சிவில் ஜெயில்

 

கடன்காரர்கள் கடன் கட்ட முடியாமல் போவதற்கு ஆக அவர்களைச் சிறைப்படுத்துவது என்னும் வழக்கம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது ஒழிக்கப்பட்டு விடவேண்டும் என்றும் பல தடவை எழுதியும், பேசியும் வந்திருக்கிறோம்.

சிவில் ஜெயில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆகவே தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களும் முக்கியமாய் தான் சிவில் ஜெயில் செல்வதாய்ச் சொல்லி வேலூர் சிவில் ஜெயிலுக்குச் சென்று சில காலம் ஜெயிலில் இருந்துவிட்டும் வந்தார். (அக்கடன் பிறகு தீர்க்கப்பட்டு விட்டது)

ஒரு மனிதன் கடன்காரனாகிவிட்டால் அதனால் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்கள் தவிர அவனைக் குற்றவாளிபோல் மதித்துச் சிறையில் அடைத்து வைப்பது என்பது முதலாளித்துவத்துக்கு அனுகூலமான காரியமே ஒழிய, சாதாரண ஜனங்கள், ஏழைகள் ஆகியவர்களுக்கு சிறிதும் அனுகூலமான காரியமாகாது.

ஒரு நாணையமான  யோக்கியமான  சத்தியவானான மனிதன் கடன்காரனாகிவிடலாம். கடன்காரனாவதற்கு துஷ்டத்தனமோ குற்றமானதனமோ எதுவும் வேண்டியதில்லை. மேலும்  ஒருவன் கெட்டவனாகவோ, அயோக்கியனாகவோ இல்லாமலிருப்பதற்கு ஆகவே கடன்காரன் ஆனாலும் ஆகலாம். ஏனெனில் பணக்காரர்கள், பணம் சம்பாதிப்பவர்கள், பணம் சம்பாதித்து லேவாதேவி செய்பவர்கள் ஆகியவர்களது நடத்தையும் நாணயத்தையும், குணத்தையும் பார்த்தால் 100க்கு 99 கடன்காரர்கள் யோக்கியர்களாக இருந்ததால்தான் கடன்காரர்களாக வேண்டியவர்களானார்கள் என்று கருத வேண்டி இருக்கிறது.

ஆகவே அப்படிப்பட்டவர்களைச் சிறையில் வைத்து கஷ்டப்படுத்தி அவர்களுக்கு அவமானம் உண்டாக்குவதோடு அவர்களது பெண்டு பிள்ளைகளையும் பரிதபிக்கச் செய்வது என்றால் அதை எந்தக் காட்டுராஜா ஆட்சி மக்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அதனாலேயே மேல்நாடுகளில் அனேக ராஜ்ஜியங்களில் இம்முறை எடுக்கப்பட்டு விட்டது. நம் நாட்டிலும் பல அறிஞர்கள் இந்த முறையை ஆ÷க்ஷபித்துக் கண்டித்து வந்திருக்கிறார்கள்.

அதோடு நமது அரசாங்க ஆட்சிக்கும் இது ஒரு பெரிய மாசாக இருந்து வந்ததாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே அப்படிப்பட்ட காரியமானது இப்போது அடியோடு ஒழிக்கப்பட நமது அரசாங்கத்தாரால் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு அது இன்று செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சீக்கிரத்தில் இந்திய சட்டசபைக்கு வந்து நிறைவேற்றப்பட்டு சட்டமாகலாம் என்கின்ற நம்பிக்கை இருந்து வருகின்றது.

வெகுகாலத்துக்கு முன்பாகவே இச்சட்டம் வந்திருக்குமானாலும் பொதுஜன அபிப்பிராயம் மாகாண அரசாங்க அபிப்பிராயம் ஆகியவை தெரிய வேண்டும் என்கின்ற காரணத்துக்காக இரண்டு வருஷ காலமாய் தவக்கத்தில் இருந்து வந்து இப்போது சட்டசபைக்கு வருகிறது.

இதில் ஒரு விஷயம் நாம் இப்போது தெரிவித்து விடுகிறோம். அதாவது இன்று இந்திய சட்டசபையில் உள்ள சட்டசபை அங்கத்தினர்கள் பலர் பணக்காரர்களாகவும், பலர் பணக்காரர்கள் கூலிகளாகவும், ஏஜண்டுகளாகவும் இருக்கிறார்கள்.

ஏனென்றால் 20 ஆயிரம், 30 ஆயிரம் செலவு செய்தால்தான் இன்று எவரும் இந்திய சட்டசபைக்குப் போகலாம்.  பணம் இல்லாவிட்டால் வேறு எந்தப் பணக்காரனாவது பணமும் மோட்டார் காரும், பெட்றோல் எண்ணையும் கொடுத்துத் தன்னுடைய கூலிகளை விட்டு ஓட்டு வாங்கிக் கொடுத்தால் தான் சட்டசபைக்குப் போகலாம். இரண்டும் இல்லாத ஒரு சுதந்திரவாதி சட்டசபைக்குப் போவது என்பது மோக்ஷலோகத்துக்குப் போவது என்பது எப்படியோ அதுபோல்தான். ஆகவே அப்படிப்பட்ட பணக்காரர்களாயும், அவர்களுடைய கூலிகளாயும் உள்ளவர்கள் பலர் இருந்தால் சட்டசபையில் நல்ல முறையில் சூட்சி இல்லாமல் இச்சட்டம் நிறைவேறுமா என்று பயப்பட வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லி விடுகிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  22.09.1935

 

You may also like...