தலையங்கம் – ‘கோட்சே’யின் குண்டுகள் ஓய்ந்திடவில்லை!
மகாராஷ்டிராவில் பார்ப்பன மதவெறியின் குண்டுக்கு மற்றொரு போராளி பலியாகிவிட்டார். 83 வயதான மூத்த பொதுவுடைமைத் தோழர் பன்சாரா, தனது துணைவியார் உமாவுடன் கடந்த பிப்.16 அன்று காலை நடைப்பயிற்சியை முடித்துக் கெண்டு இல்லத்துக்குள் நுழைய இருந்த நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த இரு நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பன்சாராவின் உடலுக்குள் 3 குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் கடந்த பிப்.20ஆம் தேதி இந்த முதுபெரும் போராளி வீர மரணத்தை தழுவினார். தலையில் குண்டு பாய்ந்த அவரது துணைவியார் தீவிர சிகிச்சையில் உயிருக்குப் போராடி வருகிறார். சங்பரிவாரங்களின் வரலாற்றுப் புரட்டுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தவர் பன்சாரே. மராட்டிய வீரன் சிவாஜியை இந்துமத வெறி அடையாளத்துக்குள் திணித்துக் கொண்டிருக்கும் சங்பரிவாரங்களை அம்பலப்படுத்தி ஏழை எளிய மக்களின் நலனை நேசித்தவனே சிவாஜி என்று விளக்கி ‘சிவாஜி கோன் சோட்டா?’(யார் இந்த சிவாஜி?) நூலை எழுதியவர்.
(அன்றைக்கு திராவிடர் இயக்கம்கூட சிவாஜியை இதே கண்ணோட்டத்தில் தான் அணுகியது. அறிஞர் அண்ணா எழுதி அவரே ‘காகபட்டர்’ வேடம் ஏற்று நடித்ததுதான் “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” நாடகம், பார்ப்பனர்கள் சிவாஜியின் அரசை சீரழித்த வரலாற்றைப் படம் பிடித்தது.)
மராட்டியப் பார்ப்பனர் கோட்சேவுக்கு சிலை வைக்க பார்ப்பனப் பரிவாரங்கள் ஆணவத்தோடு கிளம்பியதை எதிர்த்து சிவாஜி பல்கலையில் கண்டனக் குரல் கொடுத்தார் பன்சாரே. அப்போதே பார்ப்பனக் கூட்டம் ஒன்று கூட்டத்திலே எதிர்ப்பு தெரிவித்தது. கோலாப்பூரில் பல இலட்சம் செலவில் உணவுப் பொருள்களையும் நெய்யையும் தீயில் கொட்டி பார்ப்பனர்கள் நடத்திய யாகத்தை எதிர்த்து மக்களை திரட்டி போராடினார். ‘விவேக் ஜக்குதி’ என்ற பெயரில் அறிவுப் பயணம் எனும் பரப்புரை இயக்கத்தை நடத்தி மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பினார். கோலாப்பூரில் நெடுஞ்சாலை சுங்கக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடினார்; தொழிற் சங்கப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
மூடநம்பிக்கையை எதிர்த்து அறிவியக்கம் நடத்திய மருத்துவர் நரேந்திர தபோல்கர் 2013 ஆம் ஆண்டில் நடைப் பயிற்சியின்போது இதேபோல் பம்பாயில் சுட்டுக் கொல்லப்பட்டார். பகுத்தறிவுப் பிரச்சாரத் தோடு ஜாதி, தீண்டாமைக் கொடுமைகள், ஜாதி பஞ்சாயத்துகளுக்கும் எதிராக போராடிய போராளி அவர். இன்றும் அவரது கொலையின் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவில்லை. கொலையாளி ஒருவன்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. தபேல்காரை பார்ப்பனிய மதவெறி வீழ்த்தினாலும் அவரது துணைவியார் ஷைலா, மனநல மருத்துவரான அவரது மகன் ஹமீத், தபோல்கரின் மகள், மருமகன் என்று அவரது குடும்பமே தந்தை விட்டுச் சென்ற பகுத்தறிவு இயக்கத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.
காந்தியின் மார்பை நோக்கி நீண்ட, பார்ப்பன கோட்சேக்களின் துப்பாக்கிகளிலிருந்து புறப்பட்ட குண்டுகள், இப்போதும் வெடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. மீண்டும் ‘இராம ராஜ்யம்’ அமையப் போகிறது; ‘மனுசா°திரம்’ சட்டமாகப் போகிறது என்ற நம்பிக்கையோடு வரலாற்றில் தாங்கள் இழந்த ‘பேஷ்வாக்கள்’ ஆட்சியை மீண்டும் அமைக்கத் துடிக் கிறார்கள். அந்த வெறிதான் தொழிலாளர்களுக்கும் மதவாதத்துக்கும் எதிராகவும் போராடிய 83 வயது முதியவரையும் நெஞ்சில் ஈரமின்றி இப்போது பிணமாக்கியிருக்கிறது.
பார்ப்பனிய கொடுங்கோன்மைக்கு எதிரான களம் சூடேற்றப்பட வேண்டும். அதில் எந்த தியாகத்துக்கும் தயாராக உள்ள இளைஞர்களின் பெரும்படை முரசு கொட்டிப் புறப்பட்டாக வேண்டும் – இது வரலாறு விடுக்கும் அறைகூவல். வீரமரணமடைந்த இந்த போராளிகள் சிந்திய இரத்தத்தில் பார்ப்பனிய மதவாத எதிர்ப்பாளர் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டிய உறுதி இதுவாகவே இருக்க முடியும்!
இலட்சியப் போராளிகளுக்கு நமது வீரவணக்கம்.
பெரியார் முழக்கம் 26022015 இதழ்