எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விடைபெற்றுக் கொண்டார்!
திராவிடர் இயக்கத்தின் ஆய்வாளர் என்பது மட்டுமல்ல; அந்த இயக்கத்தின் தேவையையும் அந்த இயக்கம் தமிழகத்தில் உருவாக்கிய வரலாற்றுத் திருப்பத்தையும் ஆழமாக உணர்ந் தவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். ஆங்கில அறிவுலகில், திராவிடர் இயக்கத்தின் சமூகப் பார்வையை அதற்கான மொழிகளின் ஊடாக முன்வைத்தவர். இது அவருக்கே உரித்தான தனித்துவம். இந்த இடத்தை இட்டு நிரப்பக் கூடிய ஒருவர், அவருக்கு நிகராக இல்லை என்பதே அவர் விட்டுச் சென்றுள்ள வெற்றிடம்.
பொருளாதார – சமூகவியல் துறைகளில் மிகச் சிறந்த பேராசிரியர்; உலகநாடுகளின் பல பல்கலைக் கழகங்களில் கவுரவப் பேராசிரியர்; மிரள வைக்கும் ஆங்கில எழுத்து வன்மை; உறுதியான பார்ப்பன எதிர்ப்பாளர்; இம்மியளவும் சமரசத்துக்கு இடமில்லாமல் இறுதி வரை வாழ்ந்தவர். தனது ஆழமான புரிதலை – சிந்தனையை ஆங்கில புலமையை-தன்னுடைய அடையாளமாக்கிடவோ அதை வெளிப்படுத்தும் அரிதாரப் பூச்சுகளையோ முழுமையாக வெறுத்து ஒதுக்கியவர் அவர்.
உணர்ச்சியும் துடிப்பும் மிக்க உரையாடல் களுடன் சக மனிதர்களை நேசித்து, விளிம்பு நிலை மானுடனாகவே வாழ்ந்து காட்டியவர். ஜாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, பெண்ணுரிமை கொள்கை களில் தன்னுடைய உறுதியைப் பற்றி அவர் தம்பட்டம் அடிப்பதே இல்லை. தனது வாழ்க்கை யில் இயல்பாக செயல்படுத்திக் காட்டினார். அவர் வளர்ந்து ஊக்கப்படுத்திய மாணவர்களின் சமூகப் பின்னணியும் குடும்பத்தில் பின்பற்றிய ‘ஜனநாயக’ முறையுமே இதற்கு சான்றுகள்.
நாங்கள், 1996 ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி, தோழர்களுடன் பெரியார் திராவிடர் கழகத்தைத் தொடங்கிய போது, பாண்டியன், எனக்கும் கழகத்துக்கும் மிகப் பெரும் துணையாக நின்றார். தலித் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார். தலைநகரில் பல்வேறு தலித் அமைப்புகளையும் மனித உரிமை அமைப்பு களையும் ஒன்று திரட்டி, ‘சமூக நீதி மீட்பு’ இயக்கம் ஒன்றை உருவாக்கி, அய்.அய்.டி.யின் தலித் விரோதப் போக்கை எதிர்த்து, தொடர்ந்து போராடிய காலத்தில் பாண்டியன் அதற்கு உறுதியோடு துணை நின்றார். இந்த திசையில் எங்களுக்கு புதிய வெளிச்சத்தைக் காட்டியவர் பாண்டியன். ‘எக்னாமிக்கல் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ ஏட்டில், அய்.அய்.டி.யின் பார்ப்பன ஆதிக்கத்தையும் அதற்கு எதிராக நடந்த போராட்டத்தையும் எழுதி, இந்தியா முழுதும் கவனத்தை ஈர்க்கச் செய்தார். அதற்காக அதிகார வலிமை கொண்ட பார்ப்பனர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளை அவர் சந்தித்தார். அதற்காக அசைந்து கொடுக்கவில்லை.
டெல்லி ‘இராமலீலா’ மைதானத்தில் ‘இராவணன்’ உருவத்தை எரிக்கும் ‘இராமலீலா’. திராவிடர்களை இழிவுபடுத்துவதை சுட்டிக் காட்டி பெரியார் திராவிடர் கழகம் – ‘இராமன்’ உருவத்தை எரிக்கும் ‘இராவண லீலா’வை நடத்தியபோது இந்தப் போராட்டத்தையும். திராவிடர் இயக்கத்தின் இராமாயண எதிர்ப்பு மரபையும், அதன் சமூக வரலாற்றுப் பின்னணி களோடு விளக்கி, ‘அவுட் லுக்’ இதழில் விரிவான கட்டுரையை எழுதினார். பெரியாரை தமிழர்களின் விரோதிகளாக சித்தரித்து ‘குணா’ போன்றவர்கள் நூல் எழுதியபோது, அதற்கு மறுப்பாக ‘விடுதலை’ யில் நான் எழுதிய மறுப்புக் கட்டுரைக்காக விவாதிக்கவும் விளக்கங்களைப் பெறவும் எனக்கு உதவியவர்கள் இருவர். ஒருவர் எம்.எ°.எ°. பாண்டியன், மற்றொருவர் பேராசிரியர் எ°.ஏ. வீரபாண்டியன். அந்த நூலுக்கு எம்.எ°.எ°. பாண்டியன்தான் அணிந்துரையும் வழங்கினார்.
பெரியார்திராவிடர் கழகம், அதற்குப் பிறகு திராவிடர் விடுதலைக் கழகச் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ்களை இணையம் வழியாக படித்து, அவ்வப்போது கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார். ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மனுசா°திர எதிர்ப்பு மாநாடு, ஜாதி வெறி சக்திகளுக்கு எதிராக நடத்திய பேரணி குறித்து ‘எக்னாமிக்கல் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’யில் எழுதினார். ஆங்கில இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் நூலாக வெளி வர இருப்பதை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது, இந்த நூலை கொளத்தூர் மணிக்கும், உங்களுக்கும், காணிக்கையாக்கப் போகிறேன் என்றார். ‘எதற்கு பாண்டியன், இந்த சடங்கு?’ என்று நான் கேட்டபோது, “உங்களுக்கு தகவல் கூறினேன்; கருத்து கேட்க வில்லை” என்று உரிமையோடு கடிந்து கொண்டார்.
கடைசியாக நான் அவரிடம் அக்டோபர் 9 ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அன்றைய ‘இந்து’ நாளேட்டில் வெளிவந்த ‘எதிர்ப்புகள் இல்லாத அரசியல்’ என்ற இந்துத்துவ அரசியலின் ‘காய் நகர்த்தும்’ அணுகுமுறை பற்றிய கட்டுரை அது. பாண்டியனிடம் இது குறித்து விளக்கம் பெற வேண்டும் என்று எனக்கு தோன்றியது. தொலைபேசியில் அதிக நேரம் பேசாத பழக்கம் உள்ள அவர், அன்று அதிகமாகவே பேசினார். டெல்லிக்கு வருமாறு என்னை அழைத்தார். தனது மகள் பிரீத்தி, ஜாதி-மதங்களில் நம்பிக்கை இல்லாத பெண்ணாக வளருவதாகவும், தான் எந்தக் கருத்தையும் அவரிடம் திணிப்பதில்லை என்றும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
பாண்டியனின் துணைவியார் முனைவர் ஆனந்தி, பெண்ணுரிமை குறித்து எழுதிய ஆழமான ஆங்கில ஆய்வை நான் தமிழாக்கி, ‘விடுதலை’யில் வெளியிட்டேன். அப்போது முனைவர் ஆனந்தி, இலண்டனில் இருந்தார். பாரீ° பல்கலைக்கழகத்துக்கு விரிவுரையாற்றச் சென்ற பாண்டியன், அந்தத் தொகுப்பை எடுத்துப் போய் இலண்டனில் முனைவர் ஆனந்தியிடம் தந்து, அங்கிருந்து என்னுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அது பிறகு ‘அய்விட்’ எனும் நிறுவனத்தால் நூலாகவும் வெளியிடப்பட்டது.
‘எம்.அய்.டி.எ°.’நிறுவனத்தின் பார்ப்பன மேலாதிக்கம், அவரது திறமையை அங்கீகரிக்க மறுத்தபோது, பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறியவர் பாண்டியன். அதற்குப் பிறகு சர்வதேச நாடுகளின் பல்கலைக்கழகங்கள் அவரை போட்டி போட்டுக் கொண்டு அழைத்தன.
ஜவகர்லால் நேரு பல்கலையில் மிகப் பெரும் ‘அறிவுஜீவிகள்’ கூடிய அரங்கத்திலும்கூட அவரது கோட்பாட்டு ரீதியான பார்ப்பன எதிர்ப்பு கருத்துகள் அரங்கை அதிர வைத்து விடும் என்று அவரது மாணவர்கள் பெருமையுடன் கூறு வார்கள். அடையாறில் உள்ள ‘எம்.அய்.டி.எ°.’ நிறுவனத்துக்கு ஒரு மிதிவண்டியில் தான் அவரது திருவான்மியூர் இல்லத்திலிருந்து நாள்தோறும் சென்று வருவார். இறுதி வரை மிதிவண்டிதான் அவரது வாகனமாக இருந்தது. இளம் பேராசிரியராக இருந்த காலத்திலும் திருமணத் துக்கு முன், முனைவர் ஆனந்தியுடன் ‘நட்பு-காதலாக’ அவர் வாழ்ந்த காலத்திலும், திருமணத்துக்குப் பிறகும் அவருடன் தொடர்ந்து குடும்பங்களின் உறவுகளாக எங்களது தோழமை தொடர்ந்தது. 2009க்குப் பிறகு அவர் டெல்லிக்குச் சென்ற பிறகு அவ்வப்போது அலைபேசியில் பேசுவதோடு சரி; நேரில் சந்திப்பு மிகவும் குறைந்து விட்டது. ஆனாலும், எனது நினைவுகளில் அழுத்தமான பதிவுகளுடனே அவர் எப்போதுமே ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தார்.
சில மணி நேரங்களிலேயே அவரது மரணம் நேர்ந்துவிட்டது. பாண்டியன் மரணமும் அவர் இல்லாமல் போய் விட்டாரே என்ற கவலை அழுத்தமாகவே அவ்வப்போது பாதிக்கிறது. அவரது நினைவுகள் வந்து போய்க் கொண்டே இருக்கின்றன. பாண்டியன் என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் பேசும்போது வழமையாக பயன்படுத்தப்படும் அந்த சடங்குச் சொல்லை என்னிடம் உச்சரிக்கவே மாட்டார். அதுதான் “வணக்கம்!” இப்போது பாண்டியனிடம் முதல் முறையாக அதை பயன்படுத்தத் தோன்றுகிறது. “வணக்கம், பாண்டியன்!”
விடுதலை இராசேந்திரன்
(குறிப்பு: இயக்க இதழில் தனிப்பட்ட செய்திகள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள நேரிட்டமைக்காக தோழர்கள் மன்னிக்கவும்)
பெரியார் முழக்கம் 20112014 இதழ்