‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு மறுப்பு (10) பெரியாருக்கு எதிரான ‘முனை மழுங்கும்’ ஆதாரங்கள்!
‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற தீர்மானத்தை முன் மொழிந்ததே மறைமலைஅடிகள் என்றும், பெரியார் பின் தொடர்ந்தார் என்றும் நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய ‘தி.மு.க.’ என்ற நூலிலிருந்து தோழர் பெ.மணியரசன் ஆதாரம் காட்டுகிறார். இது, திராவிடர் கழகத்துக்கும் தி.மு.க.வுக்கும் இடையே ‘முரண்பாடுகள்’ நிறைந்த காலகட்டத்தில் எழுதப் பட்ட நூல். இது குறித்து மேலும் சில வரலாற்றுத் தகவல்களைப் பார்ப்போம்:
1956-லிருந்து 1960 வரை நாவலர் இரா.நெடுஞ் செழியன் தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்தார். 1961இன் தொடக்கம் தி.மு.க.வில் ஈ.வெ.கி. சம்பத், கலைஞர் கருணாநிதி ஆகியோரிடையே தொடங்கிய உரசல் உச்சத்தை அடைந்த கால கட்டம். பொதுச் செயலாளராக வர எண்ணியிருந்த கலைஞர் வரக் கூடாது என்பதற்காகப் பதவியில் இருப்பவர்கள் (அப்போது கலைஞர் சட்டமன்ற உறுப்பினர்) பொதுச் செயலாளராகக் கூடாது என்ற தீர்மானத்தைத் தீர்மானக் குழு தலைவராக இருந்த ஈ.வெ.கி.சம்பத் கொண்டு வந்தார் (அப்போது ஈ.வெ.கி.சம்பத் நாடாளுமன்ற உறுப்பினர்).
எனவே சம்பத் மதியழகனை நிறுத்த, கலைஞர் சி.பி.சிற்றரசை நிறுத்த முடிவு செய்தனர். குழப்பம் வேண்டாமென அண்ணாவே (அவரும் சட்ட மன்ற உறுப்பினர் தான்) விதிகளைத் தளர்த்தி பொதுச் செயலாளர் ஆனார்.
இந்த உள்கட்சிப் பூசல் தொடங்கியிருந்த கால கட்டத்தில், தி.மு.க. தொடங்கப்பட்டபோது தி.மு.க.வுக்குப் போய், போன வேகத்தில் மீண்டும் பெரியாரிடம் வந்துவிட்ட புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் 15.03.1960இல் தனது ‘குயில்’ இதழில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
“பெரியார் கழகத்துக்கு சேர்த்து வைத்த பெருந் தொகையே, அவரைச் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அதை சுருட்டிக் கொண்டு ஓட சிந்திக்க வைக்கிறது”, என்றெல்லாம் எழுதிவிட்டு “இன்று பெரியாரின் நிலையை நோக்குவோர் கண்ணீர் விடுவார் என்பதில் அய்யமில்லை.” குருசாமி (குத்தூசி), பொதுச் செயலாளர், விடுதலைக்கு ஆசிரியர். அவர் அந்த இரண்டு ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு செய்யும் வேலை என்ன தெரியுமா? அண்ணாத்துரை வேலை செய்கிறார். கிளைக் கழகங்கள் எல்லாவற்றிலும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டார் காலிப் பசங்களை எல்லாம் கையில் பிடித்துக் கொண்டு இழிசெயல்கள் அனைத்தையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பத் அவர்கள், “கண்ணீர்த் துளிக் கட்சியை உதறித் தள்ளிவிட்டுத் திராவிடர் கழகத்தைச் சேர்ந்து அதைக் காப்பாற்றித் தர வேண்டும்” என்று எழுதினார்.
1961 தொடங்கிய சமயம், சம்பத்தை மறைமுக மாகத் தாக்கி, ‘திராவிட நாடு’ இதழில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற தொடர் ஒன்றை எழுதி னார். அதில் ‘புயலார்’ என்றொரு கதைமாந்தன். அது சம்பத்தைக் குறித்ததே.
அதற்கு எதிர்வினையாக ‘அண்ணாவின் மன்னர்’ என்ற தலைப்பில் சம்பத், கண்ணதாசனின் ‘தென்றல்’ ஏட்டில் தொடர் எழுதத் தொடங்கியிருந்தார். அது, செயற்குழுவில் சம்பத்தும், கண்ணதாசனும் தாக்கப் படும் நிலையை உருவாக்கியது. சம்பத் மறுநாள் தனது விலகல் கடிதத்தைக் கொடுத்து விட்டார். சம்பத்தின் அவைத் தலைவர் பதவிக்கு நாவலர் இரா.நெடுஞ் செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்கு முன்பாகவே, 1961 ஜனவரி 31ஆம் நாளிட்ட ‘குயில்’ ஏட்டில் புரட்சிக் கவிஞர் மீண்டும் ஒரு தலையங்கத்தை எழுதினார். அதில், “திரு. சம்பத்து தி.மு.க.வை விட்டு வந்து விடவில்லை; ஆனால், அவர் தி.மு.க.வில் இருக்கிறார் என்றும் சொல்லிவிட முடியாது. தி.மு.க.வில் உள்ள பொல்லாதவர்கள் எங்குமுள்ள பொல்லாதவர்கள் போல் அல்லர். கடைந்தெடுத்த பொல்லாதவர்கள். தாம் கொண்டிருந்த நல்ல கொள்கைகளை அவர்கள் தலைகீழாக மாற்றிக் கொண்டவர்கள். தமிழரின் தாலி அறுப்பதையே நோக்கமாகக் கொண்ட ஆச்சாரி யிடம் (இராஜாஜி) கூட்டு சேரவும் ஒப்பி விட்டார்கள். அந்த தி.மு.க. பசங்கள் எதிர்வரக் கண்டால் முடிச்சுமாறிப் பசங்கள் எதிர்வந்தது போல் தோன்றுகின்றது எனக்கு!” என்று எழுதினார்.
இறுதியில், 19.04.1961 அன்று சம்பத் ‘தமிழ்த் தேசியக் கட்சி’ என்ற புதிய கட்சியை அறிவித்து விட்டார். தனிக்கட்சி தொடங்கிய சம்பத் பெரியாரை நேரில் சந்தித்தார். “இவ்வளவு காலம் கழித்தாவது என் மகனுக்கு என் புத்தி வந்ததே என்று எண்ணி மகிழ்கிறேன்” என்றார் பெரியார்.
அப்போதுதான் சம்பத் வகித்து வந்த அவைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த
இரா. நெடுஞ்செழியன் பெரியாரின் கூற்றுக்குப் பதிலடியாக “அன்று திராவிடர் கழகம் பிரிவதற்குத் தந்தை காரணமாக இருந்தார். இன்று திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதற்குத் தமையன் காரணமாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். இது தான் 1961ன் தொடக்கக் காலாண்டில் நிலவி வந்த தமிழக அரசியல் சூழல்; தி.க.- தி.மு.க. உறவுச் சூழல்.
இப்படிப்பட்ட அரசியல் சூழல் நிலவிய 1961 ஜூலையில் நாவலர். இரா. நெடுஞ்செழியன் எழுதி வெளியிட்ட நூல் தான் தோழர் மணியரசன் குறிப்பிடும் ‘தி.மு.க.’ என்ற நூல். இந்த பகைமைச் சூழல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியது பெரியார் தான் என்பதைக்கூட நாவலர். இரா.நெடுஞ்செழியன் ஏற்றுக் கொள்ள முடியாமல் செய்திருக்குமோ? நாமறியோம்.
எப்படியிருப்பினும் நாவலர். இரா.நெடுஞ்செழி யனின் கூற்றை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.
“1938 ஆம் ஆண்டு மே திங்களில் சென்னை கடற்கரையில் கூட்டப்பெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் “தமிழ்நாடு தமிழர்க்கே ஆக வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேராசிரியர் மறைமலை அடிகள் ஆவார்கள். அதனை வழிமொழிந்து பேசியவர்கள் பெரியார் இராமசாமி, ச.சோமசுந்தர பாரதியார் ஆகியோர்கள் ஆவார்கள்” என்பதே முதற்பகுதி.
முதலில் ஒரு மாநாட்டில் முன்மொழியப்படும் தீர்மானங்கள், முன்மொழிந்து பேசியவரால் தான் கொண்டு வரப்பட்டது என்பது எவ்வளவு உண்மை என்பது மாநாடு நடத்திய அனுபவம் உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். முன்னதாகவே வரையப்பட்டு தயார் நிலையில் இருக்கும் தீர்மான வரிகளை ஒருவர் வாசிப்பார். அதுவே முன்மொழிந் தார் என்று கூறப்படும். நாம் கருதிப்பார்க்க வேண்டி யவற்றில் இதுவும் ஒன்று.
அடுத்ததாக நாவலர். இரா.நெடுஞ்செழியன் பதிவிட்டுள்ளவாறான சென்னை கடற்கரையில் 1938 மே திங்களில் ஏதேனும் கூட்டம் கூட்டப்பட்டதா என்பதை ஆய்வோம். திருச்சி உறையூரில் 01.08.1938 அன்று புறப்பட்டு 42 நாட்கள் இந்தி எதிர்ப்பு விளக் கங்களையும், போராட்ட ஆதரவையும் திரட்டிய வாறு வந்த இந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் படை வர வேற்புக் கூட்டம் 11.09.1938 அன்று தான் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தான் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கம் முதன்முதலாக எழுப்பப்பட்டதாக பல்வேறு வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.
ஆனால் நாவலர் இரா.நெடுஞ்செழியன் 1938 மே திங்கள் என்கிறார். நமக்குக் கிடைத்துள்ள தரவுகளின் படி, 26.06.1938 அன்று கான் பகதூர் கலிபுல்லா தலைமையில் 50,000 பேர்கள் கூடிய இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடந்துள்ளது. அதில் பெரியார், அண்ணா, கி.ஆ.பெ. விசுவநாதம், கே.எம். பாலசுப்பிர மணியம் ஆகிய நால்வர் மட்டும் பேசியுள்ளனர். அடுத்ததாக 31.07.1938 அன்று சென்னை கடற்கரையில் 60,000 பேர் கூடிய இந்தி எதிர்ப்புக் கூட்டம் சர். பி.டி.ராசன் தலைமையில் நடந்துள்ளது. அதில் என்.வி. நடராசன், டாக்டர். தருமாம்பாள், மறை. திருநாவுக்கரசு முதலியோர் உரையாற்றியுள்ளனர்.
ஆனால், இரா. நெடுஞ்செழியன் நூலில் உள்ளது போல் 1938 மே மாதம் எந்த இந்தி எதிர்ப்புக் கூட்டமும் சென்னை கடற்கரையில் நடைபெற வில்லை. ஆனால் 28.05.1938 அன்று திருச்சியில் இந்தி எதிர்ப்பு வாரியங்களின் மந்திராலோசனைக் கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியுள்ளது. அதில்தான் சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியம் (The Anti-Hindi High Command) அமைக்கப்பட்டது. அதிலும் தனித் தமிழ்நாடு தீர்மானம் எதுவும் நிறைவேற்றப் பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் தோழர் மணியரசன் பெரும் உற்சாகத் துடன் குறிப்பிட்டிருப்பது போன்றதொரு சொற் பொழிவும், தீர்மானமும் வேறு சில கூட்டங்களில் பேசப்பட்டுள்ளன.
1937 அக்டோபரில் சென்னை பொதுக் கூட்ட மொன்றில் பேசிய சோமசுந்தர பாரதியார் தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதற்காகத் தமிழ் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம் தான் இதற்கு உகந்த தருணம் என்றும் பேசியுள்ளார்.
அது போலவே 12.10.1937 இல் திருநெல்வேலி தமிழ்ப் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் தமிழறிஞர் எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை தலைமையில் சோமசுந்தர பாரதியாரும், அண்ணாவும் உரை யாற்றிய பொதுக் கூட்டத்தில் “தமிழ் மாநிலம் அமைக்கப்பட வேண்டும்” என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. ( தினமணி 18.10.1937/17.10.1996 )
12.11.1937 அன்று திருவையாறு செந்தமிழ்க் கல்லூரி சார்பில் உமாமகேசுவரம் பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய சோமசுந்தர பாரதியார் “ஆந்திர மாகாணத்தைக் காங்கிரசார் பிரித்துவிடத் தீர்மானித்திருப்பது போல் தமிழ் மாகாணத்தையும் பிரித்துவிட தீர்மானத்தைக் கொண்டு வருவது அவசியமென்று” வற்புறுத்தினார். (குடிஅரசு 21.11.1937)
ஆனால் இவையெல்லாம் தமிழ் பேசும் மாவட்டங்களைப் பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவேயன்றி தனித் தமிழ்நாடு கோருபவை அல்ல.
தோழர் மணியரசன் நெடுஞ்செழியனின் எந்த நூலைப் பெரியாரின் அரசியல் பெருமைகளைக் குறைத்திட வேண்டும் என்ற ஆர்வம் பொங்க – ‘தி.மு.க.’ என்ற நூலில் 10, 11ஆம் பக்கங்களிலிருந்து எந்த பத்திகளை எடுத்துக் காட்டினாரோ, அதற்கு முந்தைய பத்தி ஏனோ தோழர் மணியரசன் கண்ணுக்குப் படாமல் மறைந்து போய்விட்டது. அப்பத்தி பின்வருமாறு:-
“தமிழ்நாடு தமிழர்க்கே ஆக வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது தான் புதிதாகத் தோன்றி யிருக்கிறது என்று யாரும் எண்ண வேண்டாம். அந்தக் கருத்துக்கு 1938ஆம் ஆண்டில் முதன் முதலாக வித்திட்டவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னைய பரம்பரையினர் ஆவர். தமிழ்நாடு தனி நாடாகப் பிரிய வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வளர்ந்து சில ஆண்டுகளில், அனுபவ அறிவின் விளைவாகவும், வளர்ச்சியின் அறிகுறியாகவும் “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற கருத்தாக மாறிற்று. “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற கருத்தை உள்ளடக்கிக் கொண்டு வளர்ந்த கருத்து தான் “திராவிட நாடு திராவிடருக்கே” என்பது.
இது தான் மணியரசன் காணத் தவறிய / எடுத்துக் காட்டத் தவறிய முன் பத்தியாகும். அதில் குறிப்பிட் டுள்ளபடி “தமிழ்நாடு தமிழர்க்கே” என்பதற்கு வித்திட்ட தி.மு.க.வின் முன்னைய பரம்பரையினர் யார்? காங்கிரசுக்காரரான சோமசுந்தர பாரதியாரா? அல்லது சைவப் பழமான மறைமலை அடிகளா? இருவரும் அன்று; பெரியார் தான் என்பது அரசியலின் அரிச்சுவடி அறிந்த எவர் ஒருவருக்கும் புலப்படுமே? மணியரசனுக்கு மட்டும் ஏன் புலப்படவில்லை? விடையை எங்களிடம் சொல்ல வேண்டிய தில்லை; நீங்கள் புரிந்து கொண்டால் அதுவே போதும்.
அதோடு, முன்னைய பரம்பரையினர் என்று எழுதிய நெடுஞ்செழியனால், பெரியார் என்று எழுதமுடியாமல் போனதற்கான காரணத்தையும் இதனுடன் சேர்த்து யோசித்துப் பாருங்கள்.
முதலாவதாக, நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் ‘தி.மு.க.’ என்ற நூல் நினைவுகளிலிருந்தே எழுதப்பட்டிருக்க வேண்டும். எனவே தான், 1938 செப்டம்பர் 11ஆம் நாளன்று நடைபெற்ற இந்தி எதிர்ப்பு வழிநடை பிரச்சாரப் படையை வரவேற்று, சென்னை கடற்கரையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் மாதமே 1938 மே என மாற்றிப் பதியப்பட்டுள்ளது. இரண்டாவதாக, அவ்வாறே ஆயினும் தோழர் மணியரசன் மேற்கோள் காட்டும் பத்திகளுக்கு முந்தியதாக உள்ள பத்தியில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் முதன்முதலாக தி.மு.க.வின் முன்னைய பரம்பரையினரால் முன்வைக்கப்பட்டது என்றும், பின்னர் அம்முழக்கம் ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்று மாற்றியமைக்கப்பட்டது என்றும் கூறியிருப்பதில், முன்னைய பரம்பரையினர் என்பது பெரியாரைக் குறிப்பதே என்பதை எவர் ஒருவரும் எளிதில் உய்த்துணர முடியும்.
அக்காலக்கட்டத்தில் பெரியாருக்கும் தி.மு.க.வுக்கும் இடையே இருந்த கடுமையான முறுகல் நிலையே, நெடுஞ்செழியனால் நேரடியாக ‘பெரியார்’ என்று குறிப்பிட முடியாமல் ‘முன்னைய பரம்பரையினர்’ என்று சுற்றி வளைத்து கூறச் செய்திருக்க வேண்டும். இவை ஒருபுறம் இருக்க, நாவலர் நெடுஞ்செழியன் எழுதியது இது ஒரு நூல் மட்டுமே அல்ல.
1996ஆம் ஆண்டில் ‘திராவிட இயக்க வரலாறு’ (முதல் தொகுதி) என்ற நூலினையும், 2000ஆம் ஆண்டில் ‘வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்’ என்ற இயக்க வரலாறு தொடர்பான இருநூல்களை எழுதியுள்ளார். ‘திராவிட இயக்க வரலாறு’ என்ற நூலின் இருபதாம் பக்கத்தில் “1938-இல், இந்தி எதிர்ப்புப் படை, திரு.கே.வி.அழகர்சாமி அவர்களைப் படைத் தலைவராகக் கொண்டு, திருச்சியி லிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தபோது, அதனை வரவேற்பதற்காகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் நானும் பார்வையாளனாகக் கலந்து கொள்வதில் பெருமிதங் கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதே நூலின் 707, 708 ஆகிய பக்கங்களில் “படையினர் 1938 ஆகஸ்டு 1 ஆம் நாள் புறப்பட்டு 234 ஊர்களின் வழியே வந்து, 87 பொதுக்கூட்டங்களை நடத்தி, 43 நாட்களுக்குப் பிறகு, 1938 செப்டம்பர் 11 ஆம் நாளன்று சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது கல்லூரி மாணவனாக இருந்த நான், தமிழர் பெரும்படை இறுதிக் கூட்டமாக கோடம்பாக்கத்திலிருந்து புறப்பட்டுக் கடற்கரையை நோக்கிச் செல்லும்போது, அதனுடன் இணைத்துக் கொண்டு இந்தி எதிர்ப்பு முழக்கங்களை முழங்கிக் கொண்டே சென்றேன். சென்னைக்கு வந்தடைந்த தமிழர் பெரும்படையினரை வரவேற்க, திருவல்லிக்கேணி கடற்கரையில் பேராசிரியர் மறைமலை அடிகளார் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் பெரியார் இராமசாமி, பேரறிஞர் அண்ணா, நாவலர் சோமசுந்தர பாரதியார், சர்.பி.டி. இராசன், தவத்திரு சண்முகானந்தா அடிகளார், திருமதி மீனாம்பாள் சிவராசு, டபிள்யூ.பி.ஏ. சௌந்தர பாண்டியன், பரவஸ்து இராஜகோபாலாச்சாரியார், பட்டுக்கோட்டை கே.வி. அழகர்சாமி ஆகியோர் விரிவுரைகள் ஆற்றினார்கள். அந்தக் கூட்டத்தில் இறுதி வரை இருந்து சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழும் வாய்ப்பினை நான் பெற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி முழுமையாகக் கேட்கும் வாய்ப்பில் நடந்தது என்ன என்பது அந்நூலில் எங்கும் காணோம்.
ஆனால், அதனைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் எழுதி 2000ஆம் ஆண்டு வெளியான “வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்” என்ற நூலின் 46ஆம் பக்கத்தில் பதியப்பட்டுள்ள செய்தி: அவர் முழுமையாகக் கேட்டதில் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கம் முதன்முதலில் யாரால் எழுப்பப்பட்டது என்பதற்கு நாவலர் நெடுஞ்செழியனின் சாட்சியமே நமக்கு அழுத்தமாகக் கூறுகிறது. “சென்னை கடற்கரையில் இந்தி எதிர்ப்புப் பெரும்படைக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நான் மாணவனாகக் கலந்து கொண்டேன். பெரியார் அவர்கள் இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் வீரமுழக்கமிட்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய பெரியார், இந்திய அரசியல் அமைப்பில் தமிழர் நலம் தனியாகப் பாதுகாக்கப்பட உறுதி ஏதும் இல்லை என்றும், எந் நாளும் பார்ப்பனரும் வடநாட்டாரும் மட்டும் தான் ஆதிக்கம் செலுத்தி வருவர் என்றும், அதற்கான பரிகாரம் தமிழ்நாட்டின் ஆட்சி தமிழர் கைக்கு வருவது தான் என்றும் கூறி “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்” என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.
இதுவரை கூறப்பட்டவை அனைத்தும் நாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கு இன்றியமையாதவை அல்லவெனினும் தோழர் மணியரசன் நெடுஞ்செழியனின் ‘தி.மு.க.’ என்ற நூலிலிருந்து மேற்கோள் காட்டிய காரணத்தாலேயே நாமும் விளக்கத்துக்காக இவ்வளவும் எழுத நேரிட்டது.
தமிழறிஞர்கள் கூறிய பின் தான் பெரியார் தனித் தமிழ்நாடு குறித்துப் பேசினார் என்னும் தோழர் மணியரசனின் கூற்று குறித்துப் பார்ப்போம். பெரியாருக்கு எப்போதிருந்து நாம் வேறானவர்கள், வடநாட்டார் வேறானவர்கள்; அன்னியர்கள் என்ற எண்ணம் இருந்து வந்துள்ளது என்பதை நாம் அறிய 1929-இல் இருந்து தரவுகள் உள்ளன. அவை தாம் எவை?
முதலாவது தரவு ‘குடிஅரசு’ ஏட்டில் 12.05.1929 அன்று வெளிவந்துள்ள “மலையாளமும் மாளவியாவும்” தலையங்கத்தில் உள்ளது. அப்படி என்ன தான் உள்ளது என்று பார்ப்போமே. “தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அரசியலிலாவது, மத இயலிலாவது, சமுதாய இயலிலாவது தங்கள் புரட்டுக்கள் எல்லாம் வெளியாய் விடுவதன் மூலம் செலவாகிவிட்டால் வடநாட்டிலிருந்து யாராவது ஒருவரைக் கொண்டு வந்து பித்தலாட்டப் பிரச்சாரம் செய்வது வழக்கம். அது மாத்திரமல்லாமல் தாங்களாக தனித்து வெளியில் புறப்பட்டு பிரச்சாரம் செய்ய முடியாத பட்சத்திலும் வெளிநாட்டிலிருந்து யாரையாவது பிடித்து வந்து அவர்கள் மதிப்பின் மறைவில் மேடை மேலேறிப் பேச இடம் சம்பாதித்துக் கொள்வது வழக்கம்” என்கிறார்.
அவ்வாறு வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களை அதே தலையங்கத்தில் பட்டியலிடுகிறார் பெரியார். “அதாவது சென்ற வருஷத்திற்கு முன் திரு.காந்தியைக் கூட்டிக் கொண்டு வந்து…அவர் சாயமும் வெளுத்து………………” பிறகு, “திரு.பஜாஜ் (ஜமன்லால் பஜாஜ் என்னும் இவர் அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்தவர். பஜாஜ் குழுமத்தின் நிறுவுநர்) அவர்களைத் தருவித்து அவர்களுடன் திரிந்ததில் உள்ள யோக்கியதையும் போய்………………………..” “இந்த வருஷத்திற்கு திரு. பண்டிட் மாளவியா அவர்களைத் தருவித்து………………….”
ஆக, இந்தத் தலையங்கத்தில் பெரியார் யார் யாரை வெளிநாட்டினர் என்கிறார். குஜாராத்தில் பிறந்த காந்தி; இராஜஸ்தானில் பிறந்த மார்வாரி பஜாஜ்; உத்திர பிரதேசத்தில் பிறந்த பண்டித மதன்மோகன் மாளவியா ஆகியோரைத் தான். 1929-இல் பெரியார் பார்வையில் குஜராத்தும், இராஜஸ்தானமும், உத்திர பிரதேசமும் வெளிநாடுகள்.
அடுத்தது, 25.08.1929-இல் குடிஅரசு ஏட்டில் “சுயமரியாதை இயக்கம்” என்ற தலைப்பில் எழுதிய தலையங்கம். சுயமரியாதை இயக்கத்தின் வீச்சான செயல்பாடு களில் அதிர்ந்து போன மதவாதிகள் வர்ணாசிரம மாநாடுகள், சைவ மாநாடுகள் நடத்தியும், தேசிய மேடைகளிலும், சமய மாநாடுகளிலும் சுயமரியாதை இயக்கம் மதத்தைப் பாழ் பண்ணி வருகிறது; அதை ஒழிக்க வேண்டும் என்று கூவிப் பார்த்தார்கள் என்றெல்லாம் எழுதிய பின் பெரியார் கீழ்க்கண்டவாறு தொடர்கிறார். “இவ்வளவும் போதாமல் வெளிநாடு களிலிருந்து, திருவாளர்கள் காந்தி, மாளவியா, மூஞ்சே ஆகியவர் களைக் கொண்டு வந்து இதற்கு (சுயமரி யாதை இயக்கத்திற்கு) எதிரிடையாக பிரச்சாரம் செய்தும் பார்த்தார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆக, முந்தைய வெளிநாட்டினர் பட்டியலில், புதிதாக இன்றைய சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில் பிறந்த பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சேவையும் சேர்த்துக் கொள்கிறார் பெரியார்.
(தொடரும்)
பெரியார் முழக்கம் 25092014 இதழ்