தலையங்கம் – படைப்பாளிகளுக்கு எதிரான மிரட்டல்!
சமூகம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வரும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலுக்கு மதவாத சக்திகள், ஜாதியவாதிகளைத் தூண்டிவிட்டு நடத்தி வரும் போராட்டம் வன்மையான கண்டனத்துக்கு உரியது. இது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவாகும். இந்த நிலையில் படைப்பிலக்கியவாதிகள் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நம்பிக்கையைத் தருகிறது.
திருச்செங்கோடு தேர்த் திருவிழா நாளில் திருமணமான ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் உறவு கொள்ளும் ஒரு பழக்கம், சில நூறு ஆண்டுகளுக்கு முன் நிலவியதை கதைக்களம் சுட்டுகிறது என்பதாலேயே திருச்செங்கோட்டையே இழிவுபடுத்துவதாக மதவாத சக்திகள், உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கதவடைப்பு நடத்தும் அளவுக்கு எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளனர். ஒரு படைப்பாளி, சமூக தொன்மங்களை தனது கற்பனை கலந்து படைப்பாக்கும் உரிமைகளை அச்சுறுத்துவது மிக மோசமான வன்முறை என்றே கூற வேண்டும். தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் சங்பரிவாரங்கள், இத்தகைய பிரச்சினைகளை ஆங்காங்கே உருவாக்கி வருகின்றன. அந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது தெரிகிறது. இந்த நாவல் வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது எதிர்ப்புகள் கிளம்புவதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ள முடியும்?
அய்வருக்குப் பத்தினியான திரவுபதியை மதிப்பவர்கள், குந்திதேவி, சூரியனோடு உறவுகொண்டு கர்ணனைப் பெற்றாள் என்பதை பயபக்தியுடன் ஏற்பவர்கள், ஒரு படைப்பிலக்கியத்தை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்? இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள ‘இந்து’ தர்மமே ‘நியோகாதர்மம்’ என்ற தர்மத்தைப் பேசுகிறது. இதன்படி குழந்தை இல்லாத ஒரு பெண், வேறு ஒரு ஆணோடு உறவுகொண்டு குழந்தைப் பெறுவதற்கு இந்து தர்மம் அனுமதிக்கிறது. இந்த ‘நியோகாதர்மம்’ பற்றி ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ளது: கேரளாவில் நம்பூதிரிப் பார்ப்பனர்களோடு உறவுகொண்டு குழந்தைப் பெறுவதை அங்கே உள்ள பார்ப்பனரல்லாதார் பெருமையாகக் கருதிய வழக்கம் இருந்தது. நம்பூதிரிப் பார்ப்பனர், எந்த வீட்டுக்குள்ளும் நுழையும் உரிமைகளை வைத்திருந்தார்கள். வீட்டு வாசலில் ஒரு சொம்பை அடையாளமாக விட்டுச் சென்றால், உள்ளே நம்பூதிரி இருக்கிறார் என்பதற்கான அடையாளம். கணவனாக இருந்தாலும் வீட்டிற்குள்ளே நுழைய முடியாது. இந்த வரலாற்று உண்மைகளை அம்பேத்கரும் பெரியாரும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.
தாய்வழிச் சமூகமாக சமூகம் இருந்த காலத்தில் உறவுகள் எப்படி இருந்தன? மிகச் சிறந்த சமூகவியல் ஆய்வாளரான ராகுல் சாங்கிருத்தியாயன் கூறுகிறார்:
“தாய் வழிச் சமூகம் நிலவிய காலத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணமுறை கிடையாது. கணவன் மனைவி முறையும் இருக்கவில்லை. தன் தாயின் குடும்பத்தைச் சார்ந்த எந்த ஆணோடும் ஒரு பெண் கர்ப்பம் தரிக்கலாம். இக்காலத்தில் ஆண்-பெண் உறவை, திருமணத்தை ஏங்கல்ஸ் “குழுத் திருமணம்” (Group Marriage) எனக் குறிப்பிடுகிறார். அதாவது திருமணத்தில் தனி மனிதனுக்கில்லால், குழுவுக்கு முக்கியத்துவம் இருந்தது. தாய் வழிக் குடும்பத்திலுள்ள அனைவரையும் ஆண்-பெண் எனும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தால், ஒரு பிரிவு மற்ற பிரிவுடன் கணவன் மனைவி தொடர்பு கொண்டிருந்தது. ஒரு குடும்பத்தில் ‘பெண்’ என்றால் மனைவி என்றும், ‘ஆண்’ என்றால் கணவன் என்றும் நிலை இருந்தது” என்று எழுதுகிறார், சாங்கிருத்தியாயன். (நூல்: ‘மனித சமுதாயம்’ என்.சி.பி.எச். வெளியீடு)
இந்த சமூக வரலாறுகளையும் இவர்கள் நம்பும் கடவுள் புராணங்களையும் தீ வைத்து எரித்துப் பொசுக்கிட வேண்டும் என்று இவர்கள் கூறுவார்களா?
குழந்தை பெறுவதற்கான வாய்ப்பில்லாதவர்களுக்கு செயற்கைக் கருவூட்டல், சோதனைக் குழாய் குழந்தை முறைகளும், அதற்காக விந்து வங்கிகளும் வந்துவிட்டனவே. அதையெல்லாம் எதிர்த்துப் போராடுவார்களா? குழந்தைகளை வாடகைக்கு வயிற்றில் சுமக்கும் பெண்கள் அதை தொழிலாக செய்கிறார்களே. இத்தகைய பெண்கள் குஜராத்தில்தான் அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றனவே. இவையெல்லாம் இவர்களின் பார்வையில் ‘புனிதம்’ கெட்டவையா? ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளராகவே போற்றப்படுகிற ஜெயமோகன், ‘விஷ்ணுபுரம்’ நாவலில் இப்படிப்பட்ட உடலுறவுகளைப் பற்றி விவரிக்கிறாரே!
வரலாற்றுக் காரணம் ஏதும் இல்லாமலே ஒரு நூலை தடைசெய்ய வேண்டும் என்று கூப்பாடு போடுவதில் நியாயம் இருக்கிறதா? பெருமாள் முருகன் எழுதியுள்ளதுபோல கடந்த நூறாண்டுகளில் சமூகத்தில் அப்படிப்பட்ட உறவு முறைகளே இருந்ததுஇல்லை என்று இவர்களால் கூற முடியுமா?
“சூத்திரர்களை” பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று கூறும் ‘மனுசாஸ்திரம்’, இப்போதும் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதே, இதைத் தடை செய்ய வேண்டும் என்று இந்த ‘சங்பரிவாரங்கள்’ கேட்டார்களா? பெரும்பான்மை மக்களை சா°திரப்படியே இழிவுபடுத்தும் ஒரு கேவலத்தை இந்த சமூகம், இன்னும் சுமந்து கொண்டுதானே நிற்கிறது?
எதிர்ப்பாளர்கள் தங்கள் அமைப்பையோ, கோரிக்கையையோ முன் வைக்காமல் மிகவும் சூழ்ச்சியாக இந்த நூலுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது. இந்த ஆபத்தான போக்கை எதிர்த்து தமிழ் நாட்டில் அரசியல் தலைவர்கள் இயக்கத் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்!
பெரியார் முழக்கம் 15012015 இதழ்