தலையங்கம் – பார்ப்பன பரிவாரங்களின் மிரட்டல்!
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி முன் சங் பரிவாரங்கள் வன்முறை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி ஊழியர் மீது கடும் தாக்குதல் நடத்தி காமிராவையும் உடைத்திருக்கிறார்கள். காரணம் இதுதான்: மகளிர் நாளை முன்னிட்டு, ‘பெண்களுக்கு தாலி தேவையா?’ என்ற சிறப்பு விவாதம் ஒன்றை இந்த நிறுவனம் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது. விவாதம் ஒளிபரப்புவதற்கு முன்பே தடை செய்யவேண்டும் என்பதே சங்பரிவாரங்களின் கோரிக்கை. மிரட்டலுக்கு அஞ்சி தொலைக்காட்சி நிறுவனம் நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டது. ஏற்கெனவே பண்பாடு குறித்த ஒரு விவாத அரங்கமும், எதிர்ப்பின் காரணமாக இந்தத் தொலைக்காட்சி நிறுத்திவிட்டது. ஒரு ஊடகம் – எதை ஒளிபரப்ப வேண்டும், எதை ஒளிபரப்பக் கூடாது என்பதை நிர்ணயிக்கும் உரிமை, தங்களுக்கே உண்டு என புறப்பட்டிருக்கிறது, சங்பரிவாரம். இந்தத் தாக்குதலை காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது என்பது மற்றொரு தலைகுனிவான செய்தி.
தாலி என்பது பெண்களை அடிமைப்படுத்தும் சின்னம் என்று பெரியார் இயக்கம், பெண்ணுரிமை பார்வையில் முன் வைத்து வரும் கருத்தை முற்போக்குப் பார்வை கொண்ட பெண்கள் ஏற்று, தாலி கட்ட மறுத்து வருகிறார்கள். பழந்தமிழர் திருமண முறைகளில், ‘தாலி கட்டும்’ வழக்கமே இருந்தது இல்லை என்று இராஜமாணிக்கனார் போன்ற தமிழறிஞர்கள், சான்றுகளுடன் நிறுவி இருக்கிறார்கள். கணவனைவிட – கணவன் கழுத்தில் கட்டிய தாலிதான் ‘புனிதமானது’ என்ற ‘அடிமைச் சிந்தனை’யை பார்ப்பனிய பெண்ணடிமைக் கருத்துகள் வழியாக சமூகததில் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகின்றன. மகளிர் நாளில்கூட பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு பிரச்சினையை விவாதத்துக்கு கொண்டுவரவே அனுமதிக்க முடியாது என்று ‘கலாச்சார காவலர்களாக’ ஒரு மதவெறிக் கும்பல் வெறிபிடித்து அலைவது வெட்கக் கேடானது.
2012ஆம் ஆண்டு டிசம்பரில், இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் ஓடும் பேருந்தில், டெல்லி மாணவி ஒருவர் கொடூரமாக பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாலுறவு வன்முறைக் குற்றவாளிகள், மன நிலையை உலகம் முழுதும் கொண்டு சென்று பெண்களுக்கு எதிரான வக்கிர சிந்தனைகளை அம்பலப்படுத்தும் முயற்சியில் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த லெ°லி உட்வின் என்ற பெண் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தார். ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்துக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, திகார் சிறையில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் கொலையில் தொடர்புடைய குற்றவாளியான முகேஷ் சிங்கி என்பவனிடம் பேட்டியையும் வாங்கியிருந்தார். குற்றவாளி அளித்த பேட்டி, அவனது பெண்களைப் பற்றிய வக்கிரப் பார்வை, ‘ஆணாதிக்கத்தின் நியாயமாக’வே பொதுப் புத்தியில் பதிந்து கிடப்பதை உணர்த்துவதாகவே இருந்தது. “திருமணமாகாத ஒரு பெண், இரவு நேரங்களில் ஆண் துணையுடன் நடமாடுவதே தவறு; அவர்கள் அணியும் நவீன உடைகளே, காம வெறியைத் தூண்டுகின்றன. அந்தப் பெண்ணை பாலுறவுக்கு நான் கட்டாயப்படுத்திய போது, அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்திருக்கக் கூடாது. எதிர்ப்பு தெரிவித்ததால்தான் அவளை கொலை செய்தோம். இதற்காக நான் வருத்தப்படவில்லை” என்று அந்தப் பேட்டியில் தனது செய்கைக்காக எந்த குற்றற உணர்வும் இல்லாமல், அவன் பேசியிருந்தான். இந்த ஆவணப் படத்தை வெளியிட மோடி ஆட்சியின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தடை போட்டார். இந்தியாவைப் பற்றி உலக நாடுகளில் மோசமான சித்திரத்தை இந்தப் படம் உருவாக்கிவிடும் என்று சங் பரிவாரங்கள் வாதிட்டன. (இவர்கள் கட்சியைச் சார்ந்த கிரண்பேடி மற்றும் பா.ஜ.க. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படத்தை திரையிட வேண்டும் என்றே கூறுகிறார்கள்)
படத்தைத் தயாரித்த உட்வின் என்பவரே, தனது 18ஆவது வயதில் பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர் தான். தற்போது 49 வயதை எட்டியுள்ள அவர் திகார் சிறையில் பாலுறவு வன்முறைக் குற்றவாளிகள் 8 பேரிடம் பேட்டி எடுத்துள்ளார். பெண்கள் மீதான வன்முறைக்கு பின்னணியில் உள்ள ஆணாதிக்க கருத்துகளை வெளிக் கொண்டு வந்து, அந்த கருத்துகளை தகர்க்க வேண்டிய இயக்கங்கள் உருவாக வேண்டும் என்பதே படத் தயாரிப்பாளரின் நோக்கம். இந்தியாவில் இப்போது தடை செய்யப் போய் இந்தப் படம் இலண்டன் பி.பி.சி., அமெரிக்கா என்று உலகம் முழுதும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பெண்களை நுகர் பொருள்களாகவே பார்க்கும் இந்து-பார்ப்பனிய சிந்தனைக்கு எதிராக உலகம் முழுதுமிருந்தும் பெண்களின் கண்டனக் குரல் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்ட கதையைப் போல் சங்பரிவாரங்களின் கோர முகம் வெளிப்பட்டு நிற்கிறது.
மனு சா°திரமும், பகவத் கீதையும் என்ன கூறுகிறது?
• படுக்கை, ஆசனம், அலங்காரம், கோபம், பொய், துரோக சிந்தனை இவற்றினை பெண்களுக்காகவே மனு கற்பித்தார். – மனு அத்தியாயம்-9; சுலோகம்-17.
• பெண்களையும் பிராமணரல்லாதாரையும் கொல்வது பாவமில்லை.
– மனு அத்.11; சுலோகம்-65.
மேற்குறிப்பிட்ட மனுதர்மத்தின் கருத்தைத்தான் குற்றவாளி முகேஷ் சிங்கி கூறியிருக்கிறான்!
இவன் ‘மனு சா°திரத்தை’ப் படித்திருக்க மாட்டான். ஆனால், அந்த சிந்தனைதான் அவனது மூளையில் காலம் காலமாக திணிக்கப்பட்டிருக்கிறது. ‘பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள்’ என்று கூறும் பகவத் கீதையை நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கத் துடிக்கும் ஆட்சியாளர்கள், இப்போது இந்த ஆவணப்படமும் அந்த கருத்தை வெளிப்படுத்தும்போது ஏன் பதற வேண்டும்?
தொலைக்காட்சியில் விவாதங்களுக்கு வந்து விடாமலும், ஆவணப் படங்கள் வழியாக உலகத்தின் பார்வைக்கு தெரியாமலும், தங்களது நாற்றம் பிடித்த பார்ப்பனிய மனுவாத பெண்ணடிமை கருத்துகளை காப்பாற்றிவிடலாம் என்பதே இவர்களின் கனவு. அது ஒருபோதும் பலிக்காது; சீழ் பிடித்த சிந்தனைகள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும்; கருத்துகளை விவாதிக்கவே நடுங்கும் கருத்துக் கோழைகளை மக்கள் அடையாளம் காண வேண்டும்!
பெரியார் முழக்கம் 12032015 இதழ்