நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது கழகத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் சம்பந்தமாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை : –

அன்பார்ந்த தோழர்களுக்கு, என் வணக்கங்கள்.

துக்ளக் ஏட்டின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பெரியாரை – பெரியாரின் இயக்கத்தை கேவலப்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு நடிகர் இரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய அவருடைய அவதூறு பேச்சுக்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்திருந்தோம்.

அவ்வாறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின் நகல் ஒன்றினையும் அந்த காவல்நிலையங்களில் புகாரைப் பெற்றுக்கொண்டதற்காக கொடுக்கப்பட்ட சிஎஸ்ஆர் இரசீது நகலையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஏதேனும் காவல்நிலையத்தில் புகார் பெற்று கொண்ட பின்னாலும் அதற்கான சிஎஸ்ஆர் வழங்கப்படாமல் இருக்குமேயானால்,மீண்டும் ஒருமுறை அந்த புகாரினுடைய படியை வைத்து அதனுடன் “நாங்கள் இத்தனையாம் நாள் உங்களிடம் அளித்த புகாருக்கு இதுவரை சிஎஸ்ஆர் வழங்கப்படவில்லை,அதை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்ற வேண்டுகோளுடன் ஒரு கடிதத்தையும் இணைத்து ஒப்புகைச் சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சலில் கடிதத்தை அனுப்பி,அதனுடைய படி ஒன்றினை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அனுப்பிவிட்டு அந்த புகார் மனுவின் படிகளையும்அனுப்பப்பட்ட பதிவுகளுக்கு வந்திருக்கிற ஒப்புகை சீட்டுடன் தலைமைக் கழகத்திற்கு உடனே அனுப்பி வைக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

புகார் அளிக்கப்பட்டும் அதற்கு முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை என்றால் அதற்காக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளுடன் நாம் உயர்நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம்.

தோழர்கள் உடனே சிஎஸ்ஆர் அல்லது பதிவஞ்சல் சீட்டு ஆகியவற்றை கழக தலைமைக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
20.01.2020.

You may also like...