இந்துராஷ்டிரத்திற்குள் அடங்க மறுக்கும் தமிழ்நாடு (4) – பேராசிரியர் ஜெயராமன்
(01.02.2024 இதழில் வெளியான உரையின் தொடர்ச்சி)
1953இல் ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்தது. 1956-இல் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை மொழிவழி மாநிலங்களாக அமைகிறது. இந்த ஐந்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து தட்சிணப் பிரதேசமாக அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியபோது, பெரியார் இதை கடுமையாக எதிர்த்து, தற்கொலைக்கு சமம் என்றார். திருவனந்தபுரத்தில் நேரு இதைப்பற்றி கேட்கும்போது “பெரியார் இதை எதிர்க்கிறார், ஏற்க முடியாது” என்று கூறினார் காமராசர். நேருவுக்கு பெரியார் என்றால் யாரென்று தெரியும். அதனால் சத்தமில்லாமல் அந்தத் திட்டத்தை கைவிட்டார். இப்படி பெரியார் சொன்னவைகள்தான் நீதிக்கட்சி ஆட்சி முதல் சட்டங்களாக ஆனது, பெரியார் சொன்னதுதான் காமராசர் ஆட்சியில் திட்டங்களாக மாறின. மக்களுக்கு கல்வியை கொடுங்கள் என்று காமராசரிடம் பெரியார் சொன்னபோது அதை அப்படியே மறுக்காமல் நிறைவேற்றினார் காமராசர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பள்ளிக்கூடம், ஐந்து மைல் தொலைவுக்கு ஒரு மேல்நிலைப்பள்ளிகள் வந்தன. அப்பொழுதுதான் எல்லாரும் படிக்க வந்தார்கள்.
மயிலாடுதுறை நடந்த ஒரு கூட்டத்தில் பெரியாருக்கு தங்கத்தினால் ஆன செயின் ஒன்றை கழகத் தோழர்கள் அணிவித்த போது, இதை எனக்கு அணிவிக்காதீர்கள், காமராசரின் காலடியில் வையுங்கள் என்று பெரியார் சொன்னாராம். ஏனென்றால் இந்த மக்களின் கல்விக்கண்ணை திறந்தவர் காமராசர். காமராசர் ஆட்சி முடிந்த பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தது. இந்த ஆட்சியை பெரியாருக்கு அற்பணிக்கிறோம் என்று அறிவித்தார் பேரறிஞர் அண்ணா. பெரியார் நினைத்ததுதான் அண்ணா ஆட்சியில் திட்டங்களானது. அடுத்து கலைஞர் ஆட்சிக்கு வந்தார். “கோயில் வாசல் வரை வந்த என் மக்களை கற்ப கிரகத்துக்குள் அனுமதி மறுக்கிறார்கள், இது என் நெஞ்சில் முள் போன்று குத்துகிறது” என்றார் பெரியார். உடனே அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகலாம் என்ற திட்டத்தை அறிவித்து பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றினார் கலைஞர். அப்படியானால் கடந்த நூறாண்டுகளாக பெரியார் காட்டிய வழியில்தான் ஆட்சியதிகாரங்கள் செயல்பட்டு வருகின்றன.
பெரியார் இறந்து 50 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் இன்றும் சங் பரிவாரக் கூட்டம் பயந்து அலறுகிறது. பெரியார் பெயரை கேட்டாலே அமித்ஷாவுக்கும், மோடிக்கும் இன்னும் அலர்ஜியாகவே இருக்கிறது. எச்.ராஜா பயப்படுகிறார். இவர்களுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் பெரியார். அதனால் தான் எந்த தலைவரையும் அவர்களால் இப்படி எதிர்க்க முடியவில்லை. பெரியார் என்ற பிம்பத்தை, பேருருவத்தை தகர்த்தாக வேண்டும். திராவிடம் என்ற கருத்தியலை தகர்த்தாக வேண்டும். அப்படி தகர்த்தெரியாவிட்டால் இந்து ராஷ்டிரத்திற்குள் தமிழ்நாட்டைக் கொண்டுவர முடியாது. அந்த கவலையில்தான் அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இந்தியா முழுவதும் இந்து என்ற அடைமொழியோடு செல்லும் அவர்கள், தமிழ்நாட்டிற்குள் மட்டும் தமிழ் முழக்கத்துடன் வருகிறார்கள். இந்த முழக்கம் தமிழ்நாட்டில் எடுபடாது என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் தமிழ் தமிழ் என்று பேசிக்கொண்டே இந்துத்துவா திட்டங்களைப் புகுத்த ஆரம்பிப்பார்கள். பெரியாரை திட்டுகிறவர்கள், திராவிடம் என்ற சொல்லை வெறுக்கிறவர்கள் எல்லாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்துத்துவா சேவையில் இருக்கிறார்கள்.
2023ஆம் ஆண்டு “விஷ்வகர்மா யோஜனா” என்ற ஒரு புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் வாயிலாக 18 ஜாதிகள் தங்களது ஜாதித் தொழில்களான முடிவெட்டுதல், பானை செய்தல் உள்ளிட்டத் தொழில்களை பாரம்பரியமாக செய்ய வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு நிதியுதவி செய்கிறது. இவர்கள் தங்களது ஜாதித் தொழில்களைக் கைவிடக்கூடாது என்பதற்காகவே “விஷ்வகர்மா யோஜனா” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
பார்ப்பனர்கள் கோயிலுக்குள் உள்ள சிலைக்கு சந்தனம், அரப்பு உள்ளிட்டவைகளை தடவி, பின்னர் தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு பாலாபிஷேகம் செய்வார்கள். ஆனால் அந்த சிலை அப்படியே இருக்கும். இது ஒன்றும் கடினமான பணியல்ல. ஆனால் முடி வெட்டுதல் என்பது எவ்வளவு கடினமானது. அந்த தொழிலையே செய்பவர்கள் அர்ச்சகராக சென்றால் எவ்வளவு எளிமையாக அந்த பணியை செய்வார்கள்? ஏனென்றால் அந்த சிலை தனது தலையை திருப்பாது, எந்த கடவுள் சிலையாவது தலையை திருப்பியதாக வரலாறு உண்டா? நீங்கள் யாராவது பார்த்ததுண்டா? அதனால் பார்ப்பன அர்ச்சகர்களை விட முடித் திருத்தும் தொழிலாளர்கள் பல மடங்கு உயர்ந்தவர்கள், அர்ச்சகர் பணியை மிக எளிதாகச் செய்வார்கள். அவர்களைதான் கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய வேண்டுமென்று நான் கருதுகிறேன்.
1971-இல் தந்தை பெரியார் அனைத்து ஜாதியினரும் கோயில் கற்ப கிரகத்துக்குள் நுழைய முடியாமல் இருப்பதை பார்த்து “தனது நெஞ்சில் குத்திய முள்” என்று குறிப்பிட்டார். 1974ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராலம் என்ற சட்டத்தை அன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றத்துக்கு சென்றனர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம், ஆனால் ஆகம முறையை பின்பற்ற வேண்டும். ஆகவே இவர்களால் அர்ச்சகராக முடியாது என்று வாதிட்டனர். எனவே இந்த சிக்கல் தொடர்ந்தது. 2007ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் முறையாக பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என்று கூறி ஆகம பயிற்சிப் பள்ளிகளை தொடங்கினார்.
2015ஆம் ஆண்டு நீதிபதி ரஞ்சன் கோகாய், பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகராவதில் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கினார். 2018ஆம் ஆண்டு மாரிசாமி என்ற சூத்திரர் அர்ச்சகரானார். 2011இல் பயிற்சி பெற்ற பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டனர். தற்போதுவரை 15 பெண் ஓதுவார்கள் இருக்கிறார்கள். 2023இல் ரம்யா, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி என்ற 3 பெண் உதவி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ரஞ்சிதா ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர், ரம்யா கூலித் தொழிலாளியின் மகள், கிருஷ்ணவேணி பூசாரி வகுப்பைச் சார்ந்தவர்.
1924ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் 604 நாட்கள் வரை நீடித்தது. வழக்கறிஞராக இருந்தாலும் கூட சூத்திர, பஞ்சமர்கள் வைக்கம் கோயில் சாலையிலேயே நுழைய முடியாது. அந்த சாலையில் நடக்க உரிமை வேண்டிதான் சுமார் 2 ஆண்டுகள் போராடினார்கள். அந்த போராட்டத்தின் போது அங்கிருக்கும் உள்ளூர் தலைவர்களெல்லாம் கைதானபோது, போராட்டத்தை தலைமையேற்று நடத்த பெரியாருக்கு அழைப்பு வந்தது. பெரியார் வைக்கம் சென்றார். அவர் போராட்டத்தில் கெட்டிக்காரர். அவரை யாரும் முடக்கிவிட முடியாது. திருவனந்தபுரம் முதல் நாகர்கோயில் வரைக்கும் கடுமையான பரப்புரையை மேற்கொண்டார். அங்கிருந்த பேராசிரியர் குசுமன், பெரியாருடைய நாவண்மை, மக்களைத் திரட்டும் பண்பு, அதுதான் இந்த போராட்டத்தில் வெற்றியைப் பெற்றுத்தந்தது என்று எழுதியுள்ளார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மிகவும் சிரமப்பட்டு அந்த சாலையில் நடக்க அனுமதி வாங்கினார்கள் அல்லவா? இது நடந்தது 1924-இல். 2023இல் கற்ப கிரகத்துக்குள் தலித் பெண் உதவி அர்ச்சகர் நுழைய முடிந்திருக்கிறது. 100 ஆண்டுகளில் இதைச் சாதித்தது யார்? திராவிட இயக்கம்தானே? அவ்வளவு எளிதாக இது நடந்துவிட்டதா? “தந்தை பெரியார்தான் இருந்து இயக்கினார், தற்போது இறந்தும் இயக்குகிறார்”.
சனாதனத்தின் கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. மகாராஷ்டிராவில் பஞ்சமர்கள் வாயில் ஒரு குவளையையும், இடுப்பில் ஒரு தென்னை ஓலையையும் கட்டிக்கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் நடந்தால் தரை தீட்டாகிவிடுமாம். உயர்ந்த ஜாதியினாராகக் கருதிக் கொள்பவர்கள் எதிரில் வந்தால் கீழே படுத்துக்கொள்ள வேண்டும். கேரளாவில் நம்பூதிரி பார்ப்பான் தெருவில் வந்தால் நாயர் வகுப்பினர் 7 அடி தொலைவுக்கு அப்பால் செல்ல வேண்டும். புலையர்கள் 96 அடி தொலைவில் நிற்க வேண்டும். யார் யார் எத்தனை அடி தூரத்தில் இருந்து வர வேண்டும் என்பதெல்லாம் இங்கு வகுக்கப்பட்டிருந்தது. அந்தக் கொடுமைகள் எல்லாம் தற்போது அடித்து நொறுக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் வரும்வரை இங்கு பள்ளிக்கூடங்களே கிடையாது. குருகுலம் மட்டுமே உண்டு. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஆனால் அந்த தெருவுக்குள் சென்று சூத்திரர்கள் அமர்ந்து படிக்க முடியாது. இதை பார்த்த ஆங்கிலேயர்கள் இனிமேல் இவர்களுக்கு கல்வி வழங்குவது எங்கள் கடமை என்று கூறி 1813-இல் சாசன சட்டத்தை உருவாக்கி, ஒரு ஆண்டுக்கு ஒரு இலட்ச ரூபாயை ஒதுக்கினார்கள். பின்னர் 1835-இல் லார்ட் மெக்காலே வந்தார். அவர்தான் அப்போதைய கவர்னர் ஜெனரலின் சட்ட ஆணையர். அப்போது பார்ப்பனர்கள் அந்த ஒரு இலட்ச ரூபாயை சமஸ்கிருதத்திற்கும், பாரசீக மொழிக்கும் செலவு செய்யுங்கள் என்று கேட்டபோது, அதை உடனடியாக மறுத்தார் மெக்காலே. அந்த தொகை ஆங்கிலக் கல்விக்கு பயன்படுத்தப்படும் என்று உத்தரவிட்டார்.
“இரத்தத்திலும், நிறத்திலும் மட்டுமே இந்தியர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களது சிந்தனைப் போக்கில் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள். ஆங்கில மொழியில் இருப்பதை எல்லாம் அவர்களுக்கு அளிப்போம். அவர்கள் தங்கள் தாய் மொழியை பலப்படுத்துவார்கள்” என்று சொல்லி அனைவருக்கும் கல்வியை கொண்டுவந்தார். பொதுக்கல்வி என்ற முறையை கொண்டுவந்ததே ஆங்கிலேயர்கள். அப்படி கொண்டுவந்த கல்வி முறையில்தான் நேரு, காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் உருவானார்கள்.
(தொடரும்)
தொகுப்பு : விஷ்ணு
பெரியார் முழக்கம் 08022024 இதழ்