இந்தியாவைப் பற்றி பிரசாரம்

 

அமெரிக்காவில் 15 வருஷங்கள் இருந்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பியிருக்கும் ஆசிரியர் டாக்டர் ஆங்கில்ஸேரியா இந்தியாவைப் பற்றி அமெரிக்காவில் படங்கள், நாடகங்கள், ரேடியோ, பொதுக் கூட்டம், பத்திரிகைக் கட்டுரைகள் முதலியவைகளின் மூலம் செய்யப்படும் பிரசாரத்தைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம் வருமாறு@

“”இந்தியா பேசுகிறது” என்ற படம் 1933ம் வருஷம் மார்ச், ஏப்ரல் மாத வாக்கில் தயாரிக்கப்பட்டது. நானும் எனது நண்பர்களும் அதைப் பார்த்தோம். அமெரிக்க ஜனங்கள் இந்தியாவைப் பற்றி இழிவான அபிப்பிராயம் கொள்வதற்காகவே இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் அபிப்பிராயப்பட்டோம். உடனே நகரசபைக்குப் புகார் செய்து கொண்டோம். ஆனால் படத்தைத் தடை செய்யுமுன் ஒரு வாரம் காட்டப்பட்டுவிட்டது. வேண்டிய தீங்கு மிழைத்துவிட்டது.

ஆகையால் இந்தப் படத்தை நான் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மற்றொரு வாரத்திற்குக் காண்பித்து காட்சியின் முடிவிலும் படம் எவ்வளவு பிற்போக்கானதென்பதைப் பற்றி ஒரு பிரசங்கம் செய்தேன். படம் தயாரித்தவர்கள் இந்திய விஷயங்களைப் பொய்ப் பிரசாரம் செய்திருக்கின்றனர் என்று நான் ரூபிப்பதாகச் சொல்லி அவர்களை ஒரு விவாதத்திற்கும் அழைத்தேன். ஆனால் அவர்கள் விவாதத்திற்கு வர மறுத்து விட்டனர். அமெரிக்கப் பத்திரிகைகள் என் விஷயத்தில் அதிக உதவி அளித்தன. 1929ம் வருஷத்தில் மிஸ். மேயோ எழுதிய “”இந்தியத் தாய்” என்ற புத்தகம் வெளி வந்தவுடன் அதையே படமாகத் தயாரிக்க வேண்டுமென்ற எண்ணம் படம் தயாரிப்போருக்கு இருந்தது. அதனால் தான் இந்தப் படமும் தயாரிக்கப்பட்டது.

“”இந்தியத் தாய்” என்ற புஸ்தகத்தை நாடக ரூபமாகவும் நடித்துக் காட்டவும் முயற்சி செய்தனர். பிரபல நாட்டியக்காரியான நாஸிமோவா என்பவர் இதில் நடித்தார். அவரை நானும் எனது நண்பர்களும் அணுகி உண்மையைச் சொல்லி நாடகத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம். நாடகத்தில் நடிப்பதே அவர் ஜீவனமாக விருப்பதாயும், ஆகையால் அதை விட முடியாதென்றும் அவர் கூறிவிட்டார். அமெரிக்க பிரிட்டிஷ் ஸ்தானீகரிடம் சென்று எனது குறைகளைத் தெரிவித்துக் கொண்டேன். ஆனால் இவ்விஷயம் கவனிக்கப்படவே யில்லை.

படம் எடுத்தவர் கூறும் விவரம்

இது சம்பந்தமாக பஞ்சாப் பிலிம் கம்பெனியின் காமிராமேன் தோழர் பிரஹ்லாத தத்தர் கூறியிருப்பதன் சாராம்சம் வருமாறு@ “”இந்தியா பேசுகிறது” என்ற படத்தின் சில பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. அவைகளை நான் தயாரித்தேன். நான் தயாரித்த பாகங்கள் வரையில் படத்தில் இந்தியாவை இகழ்ந்து பேசக்கூடிய காட்சிகள் ஒன்றும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பில் பல ஆச்சரியமான வேலைகள் செய்யலாம், ஜலத்திலிருக்கும் மீனை ஆகாயத்தில் பறப்பதுபோல் காட்டலாம். அதுபோல் இந்தப் படத்தையும் செய்து விட்டார்கள்  போலிருக்கின்றது.

என் நண்பர் சதீச் சந்திர சிங்கும் மற்றும் சில இந்தியர்களும் ஹோலிவுட்டில் வேலை செய்து கொண்டிருந்தனராம். நான் இந்தியாவில் படமெடுத்த காட்சிகளுடன் சில பொய்க் காட்சிகளைச் சேர்ப்பதற்கு முயற்சி செய்யப்பட்டவுடன் என் நண்பரும் மற்ற இந்தியர்களும் ஸ்டுடியோவிலிருந்து விலகிக் கொண்டு விட்டதாக சதீச் சந்திரசிங் என்னிடம் சொன்னார்.

தோழர் சத்தியமூர்த்தியின் அறிக்கை

தோழர் எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் இந்தப்பட சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கை யொன்றில் இந்தியர்களின் பழக்க வழக்கங்களைத் தப்பாக எடுத்துக் காட்டி இந்தியாவின் நற்பெயர் கெட்டுவிடும்படி செய்கின்றனரென்றும், தோழர் சுபாஷ் சந்திரபோஸ் இதைக் கவனிக்கும்படி கூறியிருப்பதாயும் இந்த விஷயத்திலாவது இந்தியா கவர்ன்மெண்ட் இந்தியா மந்திரியின் சம்மதமன்னியில் தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாமென்று நினைப்பதாயும்  இந்திய சட்டசபை படக்காட்சியினர் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமென்றும், தாமும் ஒத்துழைப்பதாயும் கூறியிருக்கிறார்.

(சு.மி.)

தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு

ஐயா! சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்களே. தங்களுக்கு ஏன் ஆத்திரம், இல்லாததையா அவர்கள் படத்தில் காட்டுகிறார்கள்? இந்தியாவில் உண்மையாகவே பரம்பரையாக இருந்துவரும் ஊழல்களைத் தானே காட்டுகிறார்கள்? அதை மூடி வைப்பதினால் என்ன பிரயோசனம்? இந்திய சமூகத்தில் ஊழல் நிறைந்திருக்கிறது என்பது அமெரிக்கா போன்ற அந்நிய தேசத்தார்க்குத் தெரிந்தால் அது இந்தியர்களுக்கு அவமானம் என்று நீங்கள் உண்மையாகவே நினைத்தால் அந்த ஊழல்களைப் போக்க ஏன் முயற்சியெடுத்துக் கொள்ளக்கூடாது? அப்படியில்லாமல், ஊழல்களை யெல்லாம் மதத்தின் பேராலும், வருணாச்சிரம தருமத்தின் பேராலும் பரிசுத்தமானவை என்று ஒப்புக் கொள்ளும் நீங்கள் ஏன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?

(பர்.)

குடி அரசு  பத்திராதிபர் குறிப்பு  24.03.1935

You may also like...