“கடவுளை” ஓரம் கட்டுகிறது அறிவியல்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-16(விடுதலை இராசேந்திரன்)
நடிகர் ரோபோ சங்கர்(46 வயது) இறந்த துயரமான செய்தி வந்தது. உண்மையிலேயே இது துயரமானதுதான். இதற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர் இவ்வாறு கூறினார்; “மரணத்துக்கு எவர் மீதும் குறைகாண முடியாது. கடவுள் அவருக்கு விதித்த ஆயுள் அவ்வளவுதான், முடிந்ததும் அவர் அழைத்துக் கொண்டார்.” ஒவ்வொருவருக்கும் கடவுள் ஆயுள் காலம் நிர்ணயித்துக் கொண்டு இருக்கிறாரா?..
* இறந்து போனவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சடங்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. ஒருகாலத்தில் வீடுகளில் நடத்தப்பட்ட சடங்குகள் இப்போது பொதுநிகழ்வாக திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் வேத பார்ப்பன பண்டிதர்கள் கொள்ளை இலாபம் அடிக்கிறார்கள். இதற்கு சரியான நாளாக புரட்டாசி மாதம் அமாவாசையை தேர்வு செய்து இருக்கிறார்கள். அந்த ஒரு நாளில் மட்டும் தான் வேறு உலகத்தில் இருந்தும் மூதாதையர்களுக்கு இவர்கள் தரும் தர்ப்பணம் டெலிவெரி ஆகுமாம். இப்படி ஒரு புரட்டு!
அதுவும் ஆண்களுக்கு மட்டுமே இப்படி தர்ப்பணம் செய்கின்ற உரிமை உண்டு. இப்படி ஒரு பெண்ணடிமை!
* இந்த தர்ப்பணப் பொருட்களை பெற்று ‘மேல் உலகத்திற்கு’ அனுப்பி வைக்கும் அதிகார உரிமையை வேதம் படித்த பிராமணர்களோடு சனாதனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதைக் கொண்டு போய் சேர்க்கும் சக்தியும் தங்கள் சமஸ்கிருதத்திற்கு தான் உண்டு என்று கூறி தமிழர்களின் மூளையில் திணித்திருக்கிறார்கள். சட்டை இல்லாத ஆண்களும் சட்டை இல்லாத வேத பண்டிதர்களும் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் கூடி நின்ற அரைநிர்வாணக் காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. அன்றைய தினம் காக்கைக்கு சைவச் சோறும் போட வேண்டுமாம். ஒரே நேரத்தில் காக்கைகளுக்கு வந்த அழைப்புகளை காக்கைகளால் சமாளிக்க முடியவில்லை. பல்லாயிரக்கணக்கில் அழைப்பு வருகிற போது ‘அட்டன்ட்’ செய்ய முடியாமல் காக்கைகளே நேரம் ஒதுக்கி தர மறுத்துவிட்டன. காக்கைகளையே காக்காய் பிடிக்க முடியவில்லை.
இதனால் தான் ஆத்மா, பிதிர்லோகம், மோட்சம் இவைகளை கற்பித்தவன் முட்டாள் இவற்றால் பயன் அடைகிறவன் அயோக்கியன் என்றார் பெரியார்.
மாடு செத்தால் எடுத்துபோய் தின்றுவிடுகிறார்கள். குதிரை செத்தால் சாப்பிடாமல் புதைத்து விடுகிறார்கள். இவைகள் சொர்க்கத்தில் இருக்கின்றன, நரகத்தில் இருக்கின்றன என்று எவரும் கருதுவதில்லை. ஆனால் இந்த முட்டாள்தனத்தை மனிதனுக்கு தான் ஒட்ட வைத்துவிட்டார்கள்.
சொர்க்க லோகம் என்பது எந்த பூகோலத்தில் இருக்கிறது. கீழே ஆயிரக்கணக்கான மைல்களுக்கும், மேலே 16 லட்சக்கணக்கான மைல்களுக்கும் வானசாஸ்த்திரிகள் விவரம் கண்டுபிடித்துவிட்டார்கள். எங்குமே சொர்க்கலோகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே சொர்க்க லோகமே சந்தேகத்திற்கு இருக்கும் போது. சொர்க்கலோகத்தில் கடவுள் இருக்கிறாரா? என்றால் என்ன பதில் சொல்வது?
இயற்கையெய்தல் என்கின்றதின் தத்துவம் அதாவது மனிதனின் அவயங்கள் தத்தமது வேலைகளைச் செய்யும் சக்தியை இழப்பதோடு, மனிதனின் காற்றை உள்ளே வாங்கி வெளியே விடக்கூடிய காற்று வாங்கிப் பொறியின் இயக்கம் நின்று போய்விடுகிறபோதுதான் மனிதன் இயற்கையெய்தினான் அல்லது முடிவெய்தினான், செத்துப் போய்விட்டான் என்று சொல்லப்படுகின்றது.
ஒரு கடிகாரத்திற்கு அதன் சாவியின் அதாவது விசைத் தகட்டின் வளைவு சக்தி இருக்கும் வரையிலே கடிகாரம் இயங்குகிறது; மணி காட்டுகிறது. அந்த சாவியின் சக்தி நின்றவுடனே கடிகாரமும் நின்றுவிடுகிறது. அப்போது அந்த கடிகாரத்தின் ஆத்மா’ மேலே போயிற்றென்றா சொல்ல முடியும்? முடி யாதே. கடிகாரத்தின் விசை தீர்ந்து அசைவு நின்றுவிட்டது என்பதுதானே உண்மை. அதுபோலத்தானே மனிதர்களின் அசைவு சக்தி; இயற்க சக்தி அற்றுப் போனால், செத்துப் போனால் வெறும் பிணம் ஆகிவிட்டான் என்கிறோம்.
இது மனிதனுக்கு மட்டுமல்லாமல், மிருகங்கள் – முதல் புழு, பூச்சி,கிருமி, புல் பூண்டு, தாவரங்கள் முதலியனவின் தன்மை யும் இந்தப்படியேதான் இருக்கின்றன. என்னவெனில், இயற்கையெய்துதல் என்பதில் பொது விதியாக இருக்கின்றது. இயற்கையெய்துதல் என்பதன் பொருள் என்னவென்றால், காணப்படும் பொருள், ஜீவன் உள்பட எல்லாமே தோன்றுதலும், தோன்றியவை யாவும் மறைவதுமான குணத்தை இயற்கையாகக் கொண்டவை, ஆனதால் மாற்றமடைந்ததையும், மறைந்ததையும் இயற்கை எய்திற்று என்கின்றோம்.
மனிதன் இயற்கையெய்திய பின்னர் அவனுடைய ஆத்மா இங்கேயே உலவி வருகிறது அல்லது அவரவர்கள் செய்த வினைப்பயனின்படி பரலோகத்தில் அவையவைகள் பெறக்கூடிய இடங்களைப் பெற்று, அதாவது மோட்ச நரகங்களை அடைந்து விடுகின்றன அல்லது பிதுர்லோகத்தில் இருக்கின்றது அல்லது மறு ஜன்மம் அடைந்துவிட்டது அல்லது பிசாசாக ஆகிவிட்டது” என்பதெல்லாம் அசல் முட்டாள்தனமாகும்.
இவையெல்லாம் ஒரு கூட்டத்தார் நோகாமல் பாடுபடாமல் வாழ்வதற்காக, நம்முடைய முட்டாள்தனத்தையே கைமுதலாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட சங்கதிகளாகும். அதை கொஞ்சங் கூட சிந்தித்துப் பார்க்காமல், பகுத்தறிவு கொண்டு யோசித்துப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி வருகிறார்கள். ஆத்மா, மோட்சம், நரகம் என்கின்ற சொற்கள் தமிழ் சொற்களே அல்ல. தமிழிலும் அவைகளுக்கு ஏற்ற சொற்களே கிடையாது.
– “விடுதலை” – 7.09.1950
பரிணாம வளர்ச்சியில் இறந்து போன உடல்களை என்ன செய்வது என்று மனித குலம் தடுமாறி குழப்பத்தில் நின்றதை வரலாறு நமக்கு கூறுகிறது. இப்போது இறப்பு என்ற ஒன்றே இல்லாத நிலை நோக்கி அறிவியல் வளர்ந்து கொண்டு இருக்கிறது.
பெர்லினில் அமைந்துள்ள ‘டுமாரோ பயோ’ (Tomorrow Bio) என்ற ஜெர்மன் ஸ்டார்ட்அப் நிறுவனம், மனிதர்களின் ‘சாகா வரம்’ நோக்கிய தேடலில் ஒரு புதிய, ஆராய்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. மரணமடைந்தவர்களின் உடல்களைப் பாதுகாத்து, எதிர்கால அறிவியல் வளர்ச்சியால் மீண்டும் உயிர் பெறச் செய்யும் திட்டத்தை இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த முயற்சி மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
டுமாரோ பயோ நிறுவனம், உயிரிழந்தவர்களின் உடல்களை மிகக் குறைந்த வெப்பநிலைக்கு (கிரையோப்ரிசர்வேஷன் – Cryopreservation) விரைவாகக் குளிர்விப்பதன் மூலம் பாதுகாக்கின்றது. இதன் நோக்கம், உடல் செல்களின் சேதத்தையும் சிதைவையும் தடுத்து நிறுத்துவதாகும். எதிர்காலத்தில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளரும்போது, உறைய வைக்கப்பட்ட இந்த உடல்களை மீண்டும் உயிருடன் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நூதன முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சேவைக்கான கட்டணம் சற்றே அதிகம். $200,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.74 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறந்த உடலைப் பாதுகாப்பதில் நேரம் மிக முக்கியம் என்பதால், சட்டப்பூர்வ மரணத்திற்குப் பிறகு உடனடியாக செயல்முறையைத் தொடங்குவதே டுமாரோ பயோவின் திட்டமாகும். இதற்காக, 24 மணி நேரமும் செயல்படும் அவசரக் காத்திருப்பு குழுவையும் அவர்கள் வைத்துள்ளனர்.
இதுவரை, 650க்கும் மேற்பட்டோர் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தச் சேவைக்கு முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மரணத்திலிருந்து அறிவியல் தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தங்கள் உடலைப் பாதுகாக்க முடிவெடுத்துள்ளனர். ஐரோப்பாவில் இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் டுமாரோ பயோ ஆகும். இதுவரை 3 அல்லது 4 மனித உடல்களையும், 5 செல்லப் பிராணிகளின் உடல்களையும் இந்த நிறுவனம் பராமரித்து வருகிறது என்பது வியப்புக்குரிய தகவல். விரைவில் அமெரிக்காவிலும் இந்தச் சேவையை அறிமுகப்படுத்த டுமாரோ பயோ திட்டமிட்டுள்ளது.
டுமாரோ பயோ’வின் இந்த முயற்சி, மனிதர்களின் சாகா வரம் குறித்த ஆசையையும், எதிர்கால அறிவியல் மீதான நம்பிக்கையையும் ஒருசேர வெளிப்படுத்துகிறது.
* வயது ஆக ஆக நம் உடல் உறுப்புகள் பழுதாகும். அப்படிப் பழுதான உறுப்புகளுக்குப் பதிலாகப் புதிய புதிய உறுப்புகளை மாற்றுவதன் மூலம் முதுமையைத் தடுக்க முடியும்; மனித ஆயுளை நீட்டிக்க முடியும். இப்படிச் சொன்னவர்கள் மருத்துவர்களோ, விஞ்ஞானிகளோ அல்ல! இரண்டு பெரிய வல்லரசு நாடுகளின் தலைவர்கள்.
சமீபத்தில் சீனாவில் இரண்டாவது உலகப்போர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ராணுவ அணிவகுப்பு நடந்தது. அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் புதினும் பேசிக்கொண்டனர்.
அந்த உரையாடலில், “கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது என்பது அரிது. ஆனால், இன்று உங்கள் 70களில்கூட, இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள்” என்று புதினைப் புகழ்ந்தார் ஜி ஜின்பிங்.
அதற்கு புதின், “ஆம். இன்னும் சில ஆண்டுகளில், உயிரி தொழில் நுட்பத்தின் வளர்ச்சியுடன் மனித உறுப்புகள் தொடர்ந்து மாற்றப்படும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக இருப்பீர்கள். அந்த வகையில் இறவாமை என்பது இனி சாத்தியமாகும். நவீனத் தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் 150 வயது வரை வாழும் வாய்ப்பு உருவாகலாம்” என்றார் புதின்.
மனித உடலானது மாற்று உறுப்புகளை நிராகரிக்காமல் இருக்கப் புதிய வழிமுறைகளை உருவாக்கும் பணியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளை உறுப்பு தானம் தரும் விலங்குகளாகப் பயன்படுத்துகின்றனர். ‘CRISPR என்னும் மரபணுத் திருத்தச் செயல்பாடு (Gene editing) மூலம், பன்றிகளின் சில மரபணுக்கள் அகற்றப்பட்டு, சில மனித மரபணுக்கள் அங்கு சேர்க்கப்படுகின்றன. இதனால் உறுப்புகள் மனிதர்களுக்கு ஏற்றவையாக மாறுகின்றன.”மனித உடலுக்கு ஏற்ற வகையில் பன்றிகளின் உறுப்புகள் இருப்பதால், இவ்வித சிறப்புப் பன்றிகளை வளர்ப்பது சிறந்த வழியாகும்” என்கின்றனர் நிபுணர்கள். இந்தச் செயல்முறை இன்னும் ஆரம்பப் பரிசோதனை நிலையிலேயே இருக்கிறது. இருந்தாலும், இதுவரை இதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் இந்த வழியில் செய்யப்பட்டுள்ளன.
உதவிக்கு வரும் ஸ்டெம் செல்கள்
மனித உடலில் இருக்கிற ஸ்டெம் செல்கள் (Stem cells) மூலம் புதிய செல்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதிலும், இதன் வழியாகப் புதிய உடல் உறுப்புகளைப் பெற முடியும் என்பதிலும் நவீன மருத்துவம் ஆராய்ச்சிகளை மேம்படுத்திவருகிறது. ஸ்டெம் செல்கள் என்பவை உடலின் அடிப்படை செல்கள் ஆகும். ஸ்டெம் செல்லை மரத்தின் விதைக்கு ஒப்பிடலாம். ஒரு விதையானது வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி எனப் பல அவதாரங்கள் எடுப்பதுபோல், ஒரு ஸ்டெம் செல்லிலிருந்து உடலின் அனைத்து உறுப்புகளும் உருவாகலாம். இந்த அடிப்படையில் 2020 டிசம்பரில், இங்கிலாந்தின் UCL மற்றும் Francis Crick நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனித நோய்த் தடுப்பாற்றல் அமைப்பில் (Immune system) அத்தியாவசியமான தைமஸ் உறுப்பை உருவாக்கி, எலிகளில் பதியம் செய்தபோது அது மனித உடலில் செயல்படுவதுபோல் செயல்பட்டது. இது உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய முன்னேற்றம் ஆகும்.
பிறப்பு, இறப்பு என்ற வட்டத்துக்குள்ளே தான் மதங்களும் கடவுள்களும் சுற்றி சுழன்றுக் கொண்டே இருக்கின்றன. அனைத்துக்கும் பொறுப்பு ஏற்பது கடவுள்தான் என்ற பிற்போக்கு சிந்தனைகளை அறிவியல் தகர்த்து வருகிறது. கடவுள்கள் கலாவதியாகும் காலத்தில், இங்கே ஆன்மா, மறுஜென்மம், தர்ப்பணம், சமஸ்கிருதம் என்று மடமையில் மூழ்கிப்போய் கிடக்கிறார்கள்.
நடிகர் ரோபோ சங்கரை கடவுள் அழைத்துக் கொண்டாரா?.
சீன அதிபரும், ரஷ்ய அதிபரும் பேசிய ’இறவாமை.’
இறந்தவர்களுக்கு உயிரை மீட்டுத் தரும் ஜெர்மன் ஆய்வு நிறுவனம்.
காக்காய் பிடிக்க முடியாத காக்கைகள்…
பெரியார் முழக்கம் இதழ் 25092025
