றுவிட்டதால் தேர்தல் போட்டிகளில் தோல்வியுற்ற பார்ப்பனரல்லாதாரும், அதிகாரங்களிலும், பதவிகளிலும் ஏமாற்றமடைந்த பார்ப்பனரல்லாதாரும், ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிராக நின்றாவது ஸ்தானமும், பதவியும் பெற வேண்டியவர்களாகி ஆதியில் காங்கிரசை பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனம் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து ஜஸ்டிஸ் கட்சியில் வாழ்ந்தவர்களிலேயே பலர் திரும்பவும் காங்கிரசினுடைய தயவு பெற வேண்டியவர்களாகி காங்கிரசோடு கலக்க வேண்டியவர்களானார்கள். இதெல்லாம் பழங்கதை என்றும் யாவரும் அறிந்ததென்றும் வைத்துக் கொள்வோம்.

எப்படி இருந்த போதிலும் இன்றைய தினம் காங்கிரசிலுள்ள பார்ப்பனரல்லாதார்களில் 100க்கு 99 பேர்கள் யோக்கியமாயும், நாணையமாயும் ஒரு விஷயத்தை மாத்திரம் வெளிப்படையாய் ஒப்புக் கொள்ளுகிறார்கள்.

அதாவது காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனமாகத்தான் இருக்கிறது என்பதையும், பிரத்தியக்ஷத்திலும், அனுபவத்திலும் காங்கிரஸ் ஸ்தாபனங்களில் பார்ப்பனர்களே முக்கிய தலைவர்களாகவும், காசு பணம் உத்தியோக விஷயத்தில் ஆதிக்கக்காரர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும், தங்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்களே தவிர சந்தர்ப்பம் வரும்போது தாங்களே (பார்ப்பனர்களே) புகுந்து கொள்ளு கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்வதோடு தோழர் ஈ.வெ. ராமசாமி போன்றவர்கள் காங்கிரசுக்கு வந்தால் தாங்கள் எல்லாரும் கூடுமான முயற்சி செய்து காங்கிரசில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து அதை பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்துக்கு திருப்பித் தருவதாகவும் இப்போது தங்களுக்கு போதுமான பலமில்லாததால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் தாராளமாய் சொல்லுகிறார்கள்.

இப்படிச் சொல்லும் காரணம் தங்களுக்குத் தேசபக்தி இருப்பதாயும் ஜஸ்டிஸ் கட்சிக்கு அதில்லை என்பதுமாம். எந்தக் காரணத்தாலேயோ இன்று காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதில் காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் முதல் எந்தக் கட்சியிலும் சேராத பார்ப்பனரல்லாதார் உள்பட யாருக்கும் எவ்வித ஆட்சேபணையும் இல்லை.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையைப் பொறுத்த வரையிலும்கூட எல்லாப் பார்ப்பனர்களும் விரோதமாய் இருந்தாலும் “”கொஞ்ச காலத்துக்கு ஆவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியதுதான்” என்று காங்கிரசிலுள்ள எல்லா பார்ப்பனரல்லாதாருமே ஒரு மனதாய் ஒப்புக் கொள்ளுகிறார்கள்.

இப்படிச் சொல்லும் பார்ப்பனரல்லாதார்களை “”ஜஸ்டிஸ் கட்சியார் எந்த விதத்தில் தேசாபிமானமில்லாதவர்கள்” என்று கேட்டால் அதற்குத் தாங்களாகவே தங்கள் அபிப்பிராயப்படியே பதில் சொல்ல இன்று ஒருவருக்குக்கூட யோக்கியதை இல்லாமல் இருந்து வருகிறது.

ஏனெனில், நாம் முன் குறிப்பிட்டதுபோல் இன்று காங்கிரசிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் ஒரு காலத்தில் ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கைகளை ஒப்புக் கொண்டு அக்கட்சியில் இருந்து விட்டு வந்தவர்களாதலால் இப்போது அந்தக் கொள்கைகளைக் குற்றம் சொல்ல அவர்களது மனச்சாட்சி இடம் தரவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் “”பொப்பிலி ராஜாவுக்குக் கண்ணும் மூளையும் பெரிது” என்றும் “”ராமசாமி முதலியாருக்கு யுக்தியும், தந்திரமும் அதிகம்” என்றும் “”குமாரசாமி ரெட்டியார் சம்பளம் அதிகம் வாங்குகிறார்” என்றும் “”ஷண்முகம் செட்டியார் சீக்கிரத்தில் முன்னுக்கு வந்து விட்டார்” என்றும் இதுபோல் தனிப்பட்ட நபர்களிடத்தில் அசூயை கொண்டு பொறாமையில் அர்த்தமற்ற குற்றம் சொல்லுவதைத் தவிர மற்றபடி காங்கிரஸ் கொள்கைக்கும், திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும், ஜஸ்டிஸ் கொள்கைக்கும், திட்டத்துக்கும், நடவடிக்கைக்கும் இன்ன வித்தியாசம் என்று யாருமே சொல்ல வரவில்லை.

ஏதாவது ஒரு குற்றத்தை ஜஸ்டிஸ் கட்சி மீதோ, அதன் தலைவர்கள் மீதோ அவசியம் சொல்லித் தீர வேண்டியதுதான எலக்ஷன் சமயத்தில்கூட காங்கிரஸ்காரர்கள் காந்தியார் முதல் சத்தியமூர்த்தி வரை என்ன சொன்னார்கள் என்று பார்த்தால் ஜஸ்டிஸார் “”பெண்ணின் தாலியை அறுத்தார்கள்” என்றும், “”நிலவரியைக் குறைக்கவில்லை” என்றும் “”கைதிக்கு மோர் கொடுக்கவில்லை” என்றும், “”போலீசார்களால் தொண்டர்கள் அடிக்கப் பட்டார்கள்” என்றும் தான் சொன்னார்கள்.

இந்தக் காரியங்களுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என்பது அரசியல் அ.ஆ.இ. தெரிந்த எவருக்கும் தெரிந்த காரியமானாலும் “”ஓட்டர்கள் முட்டாள்கள், பெரும்பாலோர் முழு மூடர்கள், மற்றும் சிலர் இனத்துரோகிகள், ஆதலால் நாம் சொல்லுவதை நம்புவார்கள்  ஒப்புக் கொள்ளுவார்கள்” என்கின்ற தைரியத்தின் மீது அயோக்கியத்தனமாய் பொருத்தமில்லாததாய் உள்ளவைகளைத்தான் சொன்னார்களே தவிர மற்றபடி வேறு ஒன்றும் சொல்லவில்லை; சொல்ல முடியவும் இல்லை.

கூட்டங்களில் இந்த போக்கிரித்தனமான விஷமப் பிரசாரத்தைப் பற்றி மறுத்து கேள்விகள் கேட்க ஆரம்பித்த காலத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரி போன்றவர்களும், காந்தியாரும் என்ன சொன்னார்கள் என்பது யாரும் அறியாததல்ல.

அவர்கள் சொன்னதாவது,

“”இன்று எலக்ஷனில் காங்கிரஸ்காரர்கள் போட்டி போடுவதானது எந்தக் கட்சியாரோடும், தகராறு செய்வதற்காகவோ எந்தக் கட்சியாரையாவது குற்றம் கூறித் தோற்கடிப்பதற்காகவோ அல்ல” என்றும்,

“”சர்க்காருக்கும், காங்கிரசுக்கும் உள்ள தகராறுக்காகவேதான் இன்று எலக்ஷனில் காங்கிரஸ்காரர்கள் பிரவேசிக்கிறார்களே ஒழிய வேறு காரணத்தால் அல்ல” என்றும் சொன்னார்கள்.

இப்போது சட்டசபைக்குப் போன பிறகு சர்க்காருடன் சீர்திருத்த விஷயமாய்ச் செய்யப் போவதாகச் சொன்ன தகராரை  போரை அடியோடு கட்டி வைத்து விட்டு சர்க்கார் ஏணி என்றால் இவர்கள் கோணி என்று சொல்லிக் கொண்டு எம்.எல்.ஏ. என்ற பட்டத்துடன் இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலைமையில் தான் இங்கு ஸ்தல ஸ்தாபன சம்பந்தமான தேர்தல் விஷயத்தில் இன்று காங்கிரஸ்காரர்கள் பிரவேசித்து அவற்றைக் கைப்பற்ற வேண்டும் என்று முயற்சிப்பதோடு அதற்கு ஆக எவ்வளவோ சூட்சி செய்த போதிலும் தேர்தல்களில் பிரவேசிப்பதற்கு காங்கிரஸ்காரர்கள் சொல்லும் காரணம் மிகவும் விசித்திரமானது.

அதாவது “”ஸ்தல ஸ்தாபனங்கள் நேர் கேடாகவும், கண்ட்ராக்டர்கள் ராஜ்யமாகவும் நடைபெறுவதால் அவற்றைக் கைப்பற்றி நாங்கள் யோக்கியமாக நடத்தப் போகிறோம்” என்பதாகும். இன்றைய ஸ்தல ஸ்தாபனங்களில் ஜஸ்டிஸ்காரர்களும் ஒரு கட்சியும் இல்லாதவர்களும் தான் அதிகமாய் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பொது ஜனங்களின் ஓட்டுகளின் மீது வந்தவர்களே ஒழிய எல்லோர் கண்களிலும் மிளகாய்ப் பொடி தூவி விட்டோ ஜஸ்டிஸ் கட்சி நியமனத்தாலோ வந்தவர் அல்ல.

ஆகவே இவர்களால் “”நேர்கேடாய் கண்ட்ராக்டர்கள் ராஜ்யமாய் ஆட்சி புரியப்படுகிறது” என்று சொல்லப்படுமானால் ஓட்டர்கள் பொறுப்பில்லாமல், நாணயமில்லாமல் நேர் இல்லாமல் ஓட்டுச் செய்திருந்தால் ஒழிய மற்றபடி வேறு காரணங்களால் இவர்கள் ஸ்தானங்கள் பெற்று இருக்க முடியாது அல்லவா?

அப்படிப்பட்ட ஓட்டர்கள் தான் இன்று காங்கிரஸ்காரர்களுக்கும் ஓட்டுச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறார்களே ஒழிய வேறு புது ஓட்டர்கள் எந்தக் குயவன் சூளையில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்டு வந்துவிடவில்லை.

ஓட்டர்கள் மாத்திரம் பழய ஓட்டர்கள் என்பதில்லாமல் ஸ்தல ஸ்தாபன பதவிக்கு காங்கிரசால் நிறுத்தப்படப் போகிறவர்களும் பெரும்பாலும் பழய ஆட்களாகத்தான் இருந்து வருகிறார்களே ஒழிய மற்றபடி புதிதாய் “”புடம் போட்டு சுத்தம் செய்யப்பட்டவர்கள் அல்ல.”

ஸ்தல ஸ்தாபன கட்டடங்கள், சிப்பந்திகள் ஆகியவர்களும் கக்கூஸ் எடுப்பவர்கள் முதல் கமிஷனர் வரை பழய ஆட்கள் தானே ஒழிய வேறில்லை.

ஸ்தல ஸ்தாபன சட்டமும், ஸ்தல ஸ்தாபன மந்திரியும், நிர்வாக அரசாங்கம் கவர்னர் முதலியனவர்களும் பழயவர்கள் தானே ஒழிய எதுவும் எந்த வண்ணானாலும் சலவை செய்யப்பட்டவைகள் அல்ல.

இந்த நிலையில் எந்த முறையில் எந்த ஆதாரத்தைக் கொண்டு காங்கிரஸ்காரர்கள் அதுவும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து அடிபட்டு ஓடி வந்த தோழர்கள் சி.ஆர்.ரெட்டி, சக்கரை செட்டி போன்றவர்களாய் இருந்து வரும் காங்கிரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களைப் பரிசுத்தப்படுத்தப் போகிறார்கள் என்று கேட்கின்றோம். இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.

இன்று இரண்டொரு இடங்களில் உள்ள ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கிரஸ்காரர்கள் என்னும் பெயரால் இரண்டொரு அங்கத்தினர்கள் இருந்து வருகிறார்கள் என்பது யாவரும் உணர்ந்ததாகும். ஆகவே அப்படிப்பட்ட அவர்களுடைய யோக்கியதைகள் இன்று எப்படி இருந்து வருகின்றது என்று பார்ப்போம்.

உதாரணமாக காங்கிரஸ்காரர் இருந்து வரும் சென்னை கோவை முதலிய நகரசபை ஸ்தாபனங்களை எடுத்துக் கொள்வோம்.

சென்னை நகரசபையிலுள்ள காங்கிரஸ்காரர்களில் மெஜாரிட்டி ஆட்கள் எப்படி ஜீவிக்கிறார்கள். அவர்கள் உள்ள கமிட்டிகளின் மூலம் அவர்களுக்கு வரும் வரும்படி எவ்வளவு? எந்தெந்த ஸ்டாண்டிங் கமிட்டியில் உள்ள காங்கிரஸ்காரர்களில் கண்ட்ராக்டர்கள் இடம் மாமூல் பெறாத கவுன்சிலர்களும், கண்ட்ராக்டில் பங்கு பெறாத கவுன்சிலர்களும் எத்தனை எத்தனை பேர்?

நகரசபைத் தலைவரிடத்தில் தினமானம், மாதமானம், வருஷமானம், சன்மானம் பெறாத அங்கத்தினர்கள் எவ்வளவு பேர்?

மற்றும் பொது ஜனங்களில் தனிப்பட்ட நபர்களின் சுயநலத்துக்காகக் கார்ப்பரேஷன் தீர்மானங்களை விற்று விலை பெறாதவர்கள் எத்தனை பேர்?

மற்றும் கார்ப்பரேஷனில் உத்தியோகங்களுக்குத் தங்களுடைய பந்துக்கள், சினேகிதர்கள், பணம் கொடுத்தவர்கள் ஆகியவர்களை சிபார்சு செய்து அதற்காகத் தலைவருக்கும், கமிஷனருக்கும் அடிமையாகி பலனும் பதமும் பெறாதவர்கள் எத்தனை பேர்? என்பவைகளைப் பற்றி பாலன்ஸ் ஷீட் எடுத்தால் யார் மீதியாவார்கள் என்று கேட்கின்றோம்.

ஸ்தல ஸ்தாபனங்களில் உள்ள சில காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய ஜீவனோபாயத்துக்குச் சரியான கணக்கோ, யோக்கியமான மார்க்கமோ காட்ட முடியுமா என்று கேட்கின்றோம்.

இனி அடுத்தாப்போல், கோவை காங்கிரஸ் அங்கத்தினர்களில் சிலரை எடுத்துக் கொள்வோம். இவர்களில் கண்ட்ராக்டர்களிடம் பங்கு வாங்குவோர் எத்தனைபேர்? கண்ட்ராக்ட் வாங்கித் தருவதாய் சன்மானம் வாங்கியவர்கள் எத்தனை பேர்? உத்தியோகம் வாங்கித் தருவதாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு உத்தியோகம் வாங்கித் தராமலும், அட்வான்சை திருப்பிக் கொடுக்காமலும் தெருவில் சிரிக்கப்படுபவர்கள் எத்தனை பேர்? உபாத்தியாயப் பெண்களிடத்தில் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டு வெஞ்சாமரம் வீசப்பட்டவர்கள் எத்தனை பேர்? போக்குவரத்து இடத்தில் போக்கிரித்தனமாய் நடந்து மானங்கெட்டு மதிப்பிழந்து திரிபவர்கள் எத்தனை பேர்? தங்கள் இனத்தில் கமிஷனர்கள் வந்து விட்டார்கள் என்கின்ற சலுகையால் சிப்பந்திகளை மிரட்டி எச்சில் பொறுக்கினவர்கள் எத்தனை பேர்? தங்கள் இனக் கவுன்சிலர்களைத் தருவிக்க விஷமம் செய்தவர்கள் எத்தனை பேர்? இவற்றையெல்லாம் ஒரு தனிக் கமிட்டிப் போட்டு அதற்குக் காங்கிரஸ்காரர்களிலேயே மெஜாரிட்டி மெம்பர்கள் நியமித்து ஒரு வெளிப்படையான விசாரணை வைத்து அறிக்கை வெளியிட காங்கிரஸ்காரர்களுக்குத் தைரியமிருந்தால் இன்னும் அனேக விஷயம் வெளியாகுமென்றே உறுதியாய்ச் சொல்லுவோம்.

சென்னைக் கார்ப்பரேஷன் தலைவர் குமாரராஜா ஆவார். அவருடைய பிரதம சிஷ்யர்கள் அல்லாவிட்டாலும் நண்பராகவாவது மதிக்கப்பட வேண்டியவர்கள் தோழர்கள் தாமோதரம் நாயுடு,  சக்கரை  செட்டியார்  போன்றவர்கள்.  தலைவர்களுட்பட இவர்கள் இதுவரை ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்கள். ஆகவே சென்னைக் கார்ப்பரேஷனைப் புனிதப்படுத்த இந்த நபர்களையே காங்கிரசில்  சேர்த்துக் கொண்டு அவர்களையே பழயபடியே தலைவராகவும், அங்கத்தினர்களாகவும் வைத்துக் கொண்டு நிர்வாகம் நடத்தினால் “”நாணயக் குறைவாய்”, “”நேர்மை அற்றதாய்” இருந்து வந்த சென்னைக் கார்ப்பரேஷன் எப்படி புனிதத் தன்மை அடைந்துவிடும் என்று கேட்கின்றோம்.

ஆகவே இன்று காங்கிரஸ்காரர்கள்  ஸ்தல ஸ்தாபனங்களைப் பரிசுத்தப்படுத்துகிறோம் என்று சொல்லுவது முதல் நெம்பர் வடிகட்டின அயோக்கியத்தனமானதும் இன்று ஆதிக்கத்திலிருப்பவர்களைத் தங்கள் அடிமைகளாக்கிப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு மார்க்கம் செய்து கொள்ளலாம் என்கின்ற சூட்சித்தனமானதுமான காரியமே ஒழிய வேறில்லை.

மற்றும் யார் நிற்பதானாலும் சரி, காங்கிரசின் பேரால் நிற்பதாய் ஒப்புக் கொண்டு காங்கிரசுக்கு 100 ரூபாயோ 200 ரூபாயோ கொடுத்துவிட்டால் அவர்களுக்குப் போட்டி போடாமல் விட்டுவிடுகிறோம் என்று சொல்லி மிரட்டி பணம் பறிப்பது ஒரு வழிப்பறிக் கொள்ளைக்கு ஒப்பான போக்கடாத்தனமே தவிர வேறில்லை.

ஆகவே காங்கிரசின் பேரால் எவ்வளவு கேவலமான காரியம் நடப்பதானாலும் தேர்தல்களின் பேரால் தேர்தலுக்கு நிற்பவர்கள் தங்களுக்கு எப்படியாவது ஸ்தானம் கிடைத்தால் போதும் என்று எவ்வளவு கீழ்மையாய் நடந்து கொள்வதானாலும் ஓட்டர்கள் தங்களுக்குச் சிறிதாவது புத்தி இருந்தால் காங்கிரஸ் பித்தலாட்டங்களுக்கும் இப்படிப்பட்ட வழிப்பறிக் கொள்ளைக்கும் இடம் கொடுக்காமல் தங்கள் சொந்தப் புத்திப்படி சுயமரியாதையுடன் நடந்து கொள்வார்களாக.

குடி அரசு  தலையங்கம்  22.09.1935

You may also like...