“தீபாவளி” மறுப்போரின் ஒன்று கூடலில் உறுதி பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம்!

எந்த ஒரு நிகழ்வுக்கும் பட்டாசுகளை வெடிப்ப தில்லை என்று தீபாவளி மறுப்போரின் ஒன்று கூடலில் கூடிய குடும்பங்கள் உறுதி ஏற்றனர்.
மதம் இல்லாத வாழக்கைக்கான மாற்றுப் பண் பாட்டை வளர்த்தெடுப்போம் என்ற முழக்கத்தோடு அக்டோபர் 2 ஆம் நாளில் தீபாவளி மறுப்போரின் ஒன்று கூடல் நிகழ்வுக்கு சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகமும், சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தன. சென்னை இராயப்பேட்டையில் உள்ள முருகேசன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், திராவிடர் கழகத்தினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், இளம் தமிழகம் இயக்கத் தோழர்கள், மார்க்சிய லெனினிய கட்சித் தோழர்கள் அமைப்பு களைச் சாராதோர் எனப் பலரும் பங்கேற்றனர்.
“நாம் அறிவியலை ஏற்பவர்கள்; ஆகவே பூமி உருண்டை என்பதை மறுக்கும் தீபாவளியை மடமை என்கிறோம். நாம் மனித நேயத்தைப் போற்றுபவர்கள்; ஆகவே எதிரிகளை சூழ்ச்சிகளால் கொலை செய்வதை நியாயப்படுத்தும் புராண பயங்கரவாதக் கருத்துகளை வெறுக்கிறோம்.
‘நரகாசுரனை’ – ‘கிருஷ்ணன்’ வஞ்சகமாக கொலை செய்ததை நியாயப்படுத்துவதே தீபாவளி.
நாம் குழந்தைகளை நேசிப்பவர்கள். ஆகவே குழந்தைகள் உழைப்புச் சுரண்டலால் உருவாகும் பட்டாசுகளை வெறுக்கிறோம். ‘தீபாவளி’ நாளில் மதங்களற்ற மாற்றுப் பண்பாடுகளை வளர்த் தெடுக்கும் ஆலோசனைகளுக்காக தீபாவளி மறுப் போரின் ஒன்று கூடல் இது” – என்று அழைப்பிதழில் கூறப்பட்டிருந்தது.
மூடப் பண்டிகைகள் மற்றும் தீபாவளி மூடத் தனங்களை விளக்கிடும் பாடல்களை தோழர்கள் அருள்தாசு, நாத்திகன் ஆகியோர் பாடினர். தொடர்ந்து சிவகாசிப் பகுதிகளில் பட்டாசு தயாரிப்பில் ஒவ்வொரு நாளும் பாதிப்புக்குள்ளாகி வரும் ஏழைப் பெண்கள், குழந்தைகள், விபத்துகளால் நேர்ந்த ஊனங்கள், முதலாளிகளால் கொத்தடிமை களாக நடத்தப்படும் அவலங்களை உருக்கமுடன் சித்தரிக்கும் ‘மகிழ்ச்சியில் புதைந்த சோகம்’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து மூடநம்பிக்கைகளால் ஏழைக் குடும்பங்கள் வாழ்க்கை சீரழிவதை விளக்கிடும் சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய ‘வெங்காயம்’ திரைப்படம் திரையிடப்பட்டது. மதியம் உணவைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வே. மதிமாறன், ஓவியா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
ஆரிய-திராவிடப் போராட்டங்களின் அடிப் படையில் பார்ப்பனர்கள் கட்டமைத்த புராணங்கள் திராவிடர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கற்பனைகளே என்பதை மதிமாறன் விளக்கினார். தீபாவளியை தமிழர்கள் கொண்டாடக் கூடாது என்று முதலில் அறிவித்த தலைவர் பெரியார்தான் என்று கூறிய மதிமாறன், அரசு ஊழியர்களுக்கு ‘தீபாவளி’க்கு வழங்கப்படும் ‘போனசை’ தமிழர் திருநாளான பொங்கலுக்கு மாற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராட வேண்டும் என்றார். அதேபோல் திருமணமான இணையர்கள் ‘தலை தீபாவளி’ கொண்டாட மாமனார் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து, பெரியார்-அம்பேத்கர் பிறந்த நாளில் மாமனார் வீட்டுக்கு விருந்துக்குச் செல்லும் வழக்கத்தை உருவாக்குவதோடு, மருமகனுக்கு மாமனார் குடும்பம் பரிசுகளை வழங்குவதற்கு மாற்றாக மருமகன் தனது செலவில் மாமனார் குடும்பத்தினருக்கு பரிசுகளை வழங்கலாம் என்ற கருத்தை முன் வைத்தார்.
அடுத்து ஓவியா பேசுகையில், ‘தீபாவளி’யை கொண்டாடாத மு°லிம், கிறித்துவர்கள்கூட தீபாவளி நாளில் வீடுகளில் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். விழாக்கள், கொண்டாட்டங்களை விரும்பும் உளவியல் மக்களை சிந்திக்க விடாமல் தடுத்து விடுகிறது. தீபாவளியை கொண்டாடவே கூடாது, புறக்கணிக்க வேண்டும் என்று பெரியார் இயக்கம் நீண்டகாலமாக பரப்புரை செய்து வருகிறது. எனவே கொண்டாடவே கூடாது என்ற கொள்கை களுக்கு நாம் மாற்று தேடுவது சரி தானா” என்ற விவாதத்தை முன் வைத்தார்.
நிறைவாகப் பேசிய கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இந்தப் புதிய முயற்சியை விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும் என்றே நாங்களும் விரும்புகிறோம் என்று கூறியதோடு, தோழர்களின் விவாதத்துக்கும் சிந்தனைக்கும் சில கருத்துகளை முன் வைத்தார்.
திராவிடர்களை ஆரியர்கள் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட நாள் என்பதே தீபாவளியின் அடிப்படை தத்துவம். ஆனால், மதத்துக்கான உள்ளடக்கத்தோடு தீபாவளிக்கு வேறு பல புதிய பரிமாணங்கள் இணைந்து நிற்கின்றன. மதப் பண்டிகை என்பதைக் கடந்து, ‘வர்த்தகத் திருவிழா’ வாக இது உருமாற்றம் பெற்றுள்ளது. வணிகர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பொருள்களை விற்பனை செய்வதற்கான நல்ல வாய்ப்பாகக் கருதி, நுகர்வு வெறியைத் தூண்டுகிறார்கள். மதம் சார்ந்த உணர்வுகளும் கொண்டாட்டங்களும் இணையும் போது, அதற்காக ஒவ்வொரு குடும்பமும் தங்கள் சக்திக்கான எல்லைகளையும் கடந்து செலவிடக் கூடிய மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. எனவே, மதக் கொண்டாட்டங்களுடன் நுகர்வுக் கலாச்சாரமும் இணைந்து நிற்பதால் மதங்களில் தீவிரப் பற்று இல்லாதவர்கள்கூட நுகர்வுக் கலாச்சாரத்தையும் அதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் சமூகச் சூழலையும் கருதி தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
‘தீபாவளி’க்கான கதைகளும் வெவ்வேறாக கூறப்படுகின்றன. வடமாநிலங்களில் வணிகர்கள் புதுக் கணக்கு தொடங்கும் நாளாகவும் சமணர்கள் அம்மதத்தைத் தோற்றுவித்த ‘மகாவீரர்’ இறந்த நாளாகவும் தீபாவளியை நினைவு கூர்கிறார்கள். அன்றைய தினம் வீடுகளில் அகல் விளக்கை ஏற்றி தீப ஒளி’ நாளாக சமணர்கள் பின்பற்றுகிறார்கள். தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் நரகாசுரனை அழித்ததை தீபாவளியாகக் கொண்டாடச் செய்து விட்டார்கள்.
எனவே இந்தப் பண்டிகைக்கான காரணங்கள் வெவ்வேறாக மாறுபட்டுக் கிடக்கின்றன. மோடி இந்தப் பண்டிகைகளுக்கு அரசியல் முலாம் பூசி ‘தேசியத் திருநாளாக’ அறிவிக்கிறார். காஷ்மீருக்குப் போய் அங்கே இராணுவத்தினரோடு தீபாவளியைக் கொண்டாடி, ‘தேசபக்தியோடு’ தீபாவளியை முடிச்சப் போடுகிறார்.
நம்மைப் போன்ற பெரியாரிஸ்டுகள், இன உணர்வு பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் தீபாவளியைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறோம். ‘தீபாவளி கொண்டாட வேண்டாம்’ என்ற பரப்புரையை துண்டறிக்கை, பொதுக் கூட்டங்கள் வழியாக வலியுறுத்தி வருகிறோம். நம்மைத் தவிர, வேறு பல காரணங்களுக்காக தீபாவளியை கொண்டாட மறுப்போரும் ஆங்காங்கே பரவலாக இருக்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி ஒன்றியத்தைச் சார்ந்த 12 பட்டி கிராமத்தினரும் கடந்த 56 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடுவது இல்லை. அவர்கள் புறக்கணிப்புக்குக் காரணம் பகுத்தறிவு அல்ல; மாறாக பொருளாதார காரணங்கள். ‘தீபாவளி’ வரக்கூடிய காலம் விவசாயத்திற்கு பணம் புரட்ட வேண்டிய காலம் என்பதால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எனவே கடன் சுமையைத் தவிர்க்க தை முதல் நாள் பொங்கலை கொண்டாடலாம். தீபாவளி வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து ஊர்ப் பெரியவர்கள் தங்கள் கிராம தெய்வமான ‘காடு காவலர் சாமி’ முன் 56 ஆண்டு களுக்கு முன்பு ‘சத்தியம்’ செய்தனர். அந்த அடிப்படையிலேயே அவர்களின் தீபாவளி புறக்கணிப்பு தொடருகிறது.
தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதில்லை என்ற பழக்கத்தை வேறு சில கிராமங்கள் பின்பற்றி வருகின்றன. தங்கள் கிராமத்தில் கூட்டமாக வந்து போகும் பறவைகள், பட்டாசு சத்தங்களால் பாதிப்புக்கு உள்ளாவதே இதற்குக் காரணம். தங்கள் ஊர் நீர் நிலைகளில் கூடும் பறவைகள், அரச மரத்தை வாழ்விடமாகக் கொண்ட பழம் தின்னி வவ்வால்கள் பட்டாசு சத்தங்களால் பாதிக்கப்படுவதை இவர்கள் மனித நேய உணர்வுடன் பார்க்கிறார்கள். நெல்லை அருகே உள்ள கூந்தங்குளம், கோவை அருகே உள்ள சிட்டாம்பாளையம், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கருப்பெரும்பாக்கம், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஊனத்னூர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே உள்ள ராயன்டபுரம் கிராமங்களில் பறவைகள் நலனைக் கருதி பட்டாசுகள் வெடிப்பதில்லை என்று ‘தமிழ் இந்து’ நாளேட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை கூறுகிறது.
பட்டாசுகள் வெடிப்பதால், சுற்றுச் சூழல் மாசுபடக்கூடாது என்று கருதுவோரும் குழந்தைகள் உரிமைகளில் கவலை கொண்டோரும் அவர்கள் கண்ணோட்டத்தில் ‘தீபாவளி’யை கொண்டாடுவதில்லை. இப்படி தீபாவளி மறுப்புக்கு ‘மதம்’ சார்ந்த காரணங்களைத் தாண்டி, வேறு பல காரணங்களும் இருக்கவே செய்கின்றன. ‘தீபாவளி’ மறுப் போருக்கான இயக்கத்தில் இவர்களையும் இணைத்து, ஆங்காங்கே ஒவ்வொரு ஊரிலும் தீபாவளி நாளில் அதை மறுப்போர் குடும்பமாகக் கூடி மதமற்ற வாழ்க்கை முறை பற்றி கலந்து விவாதித்து, சமூகப் பார்வை கொண்ட திரைப்படங்கள், கலை நிகழ்வுகளை நடத்தி, தீபாவளி எதிர்ப்பை வேறு வடிவங்களில் முன்னெடுப்பதற்கான ஒரு முயற்சிதான், இந்த ஒன்று கூடல் என்று விளக்கினார் விடுதலை இராசேந்திரன்.
பெரியாரிஸ்டுகள்கூட தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிப்பதில்லை என்றாலும் வேறு நிகழ்வுகளில் பட்டாசுகளை வெடிக்கிறார்கள் என்பது உண்மை. அதில் அடங்கி யுள்ள குழந்தை உழைப்புச் சுரண்டல் பற்றி நாம் உணருவதில்லை. எனவே இன்றைய நாளில் எந்த நிகழ்வுகளிலும் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம் என்ற உறுதியை ஏற்போம் என்ற வேண்டுகோளையும் விடுதலை இராசேந்திரன் முன் வைத்தார். மாவட்ட செயலாளர் உமாபதி, வரவேற்புரையும் நன்றியும் கூறினார். நுழைவுக் கட்டணமாக குறைந்தது ரூ.50 என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கூடுதலாகவே நன்கொடைகளை வழங்கினர். கழகக் குடும்பத்தின் குழந்தைகள் பங்கேற்ற நடனம், பேச்சுகளும் இடம் பெற்றன. 6.30 மணியளவில் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 06112014 இதழ்

You may also like...

Leave a Reply