பெங்களூரில் மாநாடு போல் நடந்த பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள்

பெங்களூர், சிவாஜி நகர்,
வேளாண்மை அறிவியல் நிறுவன அரங்கில் ‘கற்பி ஒன்று சேர் ’ அமைப்பின் தலைவர் ஜார்ஜ் ஒருங்கிணைப்பில் 26-01-2015 திங்கள் அன்று பிற்பகல் 3-00 மணி முதல் 8-00 மணிவரை பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு நடந்தேறியது.
நிகழ்ச்சி கர்நாடக மாநில ரிபப்ளிகன் கட்சி, சமதா சைனிக் தள் ஆகியவற்றின் தலைவராகிய முனைவர் வெங்கடசுவாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்டையா, சப்தகிரி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேந்திரநாத், பெங்களூர் பல்கலைக் கழக சமூகவியல்துறை தலைவர் முனைவர் சமதா தேஷ்மானே ஆகியோர் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சமூகப் புரட்சிப் பணிகளை தமிழிலும், கன்னடத்திலும் விரிவாகப் பேசினர். கூட்டத் தலைவரும் கன்னட தலைவர்களும் பெரியாரைப் பற்றியும் அவரது போராட்டங்களைப் பற்றியுமே அதிகம் பேசினர்.
நிகழ்ச்சியில் பெரியார், அம்பேத்கர் ஆகியோரை பற்றிய ஆறு, ஆறு பாடல்களைக் கொண்ட குறுவட்டுகள் தமிழ், கன்னட மொழிகளில் வெளியிடப் பட்டன. பாடல்களைத் கழகத் தோழர் சித்தார்த்தனும், பாடகி சுஜாதாவும் எழுதி, தோழர்கள் சுஜாதா, கோபிநாத் ஆகியோர் பாடியிருந்தனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் அம்பேத்கரைப் பற்றிய ஒரு தமிழ்ப் பாடலுக்கும் பெரியாரைப் பற்றிய ஒரு கன்னடப் பாடலுக்கும் மாணவர்கள் நடனம் ஆடினர். குறுவட்டு வெளியீட்டைத் தொடர்ந்து மேட்டூர் கருப்பரசன் கலைக் குழுவினரால் வீதி நாடகங்கள் நடத்தப் பட்டன. அவற்றை மக்கள் வெகுவாக வரவேற்றனர். குறிப்பாக மூன்றில் ஒரு பங்கினராக இருந்த கன்னட மக்களும், கன்னடத் தலைவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

பெரியார் முழக்கம் 05022015 இதழ்

You may also like...

Leave a Reply