மத்திய அரசு அலுவலகங்களில் குவியும் வடவர் ஆதிக்கம்! தேர்வாணையம் முற்றுகை; கைது

தமிழகத்தில் மத்திய அரசுத் துறைகளான வருமான வரித் துறை, சுங்கத் துறை, கலால் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உ.பி., பீகார் போன்ற வடமாநிலத்தவர் ஆதிக்கம் பெருகி வருகிறது. தமிழ்நாடு உள்பட தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 90 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் வடமாநிலங்களைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த தேர்வு முறைகள் 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அகில இந்தியத் தேர்வுகளாக மாற்றப்பட்டதுதான் காரணம். இந்தத் தீர்ப்பில்கூட 50 சதவீத இடங்களை மண்டல அளவில் தேர்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தும், நடுவண் ஆட்சி அதை ஏற்காமல், அகில இந்திய அளவிலேயே நடத்தியது.
அகில இந்திய தேர்வு முறை காரணமாக – லக்னோ, பாட்னாவிலுள்ள தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் ஊழல் முறைகேடுகளைச் செய்து கையூட்டாக பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு விண்ணப்பத்தாரர்களை தேர்வுகளில் வெற்றி பெற வைத்து விடுகின்றனர். ஒரே ஊர், அதிலும் ஒரே வீதியைச் சார்ந்தவர்களே ஏராளமாக தேர்வு செய்யப்படுவதிலிருந்தே இந்த மோசடியைப் புரிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி, வினாத்தாள் ஆங்கிலத்தோடு, இந்தியிலும் இருப்பது அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இந்த வாய்ப்பு தமிழ்நாட்டுக்கு இல்லை; தமிழில் கேள்வித்தாளும் இல்லை; தமிழிலும் விடை எழுத வாய்ப்பில்லை. எனவே, அகில இந்திய தேர்வு முறையை நீக்கம் செய்து, மாநில அளவிலே தேர்வுகள் நடத்தக் கோரியும், மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தக் கோரியும் 17.7.2014 அன்று சென்னையிலுள்ள தென் மண்டல மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுமத்தை முற்றுகை யிடும் போராட்டம் நடந்தது.
திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, எ°.டி.பி.அய். கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17, இளந்தமிழகம் இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள் கூட்டாக இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்துக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். வேல் முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), அப்துல் சமது (த.மு.மு.க.), செந்தில் (இளந்தமிழகம்), கரு. அண்ணாமலை (த.பெ.தி.க.), திருமுருகன் காந்தி (மே 17), அருண்சோரி (தமிழ்நாடு மக்கள் கட்சி) ஆகியோர் முற்றுகைப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினர். தேர்வாணைய ஆணைய அலுவலகம் அமைந்துள்ள பள்ளிக் கல்வி வளாகத்தின் வெளியே கொளுத்தும் வெய்யிலில் நடந்த இந்த முற்றுகைப் போராட்டத்தில் 350 பேர் திரண்டிருந்தனர். இதில் 100க்கும் அதிகமாக தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சார்ந்த பெண்கள் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மண்டல செயலாளர் அன்பு தனசேகர், தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் உமாபதி, ஜான் மற்றும் கழகத் தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். கைதான அனைவரும் சென்னை இராயப்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் வைக்கப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

தேர்வு மய்யத்தின் முன் கழகத்தினர் திடீர் முற்றுகை; கைது!
தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில் வடநாட்டவர் ஆதிக்கத்தைக் கண்டித்து ஜூலை 17 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் வடநாட்டில் தேர்வுகள் நடத்தியதில் நடந்த முறைகேடுகளால் கடந்த ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வுகள் மீண்டும் 20 ஆம் தேதி நடத்தப்படும் செய்தி, 19 ஆம் தேதி கிடைத்தவுடன் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் உடனடியாக களத்தில் இறங்கினர். கடந்த 20 ஆம் தேதி திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பகுதியில் தேர்வுகள் நடப்பதை அறிந்து தேர்வு மய்யத்துக்கு எதிரே சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தத் திரண்டனர்.
“மாநில அளவில் தேர்வுகளை நடத்து; தமிழில் வினாத் தாள் வழங்கு” என்று முழக்க மிட்டனர். மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு. தனசேகரன், கழக வழக்கறிஞர் துரை. அருண், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் உமாபதி, ஜான், சுகுமாறன், வேழ வேந்தன், ஏசு, தெட்சிணாமூர்த்தி, விஜய. இரணியன், விழுப்புரம் அய்யனார், காஞ்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் தினேஷ், செங்குட்டுவன் உள்ளிட்ட 30 தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப் பட்டனர்.

பெரியார் முழக்கம் 24072014 இதழ்

You may also like...

Leave a Reply