புத்தர் பேசிய கடவுள் மறுப்பு கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-14

பேராசிரியர் அருணன் எழுதிய ‘கடவுளின் கதை’ மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. முதல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரையிலுருந்து சில செய்திகள்…

உலக வரலாற்றிலேயே ஒரு மதத்தின் நிறுவனர் வலுவான கடவுள் எதிர்ப்பு வாதங்களை முதன்முதலாக முன்வைத்தார் என்றால் அவர் புத்தர்தான். கடவுள் எதிர்ப்போடு ஒரு புதிய சமூக ஒழுங்குமுறையை, சிந்தனை கட்டமைப்பை நடைமுறைப்படுத்த முயன்ற மகா புதுமையான முயற்சி புத்தருடையது. அவருக்குப் பிறகு இத்தகைய முயற்சியில் ஈடுபட்ட வேறு மத நிறுவனர் உலகில் தோன்றவும் இல்லை. இவரே முதலும் முடிவும் ஆனவர்.

புத்தரின் வாக்கு என்று பலராலும் ஒப்புக்கொள்ளப்படுகிற ஓர் உரையாடல் ‘தீவிக்க சுத்தம்’ எனும் நூலில் உள்ளது. அதில் ”பிரம்மா” எனத் தாங்கள் கூறுகிற ஒன்றை பார்ப்பனர்களில் எவராவது நேருக்கு நேர் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்களா எனும் கேள்வியை எழுப்பினார் புத்தர். அப்படிச் சொல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார், ஆனால், “தாங்கள் எதை அறியவில்லையோ, எதைப் பார்க்கவில்லையோ அதனோடு ஒன்றுபடுகிற மார்க்கத்தை மட்டும் தங்களால் காட்ட முடியும் என்கிறார்களே, இது முட்டாள்தனம் இல்லையா?” என்று கடுமையாகக் கேட்டார். வேதவாதிகள் பிரம்மம்தான் கடவுள் என்றார்கள். புலன்களால் அறியப்படாத ஒன்றுடன் எப்படி ஒன்றுபட முடியும் என்று அறிவுபூர்வமான கேள்வியை எழுப்பி, ‘கடவுள்’ இருப்பை சந்தேகத்திற்கு உட்படுத்தினார் புத்தர்.

அநாதபண்டிகர் என்பாரோடு புத்தர் நடத்திய உரையாடலை புத்தரின் சீடர் அஸ்வகோஷர் பதிவு செய்திருக்கிறார். அது கடவுளின் இருப்பு பற்றியது. அது முடிவில் கடவுள் மறுப்பாக இருந்தது. இந்த உலகானது கடவுளால் படைக்கப்பட்டது. படைக்கப்படாமல் இது எப்படி தோன்றியிருக்க முடியும் என்கிற வாதம் ஆத்திகவாதிகளால் முன்வைக்கப்பட்டது. அதற்கான புத்தரின் பதில்: “இந்த உலகானது கடவுளால்படைக்கப்பட்டது என்றால் இங்கே இளமையோ மூப்போ, துக்கமோ அதற்கடுத்ததோ இருக்கக் கூடாது. பிறந்துவிட்டால் அப்படியே துன்பம் அல்லது பேரிடர் போன்றவையோ நடக்கக் கூடாது. நல்லது கெட்டது இருக்கக் கூடாது. அனைவரது சுத்தமான மற்றும் அசுத்தமான செயல்கள் எல்லாம் கடவுள் இடமிருந்தல்லவா வந்திருக்க வேண்டும்?” உலகைப் படைத்தது கடவுள் என்றால் இங்குள்ள குறைகளைப் படைத்ததும் அவரே என்றாகி விடுகிறது. குறைகளைப் பிறப்பிக்கிறவர் எப்படி முழுநிறைக் கடவுளாக இருக்க முடியும்? ஆகவே இந்த உலகு எவராலும் படைக்கப்பட்டது அல்ல என்றார்.

உலகைப் படைத்தது கடவுள் என்று பெரும்பாலோர் நினைக்கும்போது அது எப்படித் தவறாக இருக்கும் என்றொரு வாதத்தை முன் வைத்தார்கள். அதற்கு புத்தரின் பதில்: “கடவுள் உண்டு என்றால் அவர் பற்றிய சந்தேகம் ஒருவருக்குமே வரக்கூடாது அல்லவா? தனக்கொரு தந்தை உண்டு என்பது பற்றிய சந்தேகம் மகனுக்கு வருவதுண்டோ? அப்படியொரு நிச்சயமானதாக கடவுள் இல்லையே! தனக்கொரு துன்பம் வந்ததும் தனக்கொரு தந்தை உண்டா என்று எந்த மகனாவது கேள்வி எழுப்புகிறானா? ஆனால், பெருந்துன்பம் ஏற்பட்டதும் “கடவுளே நீ இருக்கிறாயா?” என்று கேள்வி எழுப்புகிறார்களே! கடவுளின் இருப்பு நிச்சயமானது என்றால் பேரழிவுகளுக்காகவும் அவரைப் போற்ற வேண்டுமல்லவா? செய்கிறார்களா? இதிலே வேத மதத்தில் ஏகப்பட்ட கடவுள்கள் இருந்தார்கள். படைப்பு வேலையை இத்தனை கடவுள்களும் சேர்ந்து செய்தன என்றால் அந்த வேலை அவ்வளவு சிக்கலானதா அல்லது கடவுள் தன்மை அவ்வளவு கையாலாகாத்தனமானதா? இது புத்தரின் கேள்வி.

“ஒரு நோக்கமுமின்றி உலகைப் படைத்தார் என்றால் அவர் பால் குடிக்கும் பச்சைக் குழந்தையாக இருக்க வேண்டும். வாழும் உயிர்களில் எல்லாம் துக்கமும் இன்பமும் உள்ளது. அவர்தான் இவற்றுக்குக் காரணம் என்றால் அவர் தன்னுள்ளேயே அன்பையும் வெறுப்பையும் கொண்டிருக்கிறார் என்பதாகும். அப்படிப்பட்டவரை சுய இருப்பாளர் என்று அழைக்க முடியாது”. எப்படிச் சொன்னாலும் இடிக்கிறது. படைப்புக்கு நோக்கமேயில்லை என்பது கடவுளைக் குழந்தையாக்கியது. நோக்கம் உண்டு என்பது அவரை விருப்பு -வெறுப்புள்ள ஒரு சாதாரண மனிதனாக்கியது. எப்படிப் பார்த்தாலும் இந்த உலகு எவராலும் படைக்கப்பட்டதல்ல என்றார் புத்தர்.

புத்தமும் அவர் தம்மமும்

புத்தரின் கடவுள் மறுப்பு கருத்துக்களை ‘புத்தமும் அவர் தம்மமும்’ என்ற நூலில் விரிவாக விளக்குகிறார் அம்பேத்கர். அம்பேத்கர் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகள்..

புத்தருடைய சீடர்களான பாரத்வாஜ் மற்றும் வாசேத்திரர் ஆகியோர் கடவுள் குறித்த கேள்விகளுக்கு புத்தர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

37. அனைத்தையும் வென்ற வரும், தான் வெல்லப்படாதவரும், இருப்பவை அனைத்துக் கும், இருக்கப்போகிற அனைத்துக்கும் தந்தையானவரும், நம் அனைவரையும் படைத்தவரும் ஆன பிரம்மா, நிலையானவர், மாறாதவர், எப்போதும் இருப்பவர். என்றென்றும் இதே நிலையில் இருக்கக் கூடியவர் என்கிறீர்கள் நீங்கள்: அப்படியானால். அந்தப் பிரம்மாவால் படைக்கப்பட்டு இவ்வுலகுக்கு வந்த நாம் மட்டும் ஏன் நிலையற்றவர்களாய், மாறுகிறவர்களாய், மறைகிறவர்களாய், உறுதியற்றவர்களாய், இறந்துபோக விதிக்கப்பட்டவர்களாய் இருக்கிறோம்.?”

38. இவ்வினாவிற்கு வாசேத்தர் பதிலிறுக்கவில்லை.

39. வாசேத்திரரின் அடுத்த வாதம் கடவுளின் எல்லாம் வல்ல தன்மையைப் பற்றியதாயிருந்தது.” கடவுள் எல்லாம் வல்லவராயும் அனைத்துப் படைப்புக்கும் காரணத்தராயும் இருந்து விடுவாரேயானால், இதன் காரணமாக மனிதன். தானே எதையும் செய்ய விருப்பற்றவனாகவும், எதையும் செய்ய முடியாத வேண்டிய அவசியமற்றவனாகவும், ஆற்றலைப் பயன்படுத்த அவசியமற்றவனாகவும் ஆகிவிடுவானே? உலக விவகாரங்களின் பங்கேதுமற்ற, கீழ்ப் படிதலுள்ள அற்ப உயிராய் அல்லவா மனிதன் நீடிக்க வேண்டி வரும்? இதுதான் மனிதனின் நிலையெனில், பிரம்மா ஏன் மனிதனைப் படைக்க வேண்டும்?

40.இவ்வினாவிற்கும் வாசேத்தர் பதிலிறுக்கவில்லை.

41.”கடவுள் மிகவும் நல்லவர் என்றால், பின் அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஏன் கொலைகாரர்களாக, திருடராக, தூய்மையற்றவர்களாக, பொய்யர்களாக, இழுக்குடையவர்களாக, தீயுரை புகலும் வீணர்களாக, பிறர்பொருள் கவர்பவர்களாக, தீய எண்ணம் உடையவர்களாக, தீய செயல் செய்பவர்களாக உருவாகிறார்கள்? இதற்கும் ஈஸ்வரன்தானே காரண மாக இருக்க வேண்டும். அனைத்தையும் ஆக்குபவர் எனப்படும் கடவுள் நல்லவராக இருந்தால் இவ்வாறு நடக்க முடியுமா?” என்பது அவருடைய பதில்.

42. அவருடைய அடுத்த வாதம் கடவுள் ‘எல்லாம் அறிந்த தன்மையையும், நீதியானவர், கருணைமிக்கவர் என்ற கூற்றையும் பற்றியதாயிருந்தது.

43.”நீதிமானாகவும், கருணைமிக்கவனாகவும் உள்ள மேலான படைப்பாளி இருந்தால், ஏன் உலகில் இவ்வளவு அநீதிகள் நிலவுகின்றன?” என்று என்று வினவினார் புத்தர்” கண்ணுள்ளவரெல்லாம் துயரக்காட்சிகளைக் காண முடியுமே; தன்னால் படைக்கப்பட்டவற்றை ஏன் பிரம்மா சரிப்படுத்தக் கூடாது? எல்லையற்ற ஆற்றல் உடையவர் அவர் என்றால் அவர் கரங்கள் ஏன் அனைத்தையும் நல்லவையாக்க முடியவில்லை? ஏன் அவரால் படைக்கப்பட்டவை பாதிப்புக்கும். துயருக்கும் உள்ளாகின்றன?

44. எல்லாம் வல்ல ஓர் இறைவன் இருந்து, அவர் ஒவ்வொரு உயிருக்குள்ளும் இன்பம் அல்லது துன்பத்தையும், நற்செயல் அல்லது தீச்செயலையும் இட்டு நிரப்புகிறாரென்றால், அந்த இறைவர் பாவங்களால் கறைபட்டவர் என்று பொருள். ஒன்று மனிதன் தன் விருப்பப்படி இயங்கமுடியவில்லை, அல்லது கடவுள் நீதியானவராகவோ, நல்லவராகவோ இல்லை, என்று ஆகும்.’

45. கடவுளின் இருப்பு பற்றிய விவாதமே பயனற்றது என்பது கடவுள் கோட்பாட்டுக்கு எதிராக அவர் வைக்கும் அடுத்த வாதமாகும்.

46. சமயத்தின் மையப்புள்ளி மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவுபற்றியதாயிருக்கக் கூடாது என்பதே கருத்து. அது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு பற்றியதாகவே இருக்க வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்கும் நோக்கில் ஒருவன் மற்றொருவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிப்பதே சமயத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

47. புத்தர் ஏன் கடவுள் இருப்புக் கோட்பாட்டுக்கு எதிராக இருந்தார் என்பதற்கு மற்றொரு காரணமும் இருந்தது.

48. அவர் மதச் சம்பிரதாயங்கள், சடங்குகள், ஆசாரங்கள் ஆகியவற்றுக்கு எதிராய் இருந்தார். அவைகள் மூடநம்பிக்கை களின் இருப்பிடங்களாக இருந்தமையாலும், மூடநம்பிக்கை புத்த நெறியான எண்வகை நன்மார்க்கத்திற்கு (அஷ்டாங்க மார்க்கம்) மிகவும் அத்தியாவசியமான சமநோக்கிற்கு (சம்மதிட்டி) விரோதமாய் இருப்பதாலும் அவற்றை அவர் எதிர்த்தார்.

49. புத்தர் கடவுள் நம்பிக்கை என்பதை மிகவும் அபாயகரமானதாய்க் கருதினார். ஏனெனில், கடவுள் நம்பிக்கை பூசையிலும், பிரார்த்தனையிலும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. பூசையிலும், பிரார்த்தனையிலும் நம்பிக்கை புரோகிதர்- பூசாரி நிலையைத் தோற்றுவிக்கிறது. புரோகிதர், பூசாரி, குருமார் ஆகியோர் தீயபுத்திசாலிகளாகி மூடநம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் சம நோக்கின் வளர்ச்சி முற்றாக அழிக்கப்படுகிறது.

53. மிக முக்கியமான வினா இதுதான்: கடவுள் ஒன்றை உண்டாக்கினாரா? அல்லது ஒன்றை மற்றொன்றிலிருந்து உண்டாக்கினாரா?

54. வெறுமையிலிருந்து ஒன்று உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளமுடியாது.

55. கடவுள் எனப்படுபவர் ஏதோ ஒன்றிலிருந்து மற்றவற்றை உண்டாக்கினார் என்றால். அந்த ஏதோ ஒன்று அவருக்கு முன்பே இருந்து வந்திருப்பதாகப் பொருள். அது அவருக்கு முன்பே இருந்து வந்திருக்கிறது என்றால் அதைப் படைத்தவர் அவரில்லை என்றாகிறது.

56. கடவுளுக்கு முன்னமே, ஏதோவொன்று வேறெதனில் இருந்தோ யாராலோ படைக்கப்பட்டுள்ளது என்றால், பிறகு எல்லாவற்றையும் படைத்தவர் என்றோ மூலகாரணர் என்றோ கடவுளைக் கூற முடியாது.

57. கடவுள் நம்பிக்கைக்கு எதிரான இந்த வாதம் புத்தருடைய மறுக்க முடியாத இறுதி வாதமாகும்.

உதவிய நூல்கள்: அருணன் எழுதிய ‘கடவுளின் கதை’ பாகம்-1, அம்பேத்கர் எழுதிய ‘புத்தமும் அவர் தம்மமும்’ தமிழ் மொழிபெயர்ப்பு டாக்டர் வீ.சித்தார்த்தா எனும் பெரியார்தாசன்.

சமயத்தின் மய்யப்புள்ளி மனிதனுக்கு கடவுளுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்க கூடாது. அது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு பற்றியதாகவே இருக்க வேண்டும் என்பதே புத்தரின் கருத்து.

புரட்சிப்பெரியார் முழக்கம்04092025

You may also like...