தலையங்கம் – பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் நிறைவேறுமா?
மத்திய அரசுக்கான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மூன்றாக வகைப்படுத்தும் பரிந்துரையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசிடம் அளித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஜாதிகளுக்கிடையே முன்னேறிய ஜாதியினர், பின்தங்கிய நிலையில் உள்ள ஜாதியினருக்கான வாய்ப்புகளைப் பறித்து விடுவதால் அனைத்து ஜாதியினருக்கும் சமவாய்ப்பு வழங்குவதே இதன் நோக்கம் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறுகிறது.
ஜாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு, அனைத்துப் பிரிவினருக்கும் சமத்துவம் வழங்குவதே இடஒதுக்கீட்டின் நோக்கம். எனவே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் மிகச் சரியானது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நோக்கம் வரவேற்கப்பட வேண்டியது தான். ஆனால், சமூகநீதிக்கு ‘நந்தி’களாக நிற்கும் உச்சநீதிமன்றங்களும், பார்ப்பன அதிகார வர்க்கமும் உண்மையில் சமத்துவத்தை நோக்கி, இத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிப்பார்களா என்ற நியாயமான சந்தேகம் எழவே செய்கிறது.
முதலில், மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான
27 சதவீத இடஒதுக்கீட்டில் 7 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்று அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நிரப்புவதற்கு கடந்தகால காங்கிர° ஆட்சியிலும் இப்போது நடக்கும் பா.ஜ.க. ஆட்சியிலும் எந்தத் தீவிரமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இரண்டாவதாக – மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை கூடுதலாகப் பயன்படுத்திக் கொண்ட ஜாதிப் பிரிவுகள் எது? பயன்படுத்தவே இயலாத ஜாதிப் பிரிவுகள் எது? என்பது குறித்து அரசிடம் எந்த தகவல்களும் புள்ளி விவரங்களும் இல்லை. இதற்கு அடிப்படையாக ஜாதியடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சமூகநீதி இயக்கங்கள் வலியுறுத்தி வரும் கோரிக்கையை கடந்தகால ஆட்சியும் ஏற்கவில்லை. இப்போது நடக்கும் பா.ஜ.க. ஆட்சியும் செவி சாய்க்கவில்லை. எனவே, ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 27 சதவீதத்தைவிட அதிகமாக இருந்தால், அதற்கேற்ப ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, அதற்குள் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஜாதிப் பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க முன் வருவதே சரியான நடவடிக்கை ஆகும்.
மூன்றாவதாக – இப்போது ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார வரம்பு, மத்திய அரசின் இடஒதுக்கீட்டுப் பிரிவில் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பிரிவினர் இடஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டனர். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் ‘கிரிமிலேயர்’ அடிப்படையில் இடஒதுக்கீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு, அதற்குத் தகுதியானவர்கள் கிடைக்காத நிலை வந்தால், ‘கிரிமிலேயரிலிருந்து’ விலக்கம் செய்து, பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பளிக்கும் முறை குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் தனியார் துறையில் சமூகநீதி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு கிடக்கிறது. இது குறித்து, பரிசீலிப்பதாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் அய்ந்தாண்டு ஆட்சி மக்களுக்கு தந்த வாக்குறுதி காற்றில் பறந்து போய்விட்டது.
சமூக-பொருளாதார அரசியலில் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் ஆதிக்கவாதிகளாக உள்ள ஜாட் பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்’ சேர்க்கவில்லை. ஆனால், அவர்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கருத்துகளைப் புறந்தள்ளி, மன்மோகன்சிங் ஆட்சி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தது. மோடி ஆட்சியும் ‘ஜாட்’ பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கே உச்சநீதிமன்றத்தில் ஆதரவு தெரிவித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, சமூகநீதிக்காகவும், சமத்துவத்துக்குமான இடஒதுக்கீட்டை வாக்குவங்கி அரசியலுக்குப் பயன்படுத்தவே தேர்தல் அரசியல் கட்சிகள் பயன்படுத்த முயற்சிக்கின்றன.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் செழுமையாக்கப்பட வேண்டும். அதில் அடங்கியுள்ள அனைத்து ஜாதியினருக்கும் சமத்துவம் கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் முழுமையான நியாயம் உண்டு. குறிப்பாக இடஒதுக்கீட்டில் முன்னணியில் உள்ள தமிழகத்தில் இந்த மாற்றங்கள் தேவைப்படுகிறது.
ஆனால், பிற்படுத்தப்பட்டோரின் 27 சதவீத ஒதுக்கீட்டில் பாதியளவைக் கூட நிரப்பாமல் 120 நாடாளுமன்றத் துறை செயலாளர்களில் ஒரு தாழ்த்தப்பட்டவரையோ, பிற்படுத்தப்பட்டவரையோ நுழைய விடாமல், தடுப்புச் சுவர் எழுப்பிக் கொண்டுள்ள மத்திய ஆட்சிகளிடம் பிற்படுத்தப்பட்ட பட்டியல் பிரிவினரையே மூன்றாகப் பிரித்து, சமத்துவம் வழங்கும் கோரிக்கையை முன் வைப்பதில் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?
இதை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டு, மற்றொரு பொருளாதார அளவுகோலைத் திணித்து, சமூகநீதியையே புதை குழிக்கு அனுப்பி விடுவார்களோ என்ற சந்தேகம்தான் மேலோங்குகிறது.
பெரியார் முழக்கம் 28052015 இதழ்