திமுகவை அழிக்க விஜய் கட்சி யாகம்!
தமிழக வெற்றி கழகம் சார்பில், திருச்செந்துார் முருகன் கோவிலில் தவெக சார்பாக `சத்ரு சம்ஹார’ யாகம் நடத்தப்பட்டது. இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: விஜய் இந்து மதச் சடங்குகள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். தான் தொடங்கும் எல்லா விஷயங்களையும் ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று, அவர் குறித்து கொடுக்கும் நேரத்தில் தான் செய்வார். கட்சி தொடங்கியதில் இருந்து, ஜோதிடரின் அனுமதி இல்லாமல் விஜய் எதையுமே செய்தது இல்லை. அதனால்தான், கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில், இவ்வளவு பெரிய இடத்துக்கு விஜய் வளர்ந்து உள்ளார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறவும், அரசியல் எதிரிகளை வீழ்த்தவும் சில சடங்குகளை செய்ய வேண்டும் என ஜோதிடர் ஆலோசனை கூறியதை அடுத்து, விஜய் அதற்காக திட்டமிட்டார். அதன்படி, திருச்செந்துார் முருகன் கோவிலில், இன்று சத்ரு சம்ஹார யாகம் நடத்த உள்ளார். விஜய் சார்பாக, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் இந்த யாகத்தை செய்ய உள்ளார். விஜய்க்கு நெருக்கமான சிலரும் இந்த யாகத்தில் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. எதிரிகளை அழிப்பதற்கு நடத்தப்படும் `சத்ரு சம்ஹார” யாகம். இப்போது திமுகவை அழிக்க விஜய் வேதமந்திரங்களோடு யாகம் நடத்துகிறார்.
பெரியார் முழக்கம் இதழ் 30042026
