உலக ஆய்வாளர்கள் பங்கேற்ற பெரியார் கருத்தரங்கம்

தொன்­மை­யான தமிழ் பண்­பாடு உலக சிந்­த­னைக்கு அளித்த எத்­த­னையோ கொடை­க­ளில் இரண்­டினை முதன்­மைப்­படுத்திச் சொல்ல வேண்­டும் என்­றால் அது ஐயன் திரு­வள்­ளு­வ­ரின் திருக்குறளும், பெரியாரின் சிந்­த­னை­க­ளும் என­லாம். திரு­வள்­ளு­வர் தொடர்ந்து மொழி­யாக்­கம் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார். லண்­டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்­கு­றளை 1886-ஆம் ஆண்டே மொழி­யாக்­கம் செய்த ஜி.யு.போப் அவர்­க­ளின் கல்­ல­றைக்கு சென்று மரி­யாதை செலுத்தியுள்ளார். அத­னால் திருக்­கு­றள் உல­கில் பர­வ­லாக அறி­யப்பட்­டது.

பெரி­யா­ரைப் பொறுத்­த­வரை அவர் தன் சிந்­தனைகளைத் தொகுத்து நூலாக எழு­த­வில்லை. ஒரு சில பிர­சு­ரங்­கள் அவர் பெய­ரில் வந்துள்ளனவே தவிர, ஒரு விரி­வான அர­சி­யல் தத்­துவ நூலா­கவோ, சித்­தாந்த நூலா­கவோ எழு­த­வில்லை. மாறாக அவர் தொடர்ந்து மக்களி­டையே பிரச்­சா­ரம் செய்து பெரும் சிந்­த­னைப் புரட்­சியை பொது­மன்­றத்­தில் உரு­வாக்­கி­ய­வர். செயல்­முறை தத்­து­வம் (philosophical praxis) என்­பதை மேற்­கொண்­ட­வர். கற்­றோ­ருக்­கான நூல்­களை எழுதுவதைவிட, அனைத்து மக்­க­ளை­யும் சிந்­திக்க வைத்து சுய­ம­ரியா­தையை சுடர் விடச் செய்­வதையே அவர் முக்­கி­யப் பணி­யா­கக் கரு­தி­னார்.

அவர் வாழ்­நா­ளி­லேயே அவர் உரை­க­ளின் எழுத்து வடி­வங்­க­ளும், எழுத்துக்களும் தொகுக்­கப்­பட்டு வெளி­வந்­தா­லும் அவை மொழியாக்கம் செய்­யக் கடி­ன­மா­னவை என்­ப­தால் பெரு­ம­ளவு அவ்­வி­தம் நடந்து வெளி­யு­ல­கில் பர­வ­வில்லை. மேலும் கல்­விப்­பு­லத்­தில் நிறைந்­திருந்த பார்ப்பனர்களுக்­கும், பிற மேல் தட்­டி­ன­ருக்­கும் அவ­ரைக் குறித்த சரியான புரி­தல் இல்லை. இடது சாரி சிந்­த­னை­யா­ளர்­கள் பல­ருக்­கும் கூட அவரைக் குறித்த சரி­யான புரி­தல் இருக்­க­வில்லை. அதனால் அவருடைய அளப்பரிய அரும்­பணி, மானு­ட­வ­ர­லாற்­றில் அவர் உருவாக்­கிய தனித்­துவ­மிக்க சிந்தனைப் புரட்­சி­யின் சிறப்­பம்­சங்­கள் உலக அரங்­கில் விவா­திக்­கப்­பட கணி­ச­மான கால­தா­ம­தம் ஆகியுள்ளதைப் புரிந்­து­கொள்ள முடி­யும்.

அப்­படி அறி­யப்­ப­ட­வேண்­டிய சிறப்­பம்­சங்­கள் என்ன என்பதையும் சுருக்க­மா­கக் கூறி­வி­டு­வோம்.பெரும்­பா­லான உல­கத் தலை­வர்கள் மக்களை திரட்டி ஆட்சி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­று­வார்­கள் அல்லது தேசிய விடுதலையை சாதித்து புதிய அர­சு­ரு­வாக்­கத்திற்கு வகை செய்வார்கள். இதற்கு மாறாக பெரி­யார் மக்­க­ளின் சிந்தனையிலே புரட்சிகர மாற்றத்தை உரு­வாக்கி, புதிய விழு­மி­யங்களின் அடிப்படையிலே குடிய­ரசை உருவாக்க முயற்சித்­தார். இதனை சமூக சீர்­தி­ருத்­தம் என்று சொல்லிவிட முடியாது. புதிய குடி­ய­ர­சின் அடித்­த­ளத்தை உரு­வாக்­கு­தல்.

இன்­னும் தெளி­வா­கச்சொன்­னால் இந்­திய சமூ­கத்­தில் பர­வ­லாக வேரூன்றிய வர்ண தர்ம சிந்­த­னையை, பிறப்­பி­லேயே ஏற்­றத்­தாழ்வு கற்பிக்­கும், பிறப்பையே தண்­ட­னை­யாக்­கும் வர்ண தர்ம சமூக ஒழுங்கை முற்­றி­லும் அகற்றி, பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும் என்ற வள்­ளுவர் வாக்­கிற்கு ஏற்ப சமத்­துவ விழு­மி­யத்தை நிலை­நி­றுத்­து­வதே அவர் மேற்கொண்ட சிந்­த­னைப் புரட்­சி­யின் அடிப்­படை.

அவ­ரு­டைய பணி­யின் விளை­வாக “திரா­வி­ட-­த­மி­ழர்” என்ற ஒரு மக்­கள் தொகுதி தன்­னு­ணர்வு பெற்று பிராம­ணீய கருத்­தி­யல் மேலாதிக்கத்தினை (Brahmin Hegemony) மறுதலிக்கும் ஆற்­ற­லு­டன் செயல்­ப­டு­வது சாத்தியமானது. இருப்­பி­னும் இந்­திய ஒன்­றிய அர­சி­டம் குவிந்­துள்ள அதிகா­ரங்­கள் உருவாக்­கும் தளை­களை மீறி இந்த மக்­கள் தொகுதி தொடர்ந்து தன் இலட்­சி­யத்தை அடைய போராடி வரு­கி­றது.

* இந்த உண்மை, பெரி­யார் மக்­க­ளின் சிந்­த­னைப் புரட்­சியை நாடியவர், தேசிய அரசை உரு­வாக்க முனை­யா­மல், குடி­ய­ரசு விழு­மி­யங்­களை நிறுவமுயன்­ற­வர், அதன்மூலம் மக்­க­ளின் மனங்­க­ளிலே சுய­ம­ரி­யாதைக் கனலை உரு­வாக்­கி­ய­வர் என்ற உண்மை இன்­னும் முழு­மை­யாக உள்வாங்கப்ப­ட­வில்லை.

* தேசிய அரசை உரு­வாக்­கு­ப­வர்­களே வர­லாற்றில் கவ­னம் பெறுவார்கள் என்­ப­தால் பெரி­யா­ரின் சிந்­த­னைப் புரட்சி போதிய கவ­னம் பெறவில்லை என்­றும் கூற­லாம்.

ஆனா­லும் ஆயி­ரம் கைகள் மறைத்து நின்­றா­லும் ஆத­வன்மறை­வ­தில்லை என்­பது போல பெரி­யா­ரின் சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் பேரொளி எல்லை கடந்­தும் வீசத் துவங்­கி­யுள்­ளதை வியப்­ப­தற்­கில்லை. இந்த கருத்த­ரங்கத்தை ஒருங்­க­மைத்த அமைப்பு எது, பங்­கேற்ற அறி­ஞர்கள் யார், யார் என்­பதை நாம் சுருக்­க­மாக அறிய வேண்­டும்.

ஆயி­ரம் ஆண்­டு­கள் பழ­மை­யான, உல­கப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலை­க்க­ழ­கத்­தில் பல்­வேறு துறைகளும், 36 கல்லூரிகளும் அடங்கியுள்ளன. அவற்­றில் ஒரு கல்லூரி­தான் செயிண்ட் ஆண்டனி கல்­லூரி. அதில் உள்ள ஆசிய ஆய்வு மையம் “சுயமரியாதை இயக்கமும், அதன் தாக்­கங்­களும்” (Self Respect Movement and its Legacies) என்ற தலைப்­பில் ஒருங்­க­மைத்த கருத்­த­ரங்­கம் செப்­டம்பர் 4,5 தேதிகளில் நடந்­தே­றி­யது. அந்­தக் கல்லூ­ரி­யின் பேராசி­ரி­யர்­கள் ஜிம் மாலின்­ச­னும், ஃபைசல் தேவ்ஜி­யும் இந்­தக் கருத்­த­ரங்­கின் அமைப்பா­ளர்­கள் ஆவார்கள். இந்­தக் கருத்­த­ரங்கம் குறித்த செய்திகள் பல்­வேறு நாளே­டுக­ளி­லும் இடம்பெற்றுள்­ளன.

உல­கின் பல்­வேறு முன்­னணி கல்வி நிறு­வ­னக­ளில் பணி­பு­ரி­யும் ஆய்வாளர்கள் பலர் இதில் பங்கேற்று கட்­டு­ரை­கள் வாசித்­துள்ளனர். அபி­மன்யு ஆர்ணி, ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லை­க­ழ­கம்; கணேஷ்வர், ஹைதரா­பாத் பல்கலைக் கழகம்; சுந்­தர் சருக்­காய், பேர்ஃ­புட் பிலாசஃபர்; எஸ்.ஆனந்தி, எம்.ஐ.டி.எஸ்; கிருபா முனு­சாமி, மிடில்­சக்ஸ் பல்க­லைக்கழகம்; விக்­னேஷ் ராஜாமணி, கிங்க்ஸ் காலேஜ், லண்­டன்; கார்த்­திக் ராம் மனோ­ஹர், நேஷ­னல் லா ஸ்கூல்; ஜெ.ஜெய­ரஞ்­சன், தமிழ்­நாடு மாநில திட்­டக்­குழு; ஆ.இரா.வெங்கடாசல­பதி, எம்.ஐ.டி.எஸ்; கிறிஸ்­டொஃபே ஜெஃபர்லோ, சையின்ஸ் போ, பாரிஸ்; சூரஜ் யாங்டே, ஹார்­வார்டு பல்­க­லை­க­ழ­கம்; பிரான்­சிஸ் கோடி, டொராண்டோ பல்­க­லை­க­ழ­கம்; மார்த்தா ஆன் செல்பி, ஹார்வார்டு பல்­க­லைக்கழகம்; சாரா ஹோட்­ஜஸ், கிங்க்ஸ் காலேஜ், லண்டன்; சுமதி ராம­சாமி, டியூக் பல்­க­லை­க­ழ­கம்; தாரிணி அழ­கர் சாமி, சிங்­கப்­பூர் தேசிய பல்கலைக்கழகம்; கமலா விஸ்வேஸ்வரன், ரைஸ் பல்கலை­க­ழ­கம்; சரோஜ் கிரி, டெல்லி பல்கலைக்கழகம் என முன்னணி ஆய்­வா­ளர்­கள் பங்­கேற்று பங்களித்துள்ள­னர்.

இந்த சிறப்­பு­மிக்க கருத்­த­ரங்­கின் பகு­தி­யா­கத்­தான் செப்­டம்­பர் 4ஆம் தேதி மாலை முதல்­வர் ஸ்டாலின் சிறப்­புரை ஆற்­றி­யுள்­ளார். பகுத்தறிவுப் பகலவன் பெரி­யார் உரு­வப் படத்­தைத் திறந்து வைத்­துள்ளார். செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை இறு­திச் சிறப்­பு­ரையை புகழ்­பெற்ற மூத்த மானுடவியல் ஆய்­வா­ளர், தமிழ்­நாட்டை பூர்­வீ­க­மா­கக் கொண்ட அர்­ஜுன் அப்­பாதுரை அவர்­கள் நிகழ்த்­தி­யுள்­ளார்.

இந்த நிகழ்­வு­க­ளின் பகு­தி­யாக கார்த்­திக் ராம் மனோ­ஹ­ர­னும், ஆ.இரா.வெங்க­டா­ச­ல­ப­தி­யும் தொகுத்­துள்ள “கேம்­பி­ரிட்ஜ் கம்பேனியன் டு பெரியார்” என்ற ஆய்­வுக் கட்­டு­ரை­கள் அடங்­கிய நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெரி­யார் குறித்த ஆய்­வுப்­பு­லத்­திற்கு முக்­கிய பங்­க­ளிப்பாக அமை­யக்கூடிய நூல் இது என­லாம்.

இத்­த­கைய சிறப்பு வாய்ந்த நிகழ்­வில் முதலமைச்சர் பங்­கேற்­றது, பெரியார் படத்தை திறந்­து­ வைத்­த­தும் திரா­விட மாடல் அர­சின் சித் தாந்த வேர்களை எடுத்­து­ரைக்­கும் சிறப்பு வாய்ந்­தது. சுய­ம­ரி­யாதை என்ற சொல்­லின் சிறப்பினை முதல்­வர் எடுத்­து­ரைத்து உரை நிகழ்த்­தி­யுள்­ளதை காணொ­லி­க­ளில் காண முடி­கி­றது. திரா­வி­ட­விய அர­சி­ய­லின் வர­லாற்­றுத் தொடர்ச்­சி­யில் மற்­றொ­மொரு மைல்­கல்­லாக இந்த நிகழ்வு அமை­கி­றது என்­றால் மிகை­யா­காது.முதலமைச்சருடன் மனுராஜ் சண்முகசுந்தரம் உள்­ளிட்ட திரா­விட இயக்க ஆர்­வ­லர்­களும் பங்­கேற்­றுள்­ள­னர்.

இந்த நிகழ்ச்சி தரும் எழுச்சியை சகிக்க முடியாமல் பாஜக தலைவர் தமிழிசை பேசியிய ஒரு காணொலி ஒன்று இணையத்தில் பரவலாக கிடைக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமே நடத்தவில்லை அந்த வளாகத்தில் ஒரு அரங்கை வாடகைக்கு எடுத்து திமுக நடத்தியுள்ளது என்றெல்லாம் பேசியுள்ளார் அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்விற்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று வலியுறுத்தி சொல்கிறார்கள் கல்யாண மண்டபத்தில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுப்பது போல் திமுகவினர் வாடகைக்கு எடுத்து அதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி என்று பொய் பிரச்சாரம் செய்வதாக கூறுகிறார்கள்.

முதலில் சுய­ம­ரி­யாதை உள்ள தமி­ழர்­க­ளாக நாம் ஒன்றைப் புரிந்­து­கொள்ள வேண்­டும். பெரியார் குறித்து கருத்தரங்கம் நடத்துவதால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு தான் பெருமையே தவிர அதனால் பெரியாருக்கோ திமுகவிற்குகோ தனியான பெருமை எதுவும் சேரப் போவதில்லை திராவிட இயக்கத்தின் பெருமை எல்லாம் தமிழ் சமூகத்தை வருடியிலிருந்து விடுவித்து மானமுள்ள சுயமரியாதை உள்ள தன்உணர்வு பெற்ற சமூகமாக மாற்றி வருவதுதான். உலக வரலாற்றைப் படிப்பதற்கு தான் பல்கலைக்கழகமே தவிர பல்கலைக்கழகத்திற்காக வரலாறு நிகழ்வதில்லை.

வர்ண தர்­மத்தை இந்­தி­யக் குடி­ய­ரசு முற்­றாக நிரா­க­ரிக்க வேண்­டும் என்ற­வர் பெரி­யார். அத­னையே குடியர­சின் அடிப்படை­யாகக் கொள்ள வேண்­டும் என்­றவர் ஆர்.எஸ்.எஸ் சிந்­தாந்­த­வாதி கோல்வால்கர். பொது­வா­கவே இந்­திய தேசி­ய­வா­தி­கள், சிந்தனையாளர்­கள் பல­ரும் உறுதிபட மனு ஸ்மிருதி முன்­வைக்­கும் வர்ண தர்­மத்தை முற்­றாக நிராகரிக்க வேண்டும் என்று கூறி­ய­தில்லை. அவ்­விதம் கூறு­வது அந்த தர்மத்தை சமஸ்கிருதத்தில் எழுதி, இன்று வரை தங்­களை அதன்­படி உயர் பிறப்பாளர்க­ளா­கக் கருதிக் ­கொள்­ளும் பிரா­ம­ணர்­களை வருந்தச் செய்யும் என்­ப­தால் சற்றே நீக்கு போக்கா­கத்­தான் அதைப்­பற்­றிப் பேசுவார்கள். அதனை முற்று முழுதாக எதிர்த்து பேசி­ய­வர்­கள் பூலே, பெரி­யார், அம்பேத்­கர் ஆகிய பேராளுமைகள்தான்.

பெரி­யார் அதனை பெரி­ய­தொரு மக்­கள் இயக்கமாக மாற்றி திரா­வி­டர் கழ­கம் என்­றும், திமுக என்றும் இரட்டைக் குழல் துப்­பாக்­கி­யாக விட்டுச் சென்றுள்ளார். அது இன்­று­வரை வர்ண தர்ம மீட்பு வாத த்துடன் போராடுகிறது. அது­தான் அவர்களுக்கு இந்த காழ்ப்பு. இந்த மையப் பிரச்சினையை மறைத்து கட­வுள் நம்பிக்கை, இந்து மதம் என்று ஏதேதோ பேசு­வார்­கள். ஆனால் திரா­விட- தமிழ் மக்­கள் ஏமா­று­வ­தில்லை. அவர்கள் விரும்­பும் தெய்­வங்களை வழி­ப­டு­வார்­கள்; பெரி­யா­ரின் சுய­ம­ரியாதை தத்துவத்­தை­யும் புரிந்­து ­கொள்­வார்­கள்.

பிரச்­சினை மனி­தர்­க­ளுக்­குள் பிறப்­பி­லேயே ஏற்றத்தாழ்வு கூடாது என்பது­தானே தவிர கடவுளை வணங்­கு­வது இல்லை. கட­வுள் பெயரால் பார்ப்பனர்கள் ஏற்­றத்­தாழ்வை உரு­வாக்­கு­வ­தால்­தான் பெரி­யார் கடவுளின் இருப்­பை­யும் கேள்விக்கு உள்ளாக்­கி­னார். அவர் அதையே தெளி­வாக விளக்கவும் செய்­தார். அவர் வாழ்ந்த காலத்­தில் அனைத்து சமூகத்தையும் சார்ந்த முற்­போக்கு சிந்தனை­யா­ளர்­கள் அவரைக் கொண்டாடவே செய்த­னர். புகழ்­பெற்ற எழுத்தாளர் பார்ப்பன வகுப்­பைச் சார்ந்த வ.ராம­சாமி, 1944-ஆம் ஆண்டு வெளி­யான தமிழ் பெரி­யோர்­கள் என்ற நூலில் பெரி­யா­ரையே முத­லில் சிறப்­பித்து, கொண்டாடி எழு­தி­யுள்­ளார்.

பார­தீய ஜனதா கட்­சி­யும் வர்ண தர்மத்தை அகற்றி­ விட்டு, திராவிட நெறியான பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும் என்­பதை மனப்­பூர்வமாக ஏற்க வேண்டும். அதுவே உண்­மை­யான தேச நல­னாக இருக்­கும். அப்போது பெரி­யா­ரும் தேசி­யத் தலை­வ­ரா­கத் தெரி­வார்.
– ராஜன் குறை கிருஷ்ணன்
மின்னம்பலம் இணையதளம்
பெரி­யா­ரைக் குறித்து கருத்­த­ரங்­கம் நடத்­து­வ­தால் ஆக்ஸ்­போர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குத்­தான் பெரு­மையே தவிர, அத­னால் பெரி­யா­ருக்கோ, தி.மு.க-விற்கோ தனி­யான பெருமை எது­வும் சேரப்­போ­வ­தில்லை. உலக வர­லாற்றை படிப்­ப­தற்­குத்­தான் பல்கலைக்­க­ழ­கமே தவிர, பல்­க­லை­க்கழகத்­திற்­காக வர­லாறு நிகழ்­வ­தில்லை.
பெரியார் முழக்கம் இதழ் 11092025

You may also like...