உயர்நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசு மவுனம் சட்டத்தை மீறும் விநாயகன் சிலை ஊர்வலங்கள்

‘விநாயக சதுர்த்தி’ எனும் மதப் பண்டிகை வீடுகளில் நம்பிக்கையாளர்களால் மட்டும் கொண்டாடப்பட்டு வந்த நிலை மாறி, ‘விநாயகன் ஊர்வலம்’ அரசியலாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை வளர்த்து ‘இந்து’ மதவெறி அரசியலை ஊதிவிடவும் பயன்படுத்தப்படும் ‘விநாயகன்’ சிலை ஊர்வலங்களுக்கு ‘மத உரிமை’ என்ற போர்வையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
‘சுற்றுச் சூழலை’ பாதிக்கும் விதமாக ‘இராசயனக் கலவையில்’ உருவாக்கப்பட்டு கடல் நீரில் கொண்டுபோய் போட்டு நீரை மாசுபடுத்தி, கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்துகள் உருவாக்கப்படுகின்றன. மாசுக் கட்டுப்பாடு வாரியம், இரசாயன விநாயகன்களுக்கு தடை போட்டுள்ளது. அத்துடன் நகரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் வைக்கப்படுகின்றன.
பெரியார் இயக்கங்களின் பகுத்தறிவு – அறிவியல் பரப்புரை களுக்கு தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் போடும் காவல்துறை ‘விநாயகன்’ அரசியலுக்கு சட்டங்களை மீறி உதவிடுவதுதான் வேடிக்கை. இதில் தமிழக அரசும் உடந்தையாகவே செயல்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் இராமசாமி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் பொதுநல வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழகத்தின் சாலையோரங்களில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் 70 ஆயிரம் கோவில்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்தக் கோவில்களை அகற்ற தலைமைச் செயலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அண்மைக் காலங்களில் சாலையோரங்களில் சாமி சிலைகளை வைப்பது; போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பந்தல் அமைப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிள்ளையார் சிலைகளும் வைக்கப்படுகின்றன. இதுபோன்ற சிலைகளை போலீசார் அகற்றுவதற்குப் பதிலாக போலீசாரே இந்த சிலைகளை அமைக்க விதிமுறை களை உருவாக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.
இவ்வாறு சாலையோரங்களில் பொது மக்களுக்கு இடையூறாக சாமி சிலைகளை வைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு 28 ஆம் தேதியும், செப்டம்பர் 2 ஆம் தேதியும் அரசுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த மனுவின்மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என டிராபிக் இராமசாமி அந்த மனுவில் கேட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் குமார், அக்னி ஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.

பெரியார் முழக்கம் 21082014 இதழ்

You may also like...

Leave a Reply