தலையங்கம் – தமிழகத்தில் ஜாதி வெறிக் கொலைகள்!

ஜாதி எதிர்ப்புக் கருத்துகளை மக்களிடையே பரப்ப திராவிடர் விடுதலைக் கழகம், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து பரப்புரை இயக்கங்களைத் தொடங்கியிருக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மய்யமாக ஜாதியமைப்பே இருக்கிறது. அதற்குள் வெடித்துக் கிளம்பும் முரண்பாடுகளே ஜாதியக் கலவரங்களுக்குக் காரணம். இந்த ஜாதியமைப்புக்கான கருத்தியலை வழங்கி, ‘புனித’ப்படுத்துவது பார்ப்பனியம். மதவாதம் – மதவெறியாக ஜாதியம் – ஜாதி வெறியாக மிக எளிதாக ‘உருமாற்றம்’ பெற்றுவிடுகிறது.
பெரியார் இயக்கம் நடத்திய மண்ணில் – ஜாதி மதவெறி சீர்குலைவு சக்திகள் தலைதூக்குகிறதே என்று உண்மையில் வேதனைப்படுவோர் உண்டு. பெரியார் இயக்கம் தோல்வி அடைந்து விட்டது என்று முத்திரை குத்தத் துடிப்போரும் உண்டு. ஆனால், பெரியாரைப் பேசும் அரசியல் கட்சிகளானாலும் பெரியாரை குறை கூறத் துடிக்கும் இயக்கங்கள் ஆனாலும் தமிழ்நாட்டில் தலைதூக்கிட முயற்சிக்கும் ஜாதிய மதவாத சக்திகளுக்கு எதிராக ஏன், ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட முன் வரவில்லையே என்று வேதனையுடன் கேட்கிறோம்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 100 கொலைகள் நடந்துள்ளன. இதில் 25 படுகொலைகள் ஜாதி வெறியால் நடந்தவை. “இந்தப் பகுதிகளில் ஆழமாகப் புரையோடியுள்ள ஜாதிய உணர்வுகளால் 25 படுகொலைகள் வரை நடந்திருக்கின்றன என்ற உண்மையை மறுக்க முடியாது” என்று ‘இந்து’ ஆங்கில நாளேடு ஒரு ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறது (மார்ச் 16, 2015).
தமிழகத்தின் 28 மாவட்டங்களில் ‘எவிடென்சு’ அமைப்பு நடத்திய ஆய்வு 76 தலித் மக்கள் ஜாதி வெறியர்களால் கும்பலாகவோ அல்லது குழுக்களாகவோ கொல்லப்பட் டுள்ளனர் என்று தெரிவிக்கிறது.
இந்தப் போக்குகளை ஓரளவு தடுத்து நிறுத்துவதற்கு எந்த ஒரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தின் ஆதிக்க ஜாதி பிரிவுகளைச் சார்ந்தவர்களை அதே மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது என்ற கருத்தை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காரணம், காவல்துறை அதிகாரிகளே சொந்த ஜாதி உணர்வோடு குற்றவாளிகளைக் காப்பாற்றவே விரும்புகிறார்கள். ஜாதி வெறி கொலைக் குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்தி வரும் இந்த கருத்து, இப்போது பல்வேறு முகாம்களிலிருந்தும் எதிரொலிப்பதைப் பார்க்கிறோம். ‘எவிடென்சு’ ஆய்வு நிறுவனம் இதே கருத்தை வலியுறுத்துகிறது. மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுப்பினருமான தென் மாவட்டத்தைச் சார்ந்த தோழர் ஆர். கிருஷ்ணன், ‘இந்து’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் இதே கருத்தை வலியுறுத்துகிறார். (சு. முசiளாயேn உயரவiடிளே யபயiளேவ
யயீயீடிiவேiபே யீடிடiஉந டிககiஉநசள கசடிஅ “னடிஅiயேவே உயளவநள” in வாந வறடி னளைவசiஉவள-’ழiனேர’ ஆயசஉh 16.)
தமிழக காவல்துறை இயக்குனர் அசோக் குமார், தென் மாவட்ட காவல்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, இந்தப் படுகொலைகள் காவல்துறையின் செயல்பாடுகளில் மிக மோசமான களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறியிருக்கிறார். அத்துடன், அதிகாரிகள் பாகுபாடு காட்டாது, குற்றங்களை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நேர்மையாக செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். அதிகாரிகள் பாகுபாடு காட்டாமல் செயல்பட வேண்டும் என்று இயக்குநர் கூறுவதன் அர்த்தம் என்ன? பாகுபாடு காட்டுகிறார்கள் என்ற உண்மையே அதில் மறைந்து நிற்கிறது. அந்த பாகுபாட்டுக்குக் காரணம் நாம் சுட்டிக்காட்டுவதுபோல், மாவட்ட அதிகாரிகளின் ஜாதிய உணர்வுதான். எனவே, ‘ஆதிக்க ஜாதி’ அதிகாரிகளை அந்தந்த மாவட்டங்களில் நியமிக்காமல் இருப்ப தற்கான நடைமுறைகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீராச்சிக் குப்பம் ஒன்றியத்தில் கோயில் திருவிழாவுக்கு வேடிக்கைப் பார்க்கச் சென்ற அரவிந்தன் என்ற தலித் இளைஞரையும் அவரது உறவினரையும் ஜாதி வெறியர்கள் கட்டி வைத்து அடித்து தண்ணீர் கேட்டதற்கு வாயில் ‘சிறுநீரை’ கழித்திருக்கும் கேவலம் அரங்கேறியிருக்கிறது. தாழ்த்தப்பட் டோருக்கான தேசிய ஆணையத்தைச் சார்ந்த பி. இராமசாமி என்ற அதிகாரி, கிராமத்துக்கே நேரடியாகச் சென்று தனியறையில் விசாரணை நடத்தி, உரிய இழப்பீடு வழங்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு தொடரவும் காவல்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
சேலம் மாவட்டம் திருமலைகிரி கோயில் குடமுழுக்கு விழாவில் தலித் மக்கள் பங்கேற்கக் கூடாது என்று ஆதிக்க ஜாதியினர் தடை போகிறார்கள். இதை நியாயப்படுத்துகிறார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு.
ஜாதி குறித்தோ, ஜாதிக் கொலைகள் குறித்தோ தமிழகத்தில் கட்சிகளோ, இயக்கங் களோ, ஊடகங்களோ வாய் திறக்காத நிலையில், திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதிய எதிர்ப்புப் பரப்புரைப் பயணங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
கழகச் செயல் வீரர்கள் மக்களை ஊர்ஊராகச் சென்று சந்தித்து, ஜாதி எதிர்ப்பு கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். தமிழர்களின் சமூக – பொருளாதார நெருக்கடிகளையும் எடுத்துக் கூறுகிறார்கள்.
தமிழகம் ஜாதி வெறிக் களமாகிடக் கூடாது என்ற கவலை கொண்ட ஆட்சிகளும் இயக்கங்களும் ஏன், காவல்துறையினரும்கூட இந்த இயக்கத்துக்கு ஆதரவு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். பயணம் மேற்கொண்டுள்ள கழகத் தோழர்களை பாராட்டி, மகிழ்கிறோம்!

பெரியார் முழக்கம் 26032015 இதழ்

You may also like...

Leave a Reply