வினாக்கள்… விடைகள்…!
பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு, அரசு ஊழியர்கள் மீது கடந்தகால குற்றங்களுக்காக நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதேபோல் பதவியை இழந்த அமைச்சர்கள் மீது ஊழல் குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க முடியாது என்று தீர்ப்பு கூறி விட்டால், இந்தியாவில் அரசியல் சண்டைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்!
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் போன்ற முக்கிய பிரமுகர்களான ‘வி.அய்.பி.’களுக்கு வழங்கப்படும் சிறப்புப் பாதுகாப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும்.
– உள்துறை அமைச்சகம்.
அவர்கள் ‘வி.அய்.பி.’க்கள்தான் என்பதற்கு இருந்த ஒரே அடையாளத்தையும் இப்படிப் பறித்தால் எப்படி?
சீன எல்லைப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்க மத்திய அரசு திட்டம். – ‘தினமலர்’ செய்தி
அதேபோல், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா எல்லைப் பகுதியிலுள்ள மக்களுக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவது பற்றியும் பரிசிலிப்பது நல்லது!
பேய், பில்லி, சூன்யம் விரட்டுவதாகக் கூறி திருநெல்வேலி யில் ஒரு முதியவரின் தலையில் 3 அங்குல ஆழத்துக்கு ஆணி அடித்தார் மந்திரவாதி. – செய்தி
தலையில் கத்தி வைத்து மொட்டை அடிக்க அனுமதித்த கடவுள், சுத்தி வைத்து ஆணி அடிக்க அனுமதிக்க மாட்டாரா, என்று நினைத்து விட்டார் போலும்!
‘பட்ஜெட்’ விவரங்களை அச்சடிப்பதற்கு முன்பு நிதியமைச்சக ஊழியர்கள், அதிகாரிகள், அமைச்சர்களுக்கு சம்பிரதாயப்படி அல்வா தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. – செய்தி
அப்பாடா! இதுவரை புரியாமலே இருந்த ‘அல்வா தருவது’ என்ற வார்த்தைக்கான அர்த்தம், இப்போதுதான் புரிந்தது!
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளே எதிர் கட்சிகள் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. – செய்தி
அடுத்து தொடர்ந்து நடத்தவிருக்கும் ஒத்தி வைப்புகளுக்கு ஒத்திகைப் பார்த்திருக்கிறார்கள், மக்கள் பிரதிநிதிகள்! ஜனநாயகத்தை வாழவைக்க வேண்டுமே!
நாடு முழுதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 97 லட்சம் பேர் வேலை கேட்டுப் பதிவு செய்துள்ளனர். – மத்திய அமைச்சர் விஷ்ணு தியோசாய்
நல்ல சேதி! இப்படியே தொடர்ந்தால், வேலை வாய்ப்பு அலுவகங்கள் பெருகி, அங்கேயாவது வாய்ப்புகள் குவியும் ஒரு பொற்காலம் வரட்டும்!
பெரியார் முழக்கம் 10072014 இதழ்