கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் : ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் செயல்படும் பா.ஜ.க.வை தோற்கடிப்பீர்!

16-04-2014 புதன்கிழமை அன்று மாலை 6-30 மணியளவில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில், “மதவாத பா.ஜ.க” விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காளிதாசு தலைமை தாங் கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, முனைவர் ஜீவானந்தம், தோழர் ஜேம்ஸ், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பாரி, முதலானோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் துவக்கமாக பள்ளத்தூர் நாவலரசன் கலைக்குழு வினரின் மதவாதத்திற்கு எதிரான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

17-04-2014 வியாழக்கிழமை அன்று மாலை 6-00 மணியளவில், கோவை ஒண்டிபுதூர் சுங்கம் மைதானத்தில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, “மதவாத பா.ஜ.க” விளக்கப் பொதுக் கூட்டம், கோவை நாடாளுமன்ற தொகுதியில் சி.பி.ஐ(எம்) கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் அவர்களை ஆதரித்து நடைபெற்றது. தோழர் பத்மநாபன் வரவேற்புரை ஆற்றினார். வழக்குரைஞர் ந.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரை ஆற்றினார். இப்பொதுக் கூட்டத்தில் தோழர் வெள்ளமடை நாகராஜன், சி.பி.ஐ கதிர்வேல், சேலம் ஊஞஐ மாநிலக்குழு ஜீவானந்தம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சிவஞானம், ஊஐகூரு மாநிலத் தலைவர் பத்மநாபன், தமிழர் விடுதலை இயக்கம் வெண்மணி முதலானோர் உரையாற்றினர்.

இரண்டு கூட்டங்களிலும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சாரம்:

எங்களுடைய இந்த தேர்தல் நிலைப்பாடு, இது வரை எங்களோடு, தோளோடு தோள் நின்று பல் வேறு இயக்கங்களை முன்னெடுத்த தலைவர்களுக்கு கூட எதிரானதுதான். தமிழ்நாட்டில் அது ஈழ சிக்கலாக இருந்தாலும், மரண தண்டனைக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், அணு உலைக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் அல்லது முல்லை பெரியாறு போன்ற உரிமை பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் அதிகம் இணைந்து போராடிய இயக்கமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்திருக்கிறது. அவர்களின் போராட்ட உணர்வுகளுக்கு எங்களது நன்றி, மதிப்பு எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும்; ஆனால் அவர்களின் தேர்தல் நிலைப் பாட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

இந்த விவகாரத்தை முதன் முதலில் ‘ஜூனியர் விகடன்’ தொடங்கி வைத்தது. இப்படி ஒரு கூட்டணியை உருவாக்குவதற்காக தமிழருவி மணியன் எழுதினார். மோடி பிரதமரானால் பாலாறும், தேனாறும் ஓடும் என்பதைப் போல தொடர்ந்து எழுதத் தொடங்கினார். காங்கிரசுக்கு மாற்றுக்கு இவர்கள் தான் என்பதை முன்மொழிந்து எழுதினார். சில வாரங்கள் பார்த்து பொறுமையாக இருக்க முடியாமல், அதற்கு எதிரான முதல் கட்டுரையை நாங்கள் தான் எழுத தொடங்கினோம். அதில் இறுதியாக முடிக்கும் போது ‘சட்டி சுடுகிறது தான்; அதற்காக அடுப்பில் குதிக்க முடியுமா?’ என்று எழுதினோம். காங்கிரஸ் மோசமான கட்சிதான் ஒப்புக்கொள்கிறோம்; அதற்காக பாரதிய ஜனதாவையா கொண்டு வரமுடியும்? என்று எழுதியதற்கு தமிழருவி மணியன் ஒரு பதில் எழுதினார். மீண்டும் ஒரு மறுப்பை நாங்கள் எழுதி னோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் அமைதி குலைந்துவிடும், (வாக்கு கேட்கும் போதே அமைதி குலைகிறது) திருவாரூர் மாவட்டம் மல்லிபட்டணத்தில் தடுத்தார்கள், சண்டை வந்தது, முடிந்தது; ஆனால் அதன் தொடர்ச்சியாக மன்னார்குடியில் உள்ள இஸ்லாமியர்களின் ஜவுளிக் கடைகளை அடித்து நொறுக்கிறார்கள். எனவேதான் பா.ஜ.க. வை தேர்ந்தெடுக்கக் கூடாது என்றும், மோடி பிரதமராக ஆகக் கூடாது என்றும் தொடர்ந்து விளக்கி வருகிறோம்.

எப்போதும் கட்சி – ஆட்சி என்பது மக்களுக் கானதாக இல்லை; முதலாளிகள் தங்களுக்கு வேண்டி யவர்களை வைத்திருப்பார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், அமைச்சர் பதவி வேண்டி பிரதமரையோ, கட்சி தலைவரையோ யாரும் கேட்கவில்லை; ‘கார்ப்பரேட்’ தரகர் நீராராடியாவை சந்தித்தார்கள். அமைச்சரை நியமிக்கும் அதிகாரம் டாடா கம்பெனிக்கு இருப்பதை அறிகிறார்கள். எனவே டாடாவிடம் பரிந்துரை செய்ய சொல்லி நீராராடியாவிடம் சென்றார்கள். அமைச்சர்களை நியமிப்பது உள்ளூர் முதலாளிகள் என்றால், பிரதமரை நியமிப்பது வெளிநாட்டு – அன்னிய முதலாளிகள்.

இந்திய பெரும் முதலாளிகள் நூறு பேரிடம், கடந்த மார்ச் மாதம் ‘எக்னாமிக் டைம்ஸ்’ ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் 74 பேர் மோடி பிரதமராக வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இவ்வளவு நாட்கள் மன்மோகனை ஆதரித்தவர்கள் இப்போது ஏன் இவர் பக்கம் வருகிறார்கள்? அவரை விட இவர் நமக்கு கூடுதலாக பயன்படுவார் என்று நம்பு கிறார்கள். தேர்தல் நடைபெறும் நேரத்தில் எந்த புதிய திட்டத்தையும் நிறைவேற்றக் கூடாது என்ற விதிமுறை இருக்கும்போது, அவசர அவசரமாக தற்போது மீண்டும் கூடங்குளத்தில் மூன்று, நான்காவது அணு உலைகளை அமைப்பதற்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. காங்கிரசுக்காவது இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. 1996 ஆம் ஆண்டில் 13 நாட்கள் மட்டுமே பி.ஜே.பி ஆட்சியில் இருந்தது. ஆட்சி முடியும் கடைசி நாளில் அமைச்சரவையை கூட்டி இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படு கிறது; அதில் ஒன்று, மராட்டியத்தில் இயங்கும் அமெரிக்கா நிறுவனமான ‘என்ரான்’ என்ற ஒரு மின் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுமதி அளிப்பது.

மன்மோகன் சிங் முதன்முதலில் நிதி அமைச்சராக வந்த போது அவரை யாருக்காவது தெரியுமா? அதுவரை அவர் எந்த பொதுத் தேர்தலையும் சந்தித்திருக்க வில்லை, கட்சியின் உறுப்பினராகவும் இல்லை. அடுத்த தேர்தலில் அவர்தான் பிரதமராக வருகிறார். அவர் நிதியமைச்சர் ஆனவுடன் கொண்டுவந்தது தான் ‘உலக மயமாக்கல்’.

இந்த நாட்டை இறையாண்மை உள்ள, மதசார்பற்ற, சோசலிச ஜனநாயகக் குடிஅரசு என்று சொல்வார்கள். எங்கள் நாட்டு முடிவுகளை, நாங்கள் முடிவு செய்துகொள்வோம் என்பது தான் இறையாண்மை. ஆங்கிலேய ஆட்சியின் போது காங்கிரஸ்காரர்கள் சொல்வார்கள், அதையே கிராமிய பாடல்களிலும் சொல் வார்கள்… ‘ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்; காசுக்கு இரண்டு விற்கச் சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்’ என்று. இப்போது இந்தியாவை பார்த்து ‘உன் நாட்டில் நீ கல்விக்கு மானியம் தரக் கூடாது – வேளாண்மைக்கு மானியங் களை குறைத்துக் கொள்ளவேண்டும் – மருத்துவம் உள்ளிட்ட சேவை துறை களுக்கு செலவு செய்யவேண்டாம்’ என்று உலக வங்கி சொல்கிறது; ஆக இறை யாண்மை கிடையாது. மதச் சார்பின்மை என்பதை பேசவே வேண்டியதில்லை. அரசு நிகழ்ச்சிகள் எல்லாம் பூஜை போட்டே தொடங்கப்படுகின்றன. இது சோசலிச நாடா? என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். சோசலிசம் என்பதை கட்சியின் கொள்கையாக ஏற்பதற்கு ஒரு மாநாடு நடத்தினார்கள். ஆவடி காங்கிரஸ் மாநாட்டில்தான் சோசலிச மாதிரி சமுதாயம் (எச்சரிக்கையாக, சோசலிச சமுதாயம் என்று சொல்லாமல்) என்றார்கள்; பின்னர் அதை ஜனநாயக சோசலிசம் என்று மாற்றினார்கள்; 1976 ஆம் ஆண்டு சட்டத்திலும் சேர்த்தார்கள். இப்படி எல்லாம் சேர்க்கப்பட்ட வார்த்தை 1990 ஆம் ஆண்டு காணாமல் போனது; தனியார்மயம், தாராளமயம் என்று பேசுகிறார்கள்; ஆக சோசலிசம் என்பதற்கு பொருளே இல்லை. எஞ்சி இருக்கிற ஜனநாயகம், குடிஅரசு எப்படி இருக்கிறது என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும்.

எல்லா கட்சிகளும் மக்களிடம் வாக்கு கேட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி நடத்துவது ஜனநாயகம். ஆட்சி நடத்தும் கட்சியின் தலைவர் ஆலோசனைகளை கொடுப்பார்; கட்சி தலைமைக் குழு திட்டங்களை தீட்டிக் கொடுக்கும் அல்லது வழிநடத்தும். எல்லா கட்சிக்கும் உள்ள அந்த உரிமை பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் கிடையாது. அவர்கள் திட்டம் தீட்டி எந்த முடிவும் எடுக்க முடியாது; அவர்கள் சுதந்திரமாக இயங்க முடியாது. இவர்களை இயக்குவதற்கு வேறு ஒரு அமைப்பு இருக்கிறது, அது தான் ஆர்.எஸ்.எஸ்.

பி.ஜே.பி என்பது தானாக இயங்கும் கட்சி அல்ல; தேர்தலில் போட்டியிடும் முகமூடிகள் இவர்கள்; முகமூடிக்கு பின்னால் இருப்பவர்கள் அவர்கள். பாரதிய ஜனதா கட்சியின், பரப்புரை குழுத் தலைவராகத் தான் மோடியை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். இதனால் அதுவரை இலவு காத்த கிளியாக பிரதமர் கனவில் இருந்த அதன் மூத்த தலைவர் அத்வானி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவ தாக சொன்னார். கட்சியின் சிக்கல் – கருத்து வேறுபாடு வெளியில் தெரிய வேண்டாம் என பலரும் பேசினார்கள் நேரில் போய் பேசி னார்கள் – குழுவாக போய் பேசி னார்கள் ஆனால் எதற்கும் சமாதான மாகாதவர், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ‘இதோடு விட்டுவிட்டு இணைந்து செயலாற்றுங் கள்’ என்று தொலைபேசியில் சொன்னவுடன் அடுத்த நாளில் இருந்து அமைதியாகி விட்டார். ஆக இவர்கள் கட்சியின் தலைமைக் குழுவோ, செயற்குழுவோ சொல்லி கேட்கமாட்டார்கள்; ஆர்.எஸ்.எஸ் சொன்னால் மட்டும் கேட்பார்கள்.

ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை குருதட்சணை என்ற நாளில் ஆர்.எஸ்.எஸ். தலைவரைச் சந்தித்து நன்கொடை வழங்கும் வழக்கப்படி ஆர்.எஸ்.எஸ். தலைவரை சந்திக்கப் போன வாஜ்பாயி யிடம், ‘உங்கள் வேட்பாளர்களில் 73 பேருக்கு ஆர்.எஸ்.எஸ் என்றால் என்னவென்றே தெரியவில்லை; அவர் களுக்கெல்லாம் சீட்டு கொடுத் துள்ளீர்கள்; இது தவறான போக் காகும், நாங்கள் ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை நியமிப்போம், அந்த குழுவிடம் ஒப்புதல் பெற்று தான் வருங் காலத்தில் நீங்கள் வேட்பாளர்களை இறுதி செய்யவேண்டும்’ என்று அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொன்னார். வாஜ்பாயியும் ஏற்றுக் கொண்டார்; இது அனைத்து நாளேடுகளிலும் செய்தியாக வந்தது. ஆக இவர்கள் செயல்படுத்துவது ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை, எனவே ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை என்ன வென்று நாம் பார்க்கவேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், சுயமரியாதை இயக்கமும் தொடங்கிய அதே 1925 ஆம் ஆண்டுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தொடங்கப் பட்டது. அதற்கு முன்பே இந்துத்துவா வந்துவிட்டது; வி.டி.சாவர்க்கர் கொண்டு வந்துவிட்டார். இதைத் தொடங்கிய ஐவர் குழுவில் வி.டி. சாவர்க்கரின் அண்ணன் பாபா ராவ் சாவர்க்கரும் இருந்தார். அதை சொல்லுவதற்கு தயங்குவார்கள். கோல்வால்கர் பின்னாளில் புத்தகம் எழுதியிருக்கிறார். வி.டி.சாவர்க்கர் எழுதிய ஆங்கில நூலின் ஒரு பாதியையும், பாபாராவ் சாவர்க்கர் எழுதிய ஒரு பாதியையும் சேர்த்து எழுதினார். ஆக இவர்களின் கொள்கை என்பது ஆர்.எஸ்.எஸ் – சாவர்க்கர் போன்றோரின் கொள்கைகள் தான்; அது தான் இந்துத்துவம்.

இவர்கள் நேரடியாக பேசுவ தில்லை; இந்துக்களுக்கு பாதுகாப்பு என்றால் பார்ப்பனர்களுக்கு பாது காப்பு என்று பொருள். நலிந்தவர் களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்று நரசிம்மராவ் சட்டம் கொண்டுவந்த போது, மிகக் கவனமாக தெளிவாக ஒரு சொல்லைப் போட்டார் அப்போது யாரும் அதைக் கவனிக்கவில்லை. இட ஒதுக்கீட்டில் வராத பிரிவினரில் ஏழைகளுக்கு 10 சதவீதம் என்றால் அவர்கள் உயர் ஜாதிக்காரர்கள் தான். (அவர்கள் எண்ணிக்கையே 10 சதவீதம் தான்) அது போலவே இந்துத்துவம் என்றால் ஒட்டுமொத்த இந்துக்கள் நன்மைக்கு என்று தவறாக பலரும் புரிந்து கொள்கிறார்கள்.

இவர்களின் பழைய கட்சி பாரதிய ஜன சங்கம். ஜனதா கட்சியில் இணைந்து, இரட்டை உறுப்பினர் முறை இருக்கக் கூடாது (ஜனதா கட்சியில் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இல் இருக்கக் கூடாது) என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து, பாரதிய ஜன சங்கம் வெளியேறிவிட்டது. ‘இவர்கள் “பிராமனிஸம்” என்பதை தான் ஹிந்துயிஸம் என்று எங்களை ஏமாற்றுவதற்கு சொல்லிக்கொண்டிருக் கிறார்கள், அவர்கள் சிந்தனை முழுவதும் பார்ப்பனர் களைப் பாதுகாப்பது தான்’ என்று அன்றைக்கு ராஜ் நாராயணன் என்ற தலைவர் பேசினார். அவர் பின்னாளில் அதற்காகத் தாக்கப்பட்டார்.

பார்ப்பனரைத் தொழுவதே இந்துத்துவம்

32 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவராக இருந்தவர் – அதற்கு தத்துவங்களை கொடுத்தவர் குரு கோல்வார்க்கர். இந்து பண்பாடு என்பது என்ன என்பதை அவருடைய ‘பன்ச் ஆப் தாட்ஸ்’ (தமிழில் ‘ஞானகங்கை’) என்ற புத்தகத்தில் எழுதுகிறார். – “ தென்னாட்டில் ஒரு ஆங்கில அதிகாரி இருந்தார்; அவருக்கு உதவி அதிகாரியாக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார்; அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கில அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒரு நாள் அந்த ஆங்கில அதிகாரி பிராமணப் பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய உதவி அதிகாரியாக இருந்த நாயுடு சமூகத்தைச் சார்ந்தவர் எதிரே வந்தார். ஆங்கில அதிகாரியுடன் கை குலுக்கினார். ஆனால் பிராமணப் பியூனைப் பார்த்தவுடன் காலை தொட்டு வணங் கினார். அதைப் பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி ‘நான் உன்னுடைய பெரிய அதிகாரி, என்னிடம் நீ கை தான் குலுக்கினாய், ஆனால் என்னுடைய பியூனின் காலைத் தொட்டு கும்பிடு கிறாயே! இது என்ன பிரச்சனை’ என்று கேட்டார். அதற்கு அந்த உதவி அதிகாரி ‘நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர்; அவர் ஒரு பியூனாக இருக்கலாம், ஆனால் அவர் நாங்கள் வணங்கும் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரை தொழ வேண் டியது எனது கடமை’ என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்”. (கோல்வார்க்கர் எழுதிய புத்தகத்தின் 138, 139 ஆம் பக்கங்களில் உள்ளவை)

ஆக இந்துத்துவம்  – இந்து தர்மம் என்பதெல்லாம் பார்ப்பானைப் பார்த்தால் காலைத் தொட்டு கும்பிடுங்கள் என்று சொல்கிறார். இப்பொழுது மோடியை என்னவென்று சொல்கிறார்கள் என்றால், இவர் உழைக்கும் மக்களைச் சார்ந்தவர்- மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் – எனவே இவரை ஆதரிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். நீ சொன்ன இந்து தர்மத்தின்படி அவர் என்ன செய்வார்? பிரதமராகவே வந்தாலும்கூட பார்ப்பன பியூன் வந்தால் காலைத் தொட்டு கும்பிட்டு கொண்டு இருப்பார்; அவர் சொல்வதைத்தான் கேட்டுக் கொண்டிருப்பார்.

மோடியை ஒரு மாயாஜால வித்தைக்காரரைப் போல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மோடி என்றாலே வித்தை காட்டுபவன் தானே. கேதார்நாத்திலே பெரும் மழை பெய்து, பெரும் வெள்ளம் வந்தது. அங்கு தீவின் நடுவிலே சிக்கிக் கொண்ட மக்களை காப்பாற்றுவதற்கு இராணுவம் பெரும் முயற்சி செய்தது. அதில் வானூர்திகள்கூட சேதமடைந்தன. இராணுவ வீரர்கள் இறந்தார்கள், அப்போது ஒரு நாள் வெள்ளிக்கிழமை திடீரென மோடி அங்கு போனார். பதினைந்தாயிரம் குஜராத்திகளை 80 இனோவா காரின் மூலம் பத்திரமாக அடுத்த ஒரே நாளில் கொண்டு வந்து சேர்த்தாராம். கேதார்நாத்தில் இருந்து டேராடூனுக்கு உள்ள தூரம் 221 கிலோமீட்டர் ஆகும். ஒரு இனோவா வில் அதிகபட்சம் 10 பேர் ஏற்றுவதாக வைத்துக் கொண்டாலும், 80 இனோவா என்றால் 20 முறை போய் வந்திருக்க வேண்டும், ஒரு முறை போய் வருவதற்கு பத்து பன்னிரண்டு மணி நேரம் ஆகும். ஆக வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டியிருந்தாலும்கூட 10 நாட்களாவது ஆகுமே, அதுவும் தீவில் நிற்பவர்களில் குஜராத்திகளை மட்டும் கண்டுபிடித்து ஒரே நாளில் எப்படி கொண்டுவந்தாய் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை; அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள்.

எல்லோரும் தேர்தல் அறிக்கையை தேர்தலுக்கு முன் சொல்லிவிடுவார்கள். ஆனால் இவர்கள் ஒரு கட்ட தேர்தல் முடிந்த பின்பு தான் தேர்தல் அறிக்கையே வெளியிட்டிருக்கிறார்கள். நமது கொள்கைகளை வெளிப்படையாக பேசாதே என்று ஒரு குழுவும், சொல்லித் தான் ஆகவேண்டும் என்று ஒரு குழுவும் விவாதித்ததே அதற்குக் காரணம். இறுதியாக அதில் இந்துத்துவ வெறியர்கள் தான் வெற்றிப் பெற்றனர். அந்த அறிக்கையில் இராமர் கோவிலை கட்டுவது என்று சொல்லுகிறார்கள்.

இராம இராஜ்யம் என்று சொல்லிக்கொண்டே வருகிறார்கள். இராமர் ஆட்சிக்கு வந்து எதை செய்தார் என்பதை, இராமாயணத்தில் விளக்கப்படு வதை நாம் பார்க்க வேண்டும். இராமன் ஆட்சிக்கு வந்து, அவையில் அமர்ந்திருக்கும் போது, ஒரு கிழட்டு பார்ப்பனன் (கிழட்டுப் பார்ப்பனன் என்று தான் எழுதப்பட்டிருக்கிறது) இறந்து போன தனது இளம் குழந்தையை கொண்டு வந்து போட்டான் (கிழட்டு பார்ப்பானுக்கு எப்படி இளம் குழந்தை? என்று கேட்கக் கூடாது) ‘எனக்கு கொள்ளிப் போட வேண்டியவனுக்கு நான் கொள்ளி போடும்படி ஆகி விட்டது; இராமா உன் நாட்டில் தர்மம் கெட்டு விட்டது, அதனால் என் மகன் இறந்துவிட்டான்’ என்று முறையிடுகிறான்.

உடனே நமது முதல்வரைப் போல தனது ஹெலிகாப்டரான புஷ்பக விமானம் ஏறி கடவுளை நேரில் காண்பதற்காக தவமிருந்து கொண்டிருக்கும் சம்பூகன் என்பவனைக் கண்டுபிடிக்கிறான். அவனைப் பார்த்து, ‘நீ எந்த வர்ணத்தைச் சார்ந்தவன்’ என்று இராமன் கேட்கிறான். தான் சூத்திர வர்ணத்தைச் சார்ந்தவன் என்று சம்பூகன் பதிலளிக்கிறான். இந்து மதத்தின் படி சூத்திரன் நேரடியாக கடவுளை வணங்கக் கூடாது; பார்ப்பனர்கள் மூலமாகத் தான் கடவுளிடம் கோரிக்கை வைக்க வேண்டும். எனவே நீ தர்மத்தை மீறி விட்டாய் என்று சம்பூகனின் கழுத்தை வெட்டுகிறான் இராமன். உடனே தேவர்களெல்லாம் பூ மாரி பொழிகிறபோது, என்ன வரம் வேண்டும் என்று மேலிருந்து கடவுள் கேட்கிறார்; இறந்து போன பார்ப்பான் பிழைத்துக்கொண்டால் போதும் என்று இராமன் சொல்கிறான். எந்த கணத்தில் நீ அவனது கழுத்தை வெட்டினாயோ, அந்த கணத்தில் அவன் உயிர் பிழைத்து விட்டான் என்று சொல்வதாக இராமாயணம் கூறுகிறது.

ஆக தமிழன் (சூத்திரன்) ஒருவனை வெட்டிய நேரத்தில், பார்ப்பான் பிழைத்துக்கொண்டான். அவன் இப்படிப்பட்ட இராமருக்கு கோவில் கட்டு வதைத் தான் முதல் நிகழ்ச்சியாக வைத்திருக்கிறான். 12ஙூ இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தான் இராமன் பிறந்தான் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் புத்தர் பிறந்ததாகக் கூறப்படும் லும்பினி என்ற ஊரில் புத்தர் இறந்து 120 ஆண்டுகள் கழித்து வைக்கப் பட்டுள்ள கல்வெட்டில்கூட இந்த ஊரில் புத்தர் பிறந்தார் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில்கூட போர்டு கம்பெனி, ஹோண்டாய் கம்பெனி வந்து விட்டது என்று பெருமையாக பேசிக்கொண்டார்கள்; மூன்று ஆயிரம் பேர் வேலை செய்த ஸ்டேண்டர்டு கம்பெனியை மூடிவிட்டு, முன்னூறு பேர் வேலை செய்யும் போர்டு கம்பெனி வந்து என்ன நன்மை? இந்த நிறுவனங்களின் கார்கள் எல்லாம் வெளிநாட்டிற்குத் தான் போகின்றன. அந்த நாட்டுக்காரன் தங்களது சுற்றுச் சூழல் கெடாமல், தங்களின் மண் வளம் கெடாமல், தங்களின் தண்ணீரை வீணாக்காமல் மின்சார உற்பத்தி தேவையில்லாமல் உற்பத்தி செய்து அனுப்பப்படும் கார்களை சொகுசாகப் பயன்படுத்திக் கொள்கிறான். அதைப் போல இராமர் கோவிலைக் கட்டி நமக்கு என்ன நன்மை?

அடுத்து இட ஒதுக்கீடு தொடர்பானது, 2009 தேர்தல் அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடரும்; அதே வேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர் களுக்கு இட ஒதுக்கீடு செய்வோம் என்று சொன்னார்கள். இந்த தேர்தல் அறிக்கையில் ஒரு சமத்துவ சமுதாயம் உருவாவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் நூறு மாவட்டங்களை தேர்ந்தெடுத்து, அந்த மாவட்டங்களில் கல்வியை, சுகாதாரத்தை, வாழ்வியல் நிலையை உயர்த்துவதற்கு நாங்கள் வேலை செய்வோம் என்பது தான் அதன் பொருள் என்று நிர்மலா சீத்தாராமன் என்ற தமிழ்நாட்டு பார்ப்பனப் பெண் அதற்கு டெல்லியிலிருந்து விளக்கமளிக்கிறார். இட ஒதுக்கீடு தொடருமா? இல்லையா? என்பது பற்றி எந்த விளக்கமுமில்லை.

பி.ஜே.பி.யினர் தமிழகத்தில் இரண்டு கலவரங் களை செய்தார்கள். மண்டைகாட்டில் கலவரம் செய்து கன்னியாகுமரியை பிடிக்க முடிந்தது. கோவையில் கலவரம் செய்து சிறு செல்வாக்கைப் பெற்றார்கள். வேறு இடத்தில் கலவரம் செய்ய ஆட்கள் இல்லை எனவே தமிழகத்தில் காலூன்ற முடியாத பி.ஜே.பி யினர் மீண்டும் தமிழகத்திற்குள் வந்திருக்கிறார்கள். ஏற்கனவே தி.மு.க.-அ.தி.மு.க தோள்மீது ஏறி வந்த இவர்கள் இப்போது புது அடிமைகளைப் பிடித்துக் கொண்டார்கள். இராமாயணத்தில் வானரக் கூட்டத்தை வைத்து தான் இராமன் வெற்றி பெற்றான் அது போல தற்போது ஒரு வானரக் கூட்டத்தை பிடித்துள் ளார்கள். இவர்கள் மோடி என்ற ஒரு மனிதரை முன்னிறுத்துகிறார்கள். மோடி குஜராத்தையே சொர்க்க பூமியாக மாற்றிவிட்டார் என்றும், ஊழலே செய்யாத நேர்மையான நிர்வாகத்தை கொடுக்கக் கூடியவர் என்றும், இந்த இரண்டு விசயங் களுக்காகத் தான் தாங்கள் மோடியை ஆதரிப்பதாகவும் இவர்கள் சொல்கிறார்கள்.

‘வைப்ரண்ட்’ குஜராத் என்று நடத்தி, எங்களுக்கு அன்னிய முதலீடு 450 பில்லியன் டாலர் வந்திருக்கிறது என்று சொன்னார்கள். இந்த 2010-2011 ஆண்டில் இந்தியாவிற்கே 30.38 பில்லியன் அன்னிய முதலீடு தான் வந்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கி சொல்கிறது. ஆனால் பொய்யான தகவல்களை சொல்லி வளர்ச்சிப் பெற்ற மாநிலம் என்று நம்மை ஏமாற்றுகிறார்கள்.

(கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகத்தைவிட குஜராத் பின்னோக்கி இருப்பதன் புள்ளி விபரங்கள் பற்றி விளக்கமளித்தார்)

ஊழல் அற்ற நிர்வாகம் என்று சொல்கிறார்கள், ஊழல் செய்த மூன்று பேர் அங்கு அமைச்சராக இருக்கிறார்கள். சுரங்க ஊழல் வழக்கில் மூன்றாண்டு தண்டனை பெற்ற பாபு பொக்காரியா மேல் முறையீடு செய்து, பிணையில் வந்து அமைச்சராக இருக்கிறார். அதுபோலவே மீன்வள ஊழலில் தண்டனை பெற்ற புருசோத்தம் சோலங்கி மேல்முறையீட்டுப் பிணையில் வந்து அமைச்சராக இருக்கிறார். குஜராத்தில் பெட்ரோலிய, எரிவாயு ஆலைகள் அமைத்துத் தொழில் நடத்தும் அம்பானிகளுக்கு சாதகமாக அவர்களின் சகோதரியின் கணவராகிய சவுராவ் பட்டேல் என்பவரை எரிவாயு, பெட்ரோலியம், எரிசக்தித் துறை அமைச்சராக நியமித்துள்ளவர்தான் இந்த நேர்மையின் சின்னமாகக் காட்டப்படும் மோடி ஆவார். இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீட்டில் 1500 கோடி ரூபாய் பணமாக வைத்திருந்தார்; 250 டன் தங்கம் வைத்திருந்தார் என்ற செய்தி எல்லோர் மனதிலும் இன்றும் உள்ள ஒன்றாகும். இதற்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டார். வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது, ஆனால் தற்போது குஜராத் பல்கலைக் கழகம் வழியாக மருத்துவ கவுன்சிலுக்கு அவரைத் தான் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளார் மோடி . அந்த மாநிலத்தில் ஊழல் ஒழிப்புக் கண்காணிப்பு நீதிமன்றங்கள் ஒன்பது ஆண்டுகளாக இல்லவே இல்லை. இவர் பன்னிரண்டு ஆண்டுகளாக பதவியில் இருக்கிறார். இப்போது தான் ஆளுநரே நியமித்திருக்கிறார்; அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர் மோடி . தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல்கள் வழங்குவதற்கு அங்கு ஆணையர்களே இல்லை. உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு இரண்டு பேரை போட்டுள்ளார்கள். ஒருவர் ஓய்வு பெற்று விட்டார்; இப்போது ஒருவர் தான் இருக்கிறார். (சிறிய மாநிலமான கோவாவில் கூட நான்கு பேர் இருக்கிறார்கள்)

அதானி என்ற ஒரு முதலாளி தற்போது இரண்டு இலட்சத்தி எழுபதாயிரம் ஏக்கர் நிலம் வைத்திருக்கிறான்; இவனுக்கு சதுரமீட்டர் நிலம் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட் டிருக்கிறது. அதில் 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசுதான் வழங்கியிருக்கிறது. அவன் சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமலேயே முந்திரா என்ற துறைமுகத்தை அமைத்து நடத்தி வருகிறான். மேற்கு வங்கத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட டாடா, இங்கு வந்து  2900 கோடி ரூபாய் போட்டு ஒரு ஆலை கட்டியிருக்கிறான். இதற்கு 9700 கோடி அரசு கடன் வழங்கியுள்ளது; இதற்கான வட்டி ஆண்டுக்கு பத்து பைசா மட்டுமே. இப்படிப்பட்ட பெரும் முதலாளிகள் மேலும் மேலும் உயர செய்திருக் கிறாரே தவிர, உழைக்கும் மக்கள், தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசாக இல்லை. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வில்லை. நகரத்தில் இருக்கும் இரண்டரை இலட்சம் வீடுகள் உட்பட 11 இலட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பே இல்லை. இப்படிப்பட்டவர்தான் நாட்டை வளமையாக்கப் போகிறார், செழுமையாக்கப் போகிறார் என்று சொல்கிறார்கள்.

நாடு வளமையாக – செழுமையாக ஆவது இருக்கட்டும்; நாம் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழமுடியாத சூழல் இந்த மத வெறியர்கள் வந்தால் ஆகிவிடும் என்பது தான் நமது கவலை.

மத நம்பிக்கை என்பது எனக்கு நம்பிக்கையுள்ள எனக்கு விருப்பமான கடவுளை வணங்குவது; மதவாதம் என்பது என்னுடைய கடவுளைத் தான் அனைவரும் வணங்க வேண்டும் என்பது. அதைத் தான் பி.ஜே.பி சொல்லிக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களும், கிருஸ்துவர்களும் இந்த நாட்டில் வாழலாம், இராமனை கடவுளாக ஏற்றுக் கொண்ட பின்னால். சமஸ்கிருதத்தை மொழியாக ஏற்றுக் கொண்டு, வேத கணிதத்தை பாடத்தில் ஏற்றுக்கொண்டு, இந்துமதக் கடவுளை மட்டும் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் மட்டும் தான் இங்கு வாழமுடியும் என்ற மறைமுகத் திட்டத் தோடு இருக்கின்ற இந்த பி.ஜே.பி வந்து விடவே கூடாது என்பது தான் எங்கள் நோக்கம்.

சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட நாம்,–சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட நாம், இவற்றிற்கு எதிரான – ஆர்.எஸ்.எஸ் ஆல் வழிநடத்தப்படுகின்ற –மத வெறியரான மோடியை பிரதமராக்கு வதற்கு அனுமதிக்கக் கூடாது என்பது தான் நமது நிலைப்பாடு.

பெரியார் முழக்கம் 24042014 இதழ்

You may also like...