தொழில் முனைவோராக 3 இலட்சம் கிராமப் பெண்கள்; திமுகவின் தேர்தல் அறிக்கை!

50 துறைகளில் 5 ஆண்டுகளில் செய்து முடித்த சாதனைகளையும்; அதே துறைகளில் தொடரப் போகும் ஆட்சியில் அதன் தொடர்ச்சியாக திட்டமிட்டுள்ள செயல் திட்டங்களையும் விரிவாக விளக்குகிறது தேர்தல் அறிக்கை. குறிப்பாக மகளிர் நலன் எனும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய செய்திகளை நாம் குறிப்பிட்டாக வேண்டும். மகளிர் உரிமைக்கான திட்டங்களை இலவசம் என்றும் பிச்சை என்றும் சில பேர் வழிகள் மேடைகளில் பேசி வருகிறார்கள்.
குறிப்பாக இல்லத்தரசிகளுக்கான ரூ.8,000 கூப்பன் திட்டத்தை ஊழல் திட்டமாக எடப்பாடி மலினப்படுத்தி வருகிறார். குளிர்சாதன பெட்டிகளை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கும் அவரது திட்டம் தான் ஊழலுக்கு வழி வகுக்கக் கூடிய ஒரு திட்டம். மாறாக இல்லத்தரசி திட்டம் 8000 ரூபாய்களுக்கான கூப்பன் மட்டும் வழங்குவதோடு அரசு கடமை முடிந்து விடுகிறது ; எந்தப் பொருளை வாங்குவது ; எந்தக் கடையில் வாங்குவது என்ற முழுமையான விருப்பஉரிமை பெண்களுக்கே வழங்கப்படுகிறது. இதில் பயனடைவது பெண்கள் மட்டுமல்ல; வணிகர்களின் வர்த்தகமும்தான்.
இதைத் தவிர 3,00,00 கிராமப் பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் மிகச் சிறப்பான திட்டமொன்று இதில் இடம் பெற்று இருக்கிறது. இத்திட்டம் எப்படி செயல்படுத்தப்பட போகிறது என்பதை தேர்தல் அறிக்கை விவரிக்கிறது. 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் தொழில் தொடங்க நிபந்தனை ஏதும் இன்றி வங்கிக் கடன் பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும். நவீன தொழில் உற்பத்தி முறை குறித்து இந்தப் பெண்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்படும். பிறகு அரசே நவீன உற்பத்திக் கருவிகளை கொள்முதல் செய்து ஒரு பொது நல மையத்தில் வைக்கும். இந்த பொதுநல மய்யங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படும்.
பெண்கள் அரசு தரும் உதவியில் உற்பத்திக்கான மூலப் பொருள்களை வாங்கினால் மட்டும் போதும். எந்திரங்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மூலப் பொருள்களை மட்டும் பெண்கள் இந்த பொது நல மையத்திற்கு கொண்டு வந்து அங்கே இருக்கும் நவீன கருவிகளை பயன்படுத்தி மூலப்பொருளை உற்பத்தி பொருளாக மாற்றிக் கொள்ளலாம்.
இத்திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவிலான வங்கி கடன்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும். இத்துடன் அரசின் கடமை முடிந்து விடவில்லை; அரசு வாங்கும் பொருள்களுக்கு இந்த பெண்களின் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து கொள்முதல் செய்யப்படும். இவை தவிர மற்றொரு மிக முக்கிய திட்டமும் அடங்கி இருக்கிறது. உயர் கல்வி பெற்ற பெண்கள் தனியார் துறைகளில் உயர் பதவிகளுக்கு வர முடிவதில்லை; அவர்களை அந்த பதவியில் அமர்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இந்த தேர்தல் அறிக்கையில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தனியார் நிறுவனங்கள் ரூ. 2 லட்சம் அளவில் ஊதியம் தரக்கூடிய உயர் பதவிகளில் படித்த பெண்களை நியமித்தால் அவர்களுக்கு வழங்கப்படும். ஊதியத்தில் 10 விழுக்காடு தொகையை அந்த தனியார் நிறுவனங்களுக்கு அரசே மானியமாக வழங்கும் என்ற அற்புதமான திட்டம் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. இப்படி ஒரு திட்டத்தை இந்த திராவிட மாடல் ஆட்சியைத் தவிர வேறு எந்த மாநிலத்திலாவது கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா? அடுத்த 5 ஆண்டுகளில் நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கான பயிற்சிகள் வழங்கி அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தும் திட்டமும்; பெண்கள் ஷேர் ஆட்டோ வாங்குவதற்கு மானியத்துடன் வங்கி கடன் பெற்று தரும் திட்டமும் இடம்பெற்றுள்ளன.

இலவசங்களை வழங்கி மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்குகிறது என்று நாக்கில் நரம்பின்றி இழிவு பிரச்சாரம் செய்யும் பேர்வழிகள் தமிழ்நாடு அரசின் இந்த திட்டங்களுக்கு என்ன பதிலை கூறப் போகிறார்கள்? மக்களிடம் கருத்துகளை பரப்புவதற்கும் மேடைகளில் பேசுவதற்கும் இந்த தேர்தல் அறிக்கையை முழுமையாக படித்தாலே போதும். தரவுகளும் தகவல்களும் செயல் திட்டங்களும் குவிந்து கிடக்கும் அற்புதமான ஆவணம் திமுகவின் தேர்தல் அறிக்கை!
பெரியார் முழக்கம் இதழ் 09042026

You may also like...