தனியார் துறையிலும் இடஒதுக்கீடு : முனைவர் ஜீவானந்தம் பேச்சு

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 136வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முனைவர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,
பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவதன் நோக்கம், அவருடைய கொள்கைகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்காக நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். பெரியாரின் கொள்கைகள் நூற்றாண்டுகளை கடந்தும் இன்றைக்கும் மக்களுக்கு தேவையான கொள்கைகளாக இருக்கின்றன.
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் பெற்றுத்தந்த இடஒதுக்கீடு மூலம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் நல்ல பயனை அடைந்து வருகின்றனர். அதனை தடுப்பதற்கு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை வேகவேகமாக தனியார் மயமாக்கிவருகிறது. இந்த சூழ்நிலையில் தனியார் துறையிலும், பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவேண்டுமென இன்றைக்கு போராடுவதற்கும் பெரியாரின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மறைந்த நரேந்திர தபோல்கருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை மகாராஷ்டிரா அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தன் வாழ்நாள் முழுவதும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடி மக்களிடையே பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பிய தந்தை பெரியார் நினைவாக தமிழக அரசும் உடனடியாக மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை இயற்றவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அதுபோல் ஜாதி மறுப்பு திருமணம் செய்கின்ற தம்பதிகளுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஜாதியற்றோர் என்ற பெயரில் தனியாக இடஒதுக்கீடு வழங்கவேண்டுமென தமிழக அரசிடம் பெரியாரின் பிறந்த நாளில் கோரிக்கையாக வைக்கின்றோம் என பேசினார்.
முன்னதாக பள்ளத்தூர் நாவலரசன் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கவிஞர் தம்பி, கவிஞர் கலைபாரதி திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் பாரி, மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் சேரன்குளம் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் சேரன் ரமேஷ், நல்லிக்கோட்டை முருகன், செந்தமிழன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 23102014 இதழ்

You may also like...

Leave a Reply