100க்கு 50 கூட பார்ப்பனரல்லாதார் கூடாதா?

 

திருநெல்வேலி ஹிந்து காலேஜ்க்கு மதுரைத் தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் ஒரு லக்ஷ ரூபாய் தர்மமாகக் கொடுக்க முன் வந்து இருக்கிறார்.

இது அந்தக் காலேஜ் சாகுந் தருவாயில் இருப்பதைக் காப்பாற்ற இந்தச் சமயம் உயிர்ப் பிச்சை கொடுப்பதுபோல் ஆகும்.

இந்தப் பேருதவிக்கு தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் ஒரே ஒரு தயவைத்தான் நிர்வாகிகள் இடமிருந்து மாத்திரம் எதிர்பார்க்கிறார். அதாவது பள்ளி உபாத்தியாயர்களில் பகுதிப் பேர் பிரின்சுபால் உள்பட பார்ப்பனரல்லாதாராய் இருக்க வேண்டும் என்பதே.

இதை தேசீயப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு வாழும் பத்திரிகைகள் ஆ÷க்ஷபிக்கின்றன. ஆனால் இவை மனப்பூர்வமாக ஆட்சேபிப்பதாக நாம் நம்பவில்லை. பார்ப்பன ஆதிக்கத்துக்கு பயந்தே ஆட்சேபிக்கின்றன போலும்.

தோழர்கள் சிவசாமி அய்யர், வி. கிருஷ்ணசாமி அய்யர் முதலிய பல பார்ப்பனர்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் எத்தனை பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் இருக்கிறார்கள் என்பது இந்த பத்திரிகைக்காரர்களுக்கு தெரியாதா என்று கேட்கின்றோம்.

யாதொரு காரணமும் இல்லாமல் சிவசாமி அய்யர் பள்ளிக்கூடத்தி லிருந்து குஞ்சிதம், பி.ஏ., எல்.டி. அம்மாளை வீட்டுக்குப் போகும்படி சொல்லி விடவில்லையா? என்று கேட்கின்றோம். அவர்கள் ஒரு வருஷ காலமாய் உத்தியோகம் இல்லாமல் திண்டாட வில்லையா என்று கேட்கின்றோம். இன்று பள்ளிக்கூட உபாத்தியாயர்களில் 100க்கு 10 பேராவது தாழ்த்தப்பட்ட வகுப்பார் முஸ்லீம்கள் உள்பட பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்களாய் இருக்கிறார்களா? என்று கேட்கின்றோம். இன்று எத்தனை பார்ப்பனர் அல்லாத உபாத்தியார்கள் சாப்பாட்டுக்குத் திண்டாடு கிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாதா?

மற்றும் பார்ப்பனர்கள் நிர்வாகத்தில் இருக்கும் எந்தப் பள்ளிக் கூடத்திலாவது பார்ப்பனரல்லாத உபாத்தியார்களை வைத்திருக்கிறார்களா என்று கேட்கின்றோம்.

காலேஜ்களில் வாத்தியார் வேலை என்பது இந்தக் காலத்தில் வருஷத்தில் 125 நாள்கள் தினம் 5 மணி நேரம் “”பாடு”பட்டுவிட்டு யாதொரு பொருப்பும் இல்லாமல் பாப்பாத்தி அம்மா மாடு வந்ததா? என்று கேட்டுவிட்டுப் போவது போல் ஆஜர் கைராஜர் பட்டியலில் கையெழுத்திட்டு மாதம் 70, 80, 100, 150, 300, 500 ரூபா சம்பளம் வாங்கும் வேலை அல்லாமல் பிள்ளைகள் படிப்புக்கு ஏதாவது பொருப்பு உண்டா? 100க்கு 5 பிள்ளைகளாவது சர்க்கார் பரீட்சையில் பாசாக்க பொருப்பு உண்டா?

இந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள் பெற்றோர்கள் 3ல் 2 பாகம் பேர் பார்ப்பனரல்லாதார்கள் நெற்றி வேர்வை நீராகக் கொட்ட பாடுபட்ட பணத்தைக் கொடுத்து தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறவர்கள் அல்லவா என்று கேட்கின்றோம். பிள்ளைகள் படிக்க வைக்கப்படுவது அறிவுக்கும் சுதந்திரத்துக்கும் அஸ்திவாரத்துக்குத் தானே ஒழிய அடிமைக்கும் மூடப் பழக்கத்துக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா?

பார்ப்பனன் ஒருவன் தன்னை பிராமணர் என்று சொல்லிக் கொள்ள உரிமை வேண்டியவனாய் இருந்தால் அவன் சாஸ்திரப்படி பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தால் சண்டாளனாய் விடுகிறான் என்ற முடிவைக் கொண்டவனாகவே இருப்பான். அதுவே இந்து மத சாஸ்திர முடிவு. அப்படிப்பட்ட பார்ப்பனர் பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலைக்கு வருகிறானென்றால் வயிற்றுக் கொடுமைக்காக பணம் சம்பாதிக்கவும் சாஸ்திரப்படி நடப்பதின் மூலம் உண்மையாக  பாடுபடாமல் ஏமாற்றி நேரம் போக்கவுமே ஒழிய யோக்கியமான பார்ப்பனர் எவனும் படித்துக் கொடுக்கவே கூடாது. படித்துக் கொடுக்கவும் மாட்டான்.

இப்படி இருக்கும்போது 100க்கு 50 பேர்களாவது பார்ப்பனர் அல்லாத உபாத்தியாராய் இருக்க வேண்டும் என்றால் இதில் யாருக்கு எங்கே மாட்டிக் கொண்டது என்பது நமக்கு விளங்கவில்லை.

விருதுநகர் மகாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்திரவை ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் அமுலில் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்ததும், அதை ஸ்தல ஸ்தாபனம் மந்திரி ஒப்புக் கொண்டதும், அந்தப்படி ஸ்தல ஸ்தாபனங்களுக்கு உத்திரவு போட்டிருப்பது பற்றி இந்த தேசீயப் பத்திரிகைகள் ஏன் ஆட்சேபிக்கவில்லை என்று கேட்கின்றோம்.

ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாரி உத்திரவு என்றால் அது ஸ்தல ஸ்தாபன பள்ளிக் கூடங்கள், ஹைஸ்கூல்கள், காலேஜுகள் எல்லாம் சேர்ந்து தானே ஒழிய இவைகள் நீங்கிய மற்றவைகள் என்றல்ல. ஆகையால் பள்ளிக் கூட உபாத்தியாயர்கள் மாத்திரமல்லாமல் பள்ளிக்கூடப் பிள்ளைகள்கூட வகுப்புவாரி எண்ணிக்கைப்படிதான் படிக்க வைக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயம். அப்பொழுதுதான் கல்வியில் சமதர்மம் வழங்கியதாகும்.

விருதுநகர் மகாநாட்டில் ஸ்தல ஸ்தாபன பள்ளிக் கூடங்கள் தவிர சர்க்காரால் அனுமதிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கும், சர்க்கார் உதவித் தொகை பெரும் பள்ளிக் கூடங்களுக்கும் வகுப்புவாரி கிரமப்படி உபாத்தியாயர்கள் போடப்பட வேண்டும் என்றும் அந்தப்படி போடப்படாத பள்ளிக்கூடங்களுக்கு பொது ஜனங்கள் வரியில் இருந்து கிராண்டுகள் கொடுக்கக் கூடாது என்றும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கல்வி மந்திரியும், மகாநாட்டுத் தலைவரும் தற்சமயத்துக்கு நிருத்தி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் பின் வாப்பீஸ் வாங்கிக் கொள்ளப்பட்டது.

இவ்விஷயம் விருதுநகர் நடவடிக்கையிலும் ஈ.வெ.ரா. விருதுநகர் உபன்யாசத்திலும் பார்க்கலாம்.

பார்ப்பனரல்லாதார் கட்சி  ஜஸ்டிஸ் கட்சி என்பது உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியமான அவசியமே சகல துறையிலும் வகுப்பு உரிமையும் வகுப்பு நிதியும் வகுப்பு பிரதிநிதித்துவமும் வழங்க வேண்டும் என்பதேயாகும்.

அந்தக் கொள்கை ஜீவாதாரமானதாக இல்லையானால் ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்து போவதில் நமக்கு கவலை யில்லை.

இதற்கு ஆக தான் அக்கட்சியை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டும், கூலி வாங்கிக் கொண்டும் பிழைக்கும் ஆளுகளாகிய காங்கிரஸ்காரர்களுடனும், தேசீயவாதிகளுடனும் தென் இந்திய பார்ப்பனர்கள் உடனும் இந்த 12 வருஷ காலமாய் தோழர் ஈ.வெ.ரா.வும் சுயமரியாதை இயக்கமும் போர் புரிந்து வந்தது. இனியும் போர் புரிவதற்கும் முக்கிய காரணமுமாகும்.

இந்தப்படி போர் புரிந்தே தான் கடைசியாக ஒரு அளவுக்கு வெற்றியும் பெற்று தீர்ந்தது.

இன்றும் காங்கிரசுக்கு தென்னாட்டில் உள்ள வேலையும் இந்தியாவில் அது உயிருடன் இருப்பதற்கு அந்தரங்க காரணமும், அது அதி தீவிர கொள்கை வேஷம் போட வேண்டிய அவசியமும் இந்த வகுப்புவாரி உரிமையை ஒழித்து பார்ப்பன சர்வாதிகார ஏகபோக ஆதிக்கம் இருக்கச் செய்ய வேண்டும் என்கின்ற ஒரே ஒரு எண்ணமல்லாமல் வேறு ஒன்றுமே இல்லை என்று எங்கிருந்து வேண்டுமானாலும் கூறுவோம்.

சர்க்காருடன் “”ஒத்துழைப்பதோ” மந்திரிகளுடன் “”குலாவுவதோ” “”ஆளுவோரிடம் சரணாகதி அடைவதோ” என்பனவாகியவைகள் எல்லாம் இந்த வகுப்புவாரி உரிமையை சரிவர நடத்தி வைக்கவும் இதன் எதிரிகளின் சூட்சிகளிலிருந்து தப்புவித்து அதை நிலை நிறுத்தவும் முக்கிய கருத்துக் கொண்டே ஒழிய வேறில்லை.

ஏனெனில் வகுப்பு நியாயத்தையோ சமதர்ம மார்க்கமாகவும், பொதுவுடமைக்கு அஸ்திவாரமாகவும் கொண்டு இருக்கிறோம்.

ஆகையால் தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் இந்த நிபந்தனையுடன் தனது ஒரு லட்ச ரூபாயை செலவிடுவது அண்ணாமலை சர்வ கலா சாலையார் 30 லட்ச ரூபாய் செலவிட்டதற்கு எத்தனை பங்கு மேலான பிரயோஜனமுள்ள செலவாகும் என்று சொல்லுவதோடு பணம் படைத்த மற்ற பார்ப்பனரல்லாத செல்வவான்களுக்கும் திரவியம் பிள்ளை புத்தியில் 16ல் ஒரு பங்காவது வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  28.04.1935

You may also like...