எழுத்தாளர்கள் குணா-கண்ணன் மீது பாய்ந்த ஜாதி வெறி
பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலை திருச்செங்கோடு ஜாதிவெறி சக்திகள் அச்சுறுத்தி முடக்கியதுபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இரண்டு தலித் இளைஞர்கள் ஜாதி வெறிக்கு எதிராக எழுதிய நூலுக்கு ஜாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை ஊரைவிட்டே ஓட வைத்து விட்டனர். அவர்களின் வீடுகள் தாக்கப்பட்டன; உடைமைகளும் ஜாதி வெறியர்களால் அழிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி வட்டம் குளந்திரான்பட்டு கிராமத்தைச் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இளைஞர் துரை. குணா, ‘ஊர் கூடி தேர் இழுப்பவர்கள்’ என்று எழுதிய நாவலுக்கு ஊர் ஜாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஊரில் குடியிருக்க விடாமல் அச்சுறுத்தி வெளியேற்றி விட்டனர். அதே மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சார்ந்த தலித் தோழர் ம.மு. கண்ணன் எழுதிய ‘கானாயீனாவின் கணினி’ என்ற நாவல், ஜாதி வெறி குறித்துப் பதிவுகளை செய்திருந்ததால், அவரது குடிசை வீட்டைக் கொளுத்தி, அவர் சேமித்து வைத்திருந்த அரிய நூல்களையும் ஜாதி வெறியர்கள் எரித்துவிட்டனர். 3 ஆண்டுகளாக ஊருக்கும் செல்லமுடியாமல் ஊரை விட்டு வெளியேறி விட்டார் கண்ணன்.
துரை. குணா, கண்ணனின் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று, 8.2.2015 மாலை 4 மணியளவில் எழும்பூர் இக்ஷா அரங்கில் நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது. நிகழ்வில் இருவரும் பங்கேற்று. ஜாதி வெறியர்களால் சந்தித்த அடக்குமுறைகளையும் காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்காததையும் விவரித்துக் கூறினர். துரை. குணாவின் தந்தை, அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வரக்கூடிய தோழர். அவரது நூலுக்கு முன்னுரை வழங்கியதும், நூலை நிகழ்ச்சியில் வெளியிட்டதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்தான் என்று கூறிய குணா, தனக்கு ஜாதி வெறியர்களால் மிரட்டல், தாக்குதல் நடந்தபோது தனக்கு உதவிட, கட்சித் தோழர்கள் முன்வரவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
நிகழ்வில், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அமுதன், பேராசிரியர் அரசு, எழுத்தாளர் பீர் முகம்மது, அ. மார்க்ஸ், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மதவாத சக்திகள், ஜாதி வெறி சக்திகளை இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் ஆபத்தைகளையும் ஜாதி எதிர்ப்புக்கான முனைப்பான போராட்டங்களை எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், மனித உரிமையாளர்கள், முற்போக்கு இயக்கங்கள், தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
பெரியார் முழக்கம் 12022015 இதழ்