ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகார வன்முறை

“ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டன.ஆனால் எந்த சட்டத்தின் கீழும் அந்த அமைப்பு பதிவு செய்யப்படவில்லை.பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.”இந்து மதம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா?” என்ற ஒரு எதிர் கேள்வியை இறுமாப்புடன் அவர் எழுப்புகிறார்.

கர்நாடக மாநிலத்தில் 20 லட்சம் சேவக்குகளை தங்கள் அமைப்பு வழியாக உருவாக்கி இருப்பதாக அண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்ட பிரிவான பாரதிய பிரதிநிதி சபா அறிவித்ததைத் தொடர்ந்து, கர்நாடக மாநில அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு அரசு சார்பில் ஒரு கடிதம் எழுதினார்.ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சட்ட பூர்வ நிலை, திரட்டும் நன்கொடைகள் செலுத்தும் வரிகள் குறித்த விவரங்களை அதில் கேட்டிருந்தார். “இதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை இந்து மதம் என்ன பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?” என்று மோகன் பகவத் போகிற போக்கில் ஒரு செய்தியாளரிடம் கருத்து கூறியிருக்கிறார். இது ஒரு மாநில அரசு எழுப்பும் கேள்வி என்பதால் மோகன் பகவத் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

அண்மையில் தனது தலைமை அலுவலகத்தை நாக்பூரில் இருந்து டெல்லிக்கு மாற்றிய ஆர்.எஸ்.எஸ். அதற்கு செலவிட்ட தொகை ரூ.250 கோடி. எந்த சட்டப் பதிவும் இல்லாத இந்த மாளிகையை திறக்கும் சடங்கு நிகழ்ச்சிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். சட்டப்படி பதிவு செய்ய மாட்டோம் என்று இறுமாப்புடன் அறிவிக்கக்கூடிய துணிச்சல் ஆர்.எஸ் எஸ்-க்கு எப்படி வந்தது? இதுதான் பார்ப்பனியத்தின் அதிகார வன்முறை.

தொண்டு நிறுவனங்களாக அறிவித்துக் கொள்ளும் அமைப்புகள் சட்டப்படி பதிவு செய்தால்தான் நன்கொடைகள் திரட்ட முடியும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் கோடிக்கணக்கில் நன்கொடை திரட்டுகிறது. சட்டப் பதிவுகள் ஏதும் இல்லாமல் தொண்டு நிறுவனங்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் அமைப்புடன் பிரதமரும், அமைச்சர்களும் அவர்களின் தலைமை அலுவலகத்துகே சென்று எப்படி பேச முடிகிறது? சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இவர்களை சந்தித்து எப்படி உரையாற்ற முடிகிறது? பார்ப்பனியத்தின் அதிகாரத்தை எந்த சட்டதிட்டத்திற்குள்ளும் இந்தநாட்டில் அடைக்கி வைக்க முடியாது என்பதால் தானே?

காந்தியார் கொலைக்குப் பிறகு தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மீண்டும் தடை நீக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆர்.எஸ்.எஸ் தனது அமைப்பு உறுப்பினர்களின் பதிவேட்டை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனை அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அவர்களால் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த நிபந்தனைகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டன.

`இந்துமதம்’ பதிவு செய்யப்பட்டதா? என்று ஆர்.எஸ்.எஸ் த.லைவர் மோகன் பகவத் கேட்டிருக்கிறார். இதன் பொருள் இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்தான் என்பது தானே? ஒவ்வொரு இந்துவுக்கும் அடையாளத்தை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள் என்றால் அதற்கு பெயர்தான் பாசிசம். வர்ணாஸ்மர சமூக அமைப்பே தங்களது கடவுள் என்கிறது ஆர்.அஸ்.எஸ்; தத்துவ தந்தை கோல்வால்கர் வர்ணாஸ்மர அமைப்புக்குள் வாழும் இந்து சமூகம் என்ற உயிருள்ள இந்துக்கள் தான் தங்களுடைய கடவுள் என்றும் மற்றபடி இராமன், கிருஷ்ணன், சிவன் போன்ற உருவங்கள் வர்ணாஸ்மரத்தை பாதுகாக்கும் ஆயுதங்கள் தான் என்று சொல்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்-ன் சட்டமீறலை பகிரங்கமாக அங்கீகரிக்கும் ஒன்றிய பாஜக ஆட்சி, பதிவு செய்து செயல்படும் தொண்டு நிறுவனங்களை முடக்குவதற்கும், ஒரே உத்தரவின் மூலம் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் வழி வகுக்கும் FCRA மசோதாவை கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. பல தொண்டு நிறுவனங்களை சிறுபான்மையினர் குறிப்பாக கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில் கொண்டு வரப்பட்டுள்ளது இந்த மசோதா. 2014 முதல் 2026 வரை எந்த முறையான காரணங்களும் இன்றி 22,000 தொண்டு நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்து இருக்கிறது ஒன்றிய பாஜக ஆட்சி. இந்த நிறுவனங்கள் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள்,ஆதரவற்றோர் இல்லங்கள் போன்ற அமைப்புகளை நடத்தி வந்தார்கள். இதில் பணியாற்றிய பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளார்கள்.

அமெரிக்காவில் செயல்படும் பன்னாட்டு மத சுதந்திர ஆணையம் 2025 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அமெரிக்காவில் தடை செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக மத சுதந்திரத்தை முடக்கும் திட்டங்களை உருவாக்கி செயல்படுவது ஆர்.எஸ்.எஸ். என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு; காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட அமைப்பு; பெண்களை உறுப்பினராக அனுமதிக்க மறுக்கும் அமைப்பு; இந்தியாவில் எந்த சட்டத்தின் கீழும் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று அறிவிக்க முடிகிறது என்று சொன்னால் அதற்கு ஒரே காரணம் பார்ப்பனியம் என்ற இறுமாப்பு. இந்திய ஆட்சி அதிகாரம் எந்த மையப் புள்ளியில் இயங்குகிறது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 25062026

You may also like...