பெரியாரின் இங்கிலாந்து பயணத்தில் நடந்தது என்ன?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் படத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பெரியார் உலகமயமாகி வருகிறார் என்று பெருமிதத்துடன் முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெரியார் 16. 6 .1932 தேதியிலிருந்து 6.7.1932 வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தார். பயணத்திற்கு உடன் இருந்து உதவியவர் கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலா. இவருடன் தொடர்பு கொள்ள அறிமுக கடிதம் கொடுத்தவர்; பெர்லின் நகரில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர் டெட்.
இங்கிலாந்து பயண விவரங்களை பெரியார் தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அதில் 28 .6.1932 தேதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் ஸ்கார்பியோவில் 9 கருப்பின இளைஞர்கள் மீது “ரேப்” குற்றம் சாட்டி தூக்குத் தண்டனை விதித்தது அமெரிக்க அரசு.
உலகம் முழுதும் தூக்குத் தண்டனைக்கு எதிராக கண்டனங்கள் வெடித்தன. இங்கிலாந்தில் நடந்த இந்த கண்டனக் கூட்டத்தில் பெரியாரும் கலந்து கொண்டார். தூக்குத் தண்டனைக்கு உள்ளான இரண்டு மகன்களின் தாய் “ரைட்டு” என்பவர் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது. வழக்கு நடத்த நிதி திரட்டப்பட்டது, 13 பவுன் நிதி சேர்ந்தது. ஜெர்மன் வெள்ளி சங்கிலி ஒன்று ஏலம் விடப்பட்டது. பெரியார் அதை அரை பவுனுக்கு ஏலம் எடுத்தார் என்று நாட்குறிப்பில் எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட் தலைவருடன் தொழிற்சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெரியாரை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து இரண்டு முறை விசாரணை நடத்தியது.
தொடர்ந்து இங்கிலாந்தில் இருக்க முடியாத நிலையில் சக்கலத் வாலா ஆலோசனையை ஏற்று பயணத்தை தொடர முடியாமல் பெரியார் இங்கிலாந்தை விட்டு வெளியேறினார். அதே இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பெரியாரின் படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இது வரலாற்றுச் சிறப்பு!
விடுதலை இராசேந்திரன்
முகநூல் பதிவு
பெரியார்முழக்கம்இதழ்04092025
