திருப்பூரில் மகளிர் நாள் விழா !

திருப்பூரில், தமிழ் நாடு அறிவியல் மன்றம் சார்பில் மகளிர் தின விழா 08.03.2015 அன்று திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர், மங்கலம் சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. ”மாதவிடாய்” மற்றும் ”தீவரைவு” ஆவணப் படங்கள் திரையிடப் பட்டன. பின்பு நடை பெற்ற கருத்தரங்கத்தில் ”மாத விடாய் காலத்தில் உணவு” எனும் தலைப்பில் இயற்கை மருத்துவர் பெரியார் செல்வி, ”மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்ற செயலாளர் ரஞ்சிதா கருத்துரை வழங்கினர். மதிய உணவாக அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பின் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் இந்திய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்று விளையாடிய மணியரசி, கபடி விளையாட்டில் மாநில அளவிலான போட்டிகளில் இடம் பெற்ற மைதிலி ஆகியோருக்கும், கலைத்துறையில் சிறந்து விளங்கும் கிருஷ்ணவேணி, சங்கீதா, கவிதா ஆகியோருக்கும், மருத்துவத்துறையில் சு.பார்வதி, கல்வித்துறையில் கோவை மாவட்ட அளவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஜான்சி, மற்றும் ஆசிரியர்கள் ஜோதி, மாலதி, தமிழ்செல்வி, சுயதொழிலில் பரமேஸ்வரி, கவிதா, சரஸ்வதி, சரண்யா, ஓவியத்துறையில் சம்யுக்தா, இலக்கிய துறையில் கனல் மதி ஆகியோருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் இடையில் திராவிடர் கலைக் குழுவினரின் விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது. கிருஷ்ணவேணி, பெண் விடுதலை குறித்து கவிதை வாசித்தார். இடையே பழச்சாறும், பிஸ்கட்டுகளும் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. பின் இந் நிகழ்ச்சி குறித்து கலந்துகொண்டவர்கள் பேசுகையில், “புதியதாக தாங்கள் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும், இந்நிகழ்வின் மூலம் பல்வேறு புதிய பயனுள்ள செய்திகளை அறிந்து கொண்டோம்” எனவும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக் குறித்து கல்லூரி மாணவிகள் கூறுகையில், ‘தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் வகையில் இருந்ததாக’ கூறினர். தோழர் ஒருவர் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை. இந்நேரம் வழக்கமாக, தான் கோயிலில்தான் இருப்பேன் எனவும், ஆனால் இன்று இவ்விடத்தில் இருப்பது மாற்றாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி அதனை விட மிகவும் உபயோகமானதாக இருந்தது” என குறிப்பிட்டார். “மீண்டும் இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துமாறும் அவற்றில் நாங்கள் கட்டாயம் வந்து கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் பங்கேற்கவும் செய்வோம்” என அனைவரும் ஒருங்கே உற்சாகமாக கூறியது பெரும் வரவேற்பைப் பெற்றது. அறிவியல் மன்ற தோழர்கள் மடத்துக்குளம் மோகன், பொருளாளர் தமிழ்செல்வன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்தனர். நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி ஒருங்கிணைத்தார். மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

பெரியார் முழக்கம் 26032015 இதழ்

You may also like...

Leave a Reply