போர்க் குற்ற விசாரணைக்கு – சான்று தரும் ஆவணம்

“இலங்கை : யானையை மறைக்கும் முயற்சி” என்ற ஆங்கில நூலை சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எழுதி வெளியிட்டிருக்கிறார். இலங்கை அரசின் பயங்கரவாதம், இனப்படுகொலைக்காக கட்டமைத்த அதன் அரசியல், “இறுதித் தீர்வு”க்காக மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட முழுமையான யுத்தம். அதில் பாதிக்கப்பட்டோர், நேரில் கண்டோர் சாட்சியப் பதிவுகள் என்ற மூன்று தலைப்புகளில் நூலாசிரியர் ஈழத் தமிழர் போராட்டம், வரலாற்றுப் பின்னணிகளை சர்வதேச சட்டங்கள், தேசிய இனங்களுக்கான உரிமைகள், ‘இறையாண்மை’க் குரிய அரசுக்கு வரையறுக்கப்பட்டுள்ள உரிமைகள் என்ற பார்வையில் அற்புதமாக விளக்குகிறார்.
இவற்றோடு, இறுதிக்கட்டப் போரில் பாதிக்கப் பட்டோர், நேரில் கண்டவர் சாட்சியங்கள், கொலைக் களமாக மாற்றப்பட்ட ‘போரில்லாத பகுதி’; அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை; கடமை தவறிய அய்.நா. அமைப்புகளை அம்பலப்படுத்தும் அய்.நா. உள்ளக அறிக்கை; (அந்த அறிக்கையில் பல பகுதிகள் – கறுப்பு மையிட்டு அழிக்கப்பட்டுள்ளன) மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பின் அறிக்கை, தமிழர் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பின்மையை விளக்கிடும் சர்வதேச ‘நெருக்கடிகளுக்கான’ குழுவின் அறிக்கை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பு, இறுதிப் போருக்குப் பிறகு, வடக்கு, கிழக்கு மாநிலங்களில் மக்கள் மீதான இராணுவம் மற்றும் அரசு கூட்டு அடக்குமுறைகளை விளக்கும் தமிழ் தேசிய கூட்டணியின் அறிக்கை, தமிழர் பகுதி களில் இராணுவ ஆக்கிரமிப்புகள், இராணுவ அடக்கு முறைகளைக் கண்டித்த சிங்கள பத்திரிகையாளரின் மரண வாக்குமூலம் – என முக்கிய ஆவணங்கள் பலவும் இணைக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட் டுள்ள மற்றொரு முக்கிய ஆவணம், 1474 யாழ்ப் பாணத் தமிழர்கள் இணைந்து சிறீலங்கா நீதி மன்றத்தில் நிலக் கையகப்படுத்தும் அதிகாரி மற்றும் நில மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் மனு; இறுதிப் போருக்குப் பின் குடியிருப்புக்கு திரும்பிய இந்த தமிழர்களின் நிலங்கள், அறிவிப்பு இல்லாமலே இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழர்களுக்கு உரிமையான 6381 ஏக்கர் நிலம், இராணுவத்தளம் அமைப்பதற்காக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
976 பக்கங்களில் இந்த நூல் ஆவணப் பெட்டமாக வெளி வந்திருக்கிறது. நான்கு அடிப்படையான கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார், நூலாசிரியர். ஒன்று – ஆளும் சிங்களப் பேரினவாத ஆட்சிகளின் நோக்கம் – இனப்படுகொலைதான். இரண்டு – இதற்கான நிகழ்ச்சி நிரல்கள் 60 ஆண்டு களாகவே திட்டமிட்டு தொழில்படுகின்றன. மூன்று – அரசு மட்டுமின்றி, ஆளும் வர்க்கமான ‘அறிவு ஜீவிகள்’ (புத்த பிக்குகள் உள்ளிட்டோர்) அழித் தொழித்தலுக்கான அதிகாரங்களை அரசு ஆதர வோடு கையில் எடுத்துள்ளனர். நான்கு – ஆட்சி யாளர்களும் ஆளும் ஆதிக்க அறிவுஜீவிகளும் தமிழர்களை ஒடுக்குவதற்கான அரசியல் மற்றும் சமூக வெளியை இலங்கை அரசியல் கட்டமைப்பே உருவாக்கித் தருகிறது.
1948 ஆம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்ட தமிழர் இன அழிப்புக்கான திட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கான வெற்றிக் கொண் டாட்டமே முள்ளிவாய்க்கால். இப்படி இனப்படு கொலைக்காகவே நடத்தப்பட்ட இறுதிப் போருக்கு இலங்கை அரசு ஒவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக தன்னை தயார்படுத்தியே வந்திருப்பதை விரிவாகப் பேசுகிறது, இந்த ஆவணம்.
நார்வேயின் தலையீட்டில் போர் நிறுத்த உடன்பாடு உருவாகி விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசு பிரதிநிதிக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் இலங்கை அரசு உள்நோக்கமே – அரசியல் தீர்வுக்கு தயாராக இருப்பதாக உலக நாடுகளை ஏமாற்றுவதற்குத்தான். போர் நிறுத்தமும் சமாதானப் பேச்சுகளும் நடந்த காலத்தில்தான் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர் பகுதியான கிழக்கு மாகாணம் முழுமையாக இலங்கை இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டது. தமிழர்களின் கலாச்சார அடை யாளங்கள் சிதைக் கப்பட்டன. தமிழர் பிரதேசமான கிழக்கு மாகாணம், தமிழர்களுடன் கொண்டிருந்த அரசியல் தொடர்பி லிருந்து துண்டிக் கப்பட்டது. விடு தலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொள் ளும் போராட்டத் துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர். அதே நேரத்தில், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் போர் நிறுத்தக் காலத்தை தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் மக்களுக்கான நலத் திட்டங்களைக் கொண்டு வருவதிலும் தீவிர கவனம் செலுத்தியது. சமாதானப் பேச்சுக்குப் பின்னால் நடந்த ‘அரசியலை’ அவதானிக்க விடுதலைப்புலிகள் தவறி விட்டார்கள். கிழக்குப் பகுதியை இராணுவ மயமாக்கி, ஆயுதங் களைக் குவித்துக் கொண்டு நார்வேயுடன் கையெழுத்திட்ட உடன்பாடுகளையும் படிப்படியாக மீறி, தன்னை முழுமையாக ஆயத்தமாக்கிக் கொண்டு ஒரு கட்டத்தில் போர் நிறுத்தத்தை முறியடித்துக் கொண்டு இராணுவத் தாக்குதலை இலங்கை தொடங்கிவிட்டது.
அரசியல் தீர்வுகளை சீர்குலைத்து, இராணுவ மோதலுக்குத் தயாராகிவிட்ட இலங்கையின் இந்த மூர்க்கமான போக்கை அதுவரை அரசியல் தீர்வை வலியுறுத்தி வந்த நாடுகள் கண்டிக்கத் தயாராக இல்லை. சர்வதேச சமூகம் அரசு திணித்த இந்தப் போரை எதிர்க்காமல் வாய்மூடி நின்றதுதான் அவலம்!
திட்டமிடப்பட்ட இனப்படுகொலை முடிந்த பிறகு தான், 2009இல் சர்வதேச சமூகம், மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்றங்களையும் பேசத் தொடங்கியது. அப்போதும்கூட தமிழர்கள் வரலாற்று ரீதியாகவே 60 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு வந்துள்ளதையும் அதன் நீட்சியே முள்ளிவாய்க்கால் படுகொலை என்ற உண்மையையும் விவாதங்களுக்கு உட்படுத்த சர்வதேச சமூகம் தயாராக இல்லை. ஊடகங்கள், சர்வதேசப் பார்வையாளர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என அனைவரையும் போர்ப் பிரகடனப் பகுதியிலிருந்து வெளியேற்றி விட்டு, ‘சாட்சிகளற்ற’ ஒரு போர் இலங்கையில்தான் உலகிலேயே முதன்முதலாக அரங்கேறியது.
இப்போது, சர்வதேச மவுனம் கலையத் தொடங்கி யதற்கான காரணங்கள் என்ன? சொந்த நாட்டு குடி மக்களின் உயிர் வாழும் உரிமைக்கே பொறுப்பேற்கத் தயாராக இல்லாத ஒரு அரசு இலங்கையில் நடப்பதும், தமிழர்களின் பாரம்பர்ய பிரதேசங்களை இராணுவத்தின் பிடிக்குள் முழுமையாகக் கொண்டு வந்ததும் தான் காரணம். இலங்கையின் அரசியல் அகராதியில் ‘அரசு’, ‘தேசிய அரசு’, ‘அரசியல்’, ‘இறையாண்மை’, ‘தேசியம்’, ‘தேச பக்தி’ என்ற அனைத்து சொல்லாடல்களுக்கும் ஒரே அர்த்தம் தான் உண்டு. அது ‘சிங்களம்’, ‘சிங்களம்’ என்பது தான். முழுமையான ஒரு போரை நடத்துவதற்கான அரசியல் வெளியை சர்வதேச சமூகம்தான் இலங்கைக்கு உருவாக்கித் தந்தது. ஆனால், அந்த அரசியல் வெளி நேர்மையான அரசியல் தீர்வுகளை நோக்கி நகர்த்துவதற்கு பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் சோகம் என்று துல்லியமாக படம் பிடிக்கிறார் நூலாசிரியர்.
இராணுவ ரீதியான ஒடுக்குமுறையே இலங்கை யின் நோக்கம் என்பதற்கு சான்றுகளை அடுக்கிக் காட்டுகிறார், நூலாசிரியர்.
சிவில் சமூகத்தில் இராணுவத்தைக் குவிப்பதில் எண்ணிக்கை அடிப்படையில் தெற்காசியாவிலேயே முன்னிற்பது இலங்கைதான். வடக்கு கிழக்கு மாகாணத்தில் 6 குடிமகனுக்கு ஒரு இராணுவம் என்ற வீதத்தில் இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதே அந் நாட்டில் நிலவும் “ஜனநாயகம்” – “சுதந்திரத்துக்கான” சான்று. ஏற்கனவே இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை 4 லட்சம். போர் முடிவுக்கு வந்து விட்டது என்று இராஜபக்சே அறிவித்தப் பிறகு, மேலும் ஒரு லட்சம் பேரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன? போர் முடிந்ததற்குப் பிறகும் இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 20 சதவீதம் மேலும் ஏன் அதிகரிக்க வேண்டும்? 2006-லிருந்து 2009 வரை 14.4 மில்லியன் கிலோ கிராம் வெடி மருந்துகள் விமானத்திலிருந்து வன்னிப் பகுதியில் போடப்பட் டுள்ளன. இந்த 3 ஆண்டுகளில் இதற்காக 13,000 முறை விமானம் பறந்திருக்கிறது. இந்தப் புள்ளி விவரத்தை நாடாளுமன்றத்தில் வெளியிட்டவர் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர். (இது வெளிப் படையாக அறிவிக்கப்பட்டது மட்டுமே) இந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் விமானக் குண்டுவீச்சில் சராசரியாக 116 பேர் கொல்லப்பட்டனர் என்று அய்.நா. தயாரித்துள்ள உள்ளக அறிக்கையின் பதிவை ‘அயர்லாந்து சமாதானப் பேரவை’ அம்பலப்படுத்தி யிருக்கிறது. இலங்கை அரசு – கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, சமூகப் பாதுகாப்பு, மக்கள் நலத் திட்டங் களுக்கான நிதி ஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கும் கீழே குறைத்து, பல மடங்கு கூடுதலாக இராணுவத்துக்கு ஒதுக்கி வந்துள்ளது. 1980களிலிருந்தே ஆட்சியை இராணுவ மயமாக்கும் போக்கு தொடங்கி விட்டது.
1965 ஆம் ஆண்டிலிருந்து அரசு இராணுவத்துக்கு படிப்படியாக உயர்த்திய நிதி ஒதுக்கீட்டை புள்ளி விவரங்களுடன் நூல் பட்டியலிட்டுள்ளது.
இந்த “இராணுவ மயமாக்குதலை” கவனத்தில் கொள்ளாது, பல உதவும் நாடுகள். வளர்ச்சித் திட்டங்களின் அமுலாக்கம் வழியாக அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற தவறான புரிதலுக்கு வந்தன. ‘சுனாமி’யால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறு வாழ்வுக்கும் ஏற்கனவே நடந்த போரில் பாதிக்கப் பட்ட தமிழர் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய் வதற்கும் தாராளமாக நிதியை வழங்கின. அம் முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தன.
போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு சமாதானம், பேச்சுவார்த்தைகள் நடந்த காலத்திலேயேகூட தமிழர்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல இயலாமல் இராணுவத்தின் கெடுபிடிகள் இருந்தன. இ°ரேல்-பால°தீனத்துக்கு இடையே அமெரிக்க தலையீட்டில் ‘ஓ°லோ’ உடன்படிக்கை உருவானபோது சுயாட்சிப் பிரதேசங்களான காசா மற்றும் மேற்கு கரைப் பகுதிகளில் வாழ்ந்த பால°தீனர்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கு இ°ரேல் இராணுவம் அனுமதிக்கவில்லை. காசாவிலிருந்து மாம்பழங்களை ஏற்றிக் கொண்டு, மேற்குக் கரையின் நபுலு° நகரத்துக்கு செல்லும் டிரக்குகள் காசா எல்லைப் பகுதியில் இ°ரேல் இராணுவத்தால் நிறுத்தப்படும். அங்கு மீண்டும் இ°ரேல் டிரக்குகளில் ஏற்றப்பட்டு மேற்கு கரை எல்லைப் பகுதி வரும்போது அந்த மாம்பழங்களை இறக்கி மற்றொரு முறை பால°தீனர்களின் டிரக்குகளில் ஏற்றப்பட்டப் பிறகே ‘நபுல°’ நோக்கி செல்ல முடியும். இந்த நடைமுறைகள் முடிய 3 நாள்களாகி விடும். அதற்குள் மாம்பழங்கள் அழுகிப் போய்விடும். பால°தீனர்களின் பிரதேசங்கள் சுயாட்சி பெற்றிருந்தாலும்கூட இ°ரேல் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்க முடியும் என்பதை இ°ரேல் உணர்த்திக் கொண்டே இருந்தது. இதே நடைமுறையைத்தான் நார்வே சமாதான அமைதி உடன்படிக்கை அமுலில் இருந்தபோதும் இலங்கை இராணுவம் பின்பற்றியது. பேருந்துகளில் பயணிக்கும் தமிழர்கள் ஆங்காங்கே சோதனைச் சாவடிகளில் இறக்கி நீண்ட கியூ வரிசையில் நின்று இராணுவத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பிறகுதான் மாற்றுப் பேருந்துகளில் பயணிக்க வேண்டும். ஒரு மைல் தூரத்திற்குள்ளேயே இராணுவம் இப்படி பலமுறை சோதனைகளை நடத்துவதை வழக்கமாகக் கொண் டிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்வதோ, தமிழர் பகுதியான மட்டக் கிளப்புக்கு செல்வதோகூட அவ்வளவு எளிது அல்ல; அச்சத்துக் கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியே தீர வேண்டும்.
நூலின் ‘இறுதித் தீர்வு’ என்ற அத்தியாயம் திட்டமிட்ட இனப்படுகொலையைத்தான் இலங்கை நடத்தியது என்பதற்கு ஏராளமான சான்றுகளை முன் வைக்கிறது.
போரில் உயிர் தப்பியவர்கள், பாதிக்கப்பட்டவர் களின் நேரடி சாட்சியங்கள் இரத்தத்தை உறையச் செய்கிறது. கற்பனை செய்து பார்த்திட இயலாத கொடூரங்களையும் அவலங்களையும் உணர்த்தி இதயத்தை சுமையாக்கி விடுகிறது.
இத்தனைக்கும் மக்களை காப்பாற்றக்கூடிய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் அரசிடம் இருந்தன. அதைப் பயன்படுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்ற, இலங்கை இராணுவம் தயாராக இல்லை. இராணுவத் தாக்குதலுக்கும் அப்பால் உணவு, மருந்துகளை வழங்க மறுத்து பட்டினி சாவுக்கு கதவு திறக்கப் பட்டது. அய்.நா. தலைமைச் செயலாளர் பான்கி.மூன் நியமித்த குழுவின் அறிக்கையிலிருந்தே இதற்கான சான்றுகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. “போரில்லாதப் பகுதி” என்று இராணுவம் அறிவித்த பகுதிகளிலும், ஏன், அய்.நா. அலுவலர்களுக்கான பாதுகாப்புப் பகுதிகளிலும்கூட குண்டுகள் வீசப் பட்டதை தேதி வாரியாக பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை பதிவாக்கியிருக்கிறது. சுமார் 3 லட்சம் மக்கள் உயிர் பாதுகாப்புக்காக திரண்டிருந்த ‘போரில்லாத பகுதியில்’ (பிப்.6, 2009) நிலம், கடல், வானம் என்ற மூன்று பகுதியிலிருந்தும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி (பல் குழாய் துப்பாக்கி, நீண்டதூரம் சென்று தாக்கி அழிக்கும் பீரங்கிகள், ஏவுகணைகள்) தாக்குதல் நடத்தியதை அய்.நா. அறிக்கை பதிவு செய்துள்ளது. “இறுதித் தாக்குதல் நடக்கப் போகிறது; போரில்லாத பகுதிக்கு பொது மக்கள் போய்விடலாம்” என்று இடைவிடாமல் இராணுவம் அறிவித்துக் கொண்டும் துண்டுப் பிரசுரங்களை வீசிக் கொண்டும் இருந்தன; அரசின் நோக்கம் இனப்படுகொலைதான் என்பதற்கு இது வலிமையான சான்று. தனது குடி மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்க வேண்டிய ஒரு அரசு, இப்படி உயிர் பிழைக்கும் வாய்ப்பை மக்களிடமே ஒப்படைக்குமா?
இலங்கை அரசு நியமித்துக் கொண்ட ‘போரில் கற்ற பாடம்; தீர்வை எட்டுதல்” (எல்.எல்.ஆர்.சி.) விசாரணை ஆணையத்தில் இராணுவ செயலாளர் கோத்தபய ராஜபக்சே, விமானப்படை தளபதி குணதிலகா அளித்த வாக்குமூலங்கள் அப்பாவி மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றக் கூடிய தொழில்நுட்பங்கள் அரசிடம் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. அரசிடமிருந்த ஆள் இல்லாத விமானங்கள் வழியாக இரவிலும் பகலிலும் மக்கள் வாழும் பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்களை அடையாளம் காண முடியும். ஆயுதங் களோடு இருப்பவர்களையும் பிரித்துப் பார்க்க முடியும். குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இலக்குகளையும் தீர்மானிக்க முடியும். இந்த நவீன பாதுகாப்பு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியதாகவும் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும் இலங்கை இராணுவ செயலாளர் வாக்கு மூலம் அளித்துள்ளார், ஆனால் நடந்ததோ நேர் மாறானது. அப்பாவி மக்களைக் கண்டறிவதற்கும், அவர்கள் மீது குண்டுகள் வீசு வதற்கும், பள்ளி மருத்துவமனைகளைக் கண்டறிந்து தாக்குதல் நடத்துவதற்குமே இவை பயன்படுத்தப்பட்டிருக் கின்றன. உதாரணமாக கைவிடப்பட்ட குழந்தை களுக்காக நடத்தப்பட்ட ‘செஞ்சோலை’ முகாமில் விமானக் குண்டு வீச்சு நடத்தி, 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிணமாக்கப்பட்டார்களே? அது குழந்தைகள் காப்பகம் என்பதைக் கண்டறிந்த பிறகுதானே? அதேபோல் இறுதிக் கட்டப் போரில் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டனவே, அது எப்படி? யுத்தக் களத்தில் சிக்கிக் கொண்ட செஞ்சிலுவை சங்க ஊழியர்கள், மருத்துவமனைகள் இருக்குமிடத்தை இராணுவத்திடம் பட்டியலிட்டுக் கொடுத்தனர். அங்கெல்லாம் குண்டுவீச்சு நடத்த வேண்டாம் என்று இராணுவத்திடம் வேண்டுகோள் வைத்தனர்.
இவ்வளவுக்குப் பிறகும் இராணுவம், மருத்துவ மனைகள் மீது இறுதிகட்டப் போரில் 64 முறை குண்டுகளை வீசியிருக்கிறது. மருத்துவமனைகள் இருப்பதை உறுதிப்படுத்தி, குண்டுகளை வீசுவதற்குத் தான் செஞ்சிலுவை சங்கம் வழங்கிய பட்டியலை இராணுவம் பயன்படுத்தியது. தாக்குதலிலிருந்து உயிர்பிழைத்த உள்ளூர் மருத்துவர்கள், மருத்துவ மனை இருக்கும் பகுதிகளை இராணுவத்திடம் தெரிவித்துவிட வேண்டாம் என்று செஞ் சிலுவை சங்கத்திடம் மன்றாட வேண்டியிருந்தது. 2009, பிப்.1 அன்று புதுக்குடியிருப்பு மருத்துவ மனையில் 800க்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் புகுந்திருந்தனர். இதில் 500 பேர் நோயாளிகள் பிற்பகல் 3 மணியிலிருந்து 6 மணி வரையிலும் மீண்டும் இரவு 10.20 மணிக்கும், அடுத்த நாள் பிப்.2 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கும் மருத்துவமனை மீது குண்டுகள், வீசப்பட்டன. செஞ்சிலுவை சங்க மருத்துவ ஒருங் கிணைப்பாளர் மோர்வன்முர்ச்சிகன் லோசரி என் பவர் இதை தனது அறிக்கையில் உறுதி செய்துள்ளார்.
அரசு விசாரணை ஆணையத்திடம் (எல்.எல். ஆர்.சி.) வாக்குமூலம் அளித்த இராணுவ செயலாளர் கோத்தபய ராஜபக்சே (2010, ஆக.14) போர் நிறுத்தப் பகுதிக்குச் சென்று 20,000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் ஆனால் விடுதலைப் புலிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வற்காக மக்களை அங்கிருந்து போகவிடாமல், தடுத்து அவர்களை அச்சுறுத்த மனித வெடிகுண்டாக ஒரு போராளி மாறி மக்களை சாகடித்ததாகவும் வாக்குமூலம் அளித் துள்ளார். இது அப்பட்டமான பொய் என்பதை போர் முடிந்தவுடன் அதிபர் இராஜபக்சே ‘இந்து’ நாளேட்டின் ஆசிரியர் என்.ராமுக்கு அளித்த பேட்டி அம்பலப்படுத்திவிட்டது. (2009, ஜூன் 30) அந்தப் பேட்டியில், “போரில்லாத பகுதி எது என்று அறிவித்ததே இராணுவம்தான். அந்த இடங்களை அய்.நா.வோ அல்லது வேறு நபர்களோ அடையாளப்படுத்தவில்லை. நாங்கள் அப்படி அறிவித்த பகுதிக்குத்தான் பிரபாகரனும் அவரது போராளிகளும் வந்தனர். அவர்கள் தப்பிச் செல்ல வேறு எவருடைய வருகையையோ அங்கு எதிர்பார்த் திருந்தனர். இப்படி ஒரு இடத்தில் திரட்டி, சுற்றி வளைத்து தாக்கினோம்” என்று இராஜபக்சே உண்மையை வெளிப்படையாக கூறிவிட்டார்.
அய்க்கிய நாடுகள் அவையின் பயிற்சி மற்றும் ஆய்வு மய்யம் – இறுதி கட்டப் போரின் போது எடுத்த செயற்கைக் கோள் படம், இனப் படுகொலைக்கான வலிமையான சாட்சியமாகும். அமெரிக்காவில் இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம், இந்தப் படங்களை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் பெருமளவில் கூடியுள்ள பகுதிகளில் குண்டு வீச்சுகள் இராணுவம் நடத்தியிருப்பதை உறுதி செய்திருக்கிறது. போரின் கடைசி 6 மாதங்களில் மக்களுக்கு உணவு, மருந்துகள் மறுக்கப்பட்ட நிலையில் மிக அதிக அளவில் பட்டினிச் சாவுக்கு தள்ளப்பட்டனர். 2009 ஏப்ரலில் அகதி முகாம்களில் மடிந்து போன 30 மூத்த குடிமக்களின் சவப் பரிசோதனையில் அவர்கள் பட்டினியால் மடிந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே. அலெக்° ராஜா முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சவப் பரிசோதனை அறிக்கை, கொழும்பில் உள்ள அய்.நா. தூதரக அறிக்கையில் இடம் பெற்றுள்ளது) தடை செய்யப்பட்டுள்ள இரசாயன வாயு, வெள்ளை பா°பர° மற்றும் கிள°டர் குண்டுகளை இராணுவம் பயன்படுத்தி யிருப்பதற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன. பாகி°தானிலிருந்து இவைகளை இலங்கை அரசு வாங்கியதற்கான பாகி°தான் ஏடுகள் வெளியிட்ட செய்திகள். தீக்காயங்களுடன் இறந்தவர்களை நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள், வாக்குமூலங்களை பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அறிக்கையிலிருந்து விரிவாக இந்த ஆவணம் பதிவு செய்திருக்கிறது.
விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன், சமாதானப் பிரிவுத் துறை பொறுப்பாளர் புலித்தேவன் தலைமையில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த 300 பொது மக்களை சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிராக இராணுவம் சுட்டுக் கொன்றது. சரணடைவதற்கு முதல் நாள் 2009, மே 18இல் நடேசன், புலித்தேவன் இலங்கை உயர் அதிகாரிகளுடன் பேசி, இதற்காக அரசு ஒப்புதல் உறுதியைப் பெற்றதற்குப் பிறகே வெள்ளைக் கொடியுடன் வந்தார்கள். இராணுவத்தின் சர்வதேச நெறிமுறைகளை புறந்தள்ளிய நடவடிக்கையை அப்போது இராணுவ தளபதியாக இருந்த சரத்பொன் சேகா வெளிப்படையாக கண்டித்துள்ளார். இது, ஒழுங்கு மீறிய செயல் என்பதை ஒப்புக் கொள்கிறார். இந்தப் படுகொலைக்குப் பிறகு டிசம்பர் மாதம் அய்.நா.வின் சிறப்பு தூதர் பிலிப் அல்°டன், ஒழுங்கு மீறல் குறித்து இலங்கை அரசிடம் விளக்கம் கேட்டு எழுதினார். எல்லாவற்றுக்கும் மேலாக ஆயுதம் தாங்கியப் போராளிக் குழுவின் அரசியல் பிரிவு தலைவர் ஒருவர் சரணடைய முன்வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது சர்வதேச முக்கியத்துவம் பெறுகிறது.
2018 டிசம்பர் 15 முதல் 2009, மே 18 வரை ஒவ்வொரு நாளும் ‘போரில்லாத பகுதிகளில்’ நடந்த கிரைனட் ஷெல் வீச்சுகள், வீசப்பட்ட இடம். இறந்த பொது மக்களின் எண்ணிக்கைகளை ஆவணம் விரிவாக அட்டவணைப்படுத்தியுள்ளது. மே 9 ஆம் தேதி அன்றுதான் விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தினர். ஆத்திரமடைந்த இராணுவம் போரில்லா பகுதியின் நான்கு திசைகளிலிருந்தும் ‘ஆர்ட்டிலரி’ தாக்குதல் நடத்தியதில் அந்த ஒரு நாளில் மட்டும் 1000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,122 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இறந்து போன 1000 பொது மக்களில் 378 உடல்கள் மட்டுமே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன, எஞ்சிய உடல்களை இராணுவம் சாலை ஓரங்களிலும் கடற்கரையிலும் வீசி எறிந்தது. மே 9 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதி காலை வரை ஒரே இரவில் 2000 பொது மக்களும், அதே நாள் மாலையில் 3200 பொது மக்களும் கொல்லப்பட் டுள்ளனர். அய்.நா.வின் புனர்வாழ்வுக்கான கள அதிகாரி லாரன்° கிறி°ட் 3200 பேர் இறந்ததை உறுதிப்படுத்துகிறார்.
தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கையின் அரசு மருத்துவர், மே 10 அன்று 391 சடலங்கள் அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்டது என்றும் 1300 பொது மக்கள் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். 2009 மே 14 அன்று 1700 பேர் கொல்லப்பட்டு, 3000 பேர் படுகாயமடைந்துள்ளனர். மே 17 அன்று 150 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக மே 9 ஆம் தேதி விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்தியப் பிறகு வெறி கொண்ட இராணுவம், தொடர்ச்சியாக பொது மக்கள் மீது ஷெல்களை வீசத் தொடங்கி விட்டது. விமானங் களின் வழியாக மக்கள் வாழும் பகுதிகளைப் படம் பிடித்து குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதை இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர்.
இது தவிர முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் காணாமல் போன பெண்கள், பாலுறவு வன்முறைகள், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் பற்றிய ஏராளமான தரவுகளை மிக விரிவாக ஆவணம் பதிவு செய்துள்ளது.
ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாறுகள் குறித்து பல விரிவான நூல்கள் வெளி வந்துள்ளன. அமைதி காக்கச் சென்ற இந்திய இராணுவம், இலங்கையில் நடத்திய அத்துமீறல்கள், போர்க் குற்றங்கள், பாலுறவு வன்முறைகள் குறித்த விரிவான ஆவணத்தை ‘சாத்தானின் படைகள்’ என்ற தலைப்பில் விடுதலைப்புலிகள் இயக்கமே ஆவணமாக்கியது. ‘இராஜீவ் கொலை’ நடந்தபோது இந்திய உளவுத் துறை அந்த ஆவணங்களைக் கைப்பற்றி முற்றாக அழித்ததோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை இராஜீவ் கொலையில் தொடர்புபடுத்தவும், அந்த ஆவணத்தையே சான்றாக்கியது. அந்த வரிசையில், ஈழத் தமிழர்கள் மீது இராணுவம் இனப்படுகொலை நோக்கத்தோடு நடத்திய போர்க் குற்றம், ‘மனித குலத்துக்கு எதிரான போருக்கான’ முழுமையான ஆவணமாக வெளி வந் துள்ளது இந்த நூல் என்று உறுதியாக சொல்லலாம்.
சர்வதேச நாடுகளின் கண்களைத் திறக்கச் செய்யவும், இனப் படுகொலை போர் குற்ற விசாரணைகளுக்கான சான்று ஆவணமாகவும் இது நிச்சயம் பயன்படும்.
நூல் : Srilanka : Hiding the Elephant பக். 976
ஆசிரியர் : பேரா. இராமு. மணிவண்ணன்
அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை
சென்னைப் பல்கலைக்கழகம்.
விடுதலை இராசேந்திரன்
(‘தலித் முரசு’க்காக எழுதப்பட்டு, அதன் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)

பெரியார் முழக்கம் 23102014 இதழ்

You may also like...

Leave a Reply