ஆக. 30 – சர்வதேச ‘காணாமல் போனோர் நாள்’! – ஈழத்தில் 30 ஆயிரம் தமிழர்களின் கதி என்ன?
காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் (International Day of the Disappeard) வருடந் தோறும் ஆகஸ்டு 30ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
குறித்த ஒரு நபரை விரும்பாத ஒரு அரசியல் தலைமை அல்லது ஒரு இராணுவ தலைமை அவரை அவரது குடும்பத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து தூக்கிச் சென்று விட்டாலோ அல்லது கைது செய்து காணாமல் போக செய்வதாலோ அதன் பின்னர் அவருடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போய்விடுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட தெரியாமல் போய்விடும். இதையே ‘காணாமல் போதல்’ என்கிற சொல் பதத்தில் அழைக்கிறார்கள்.
அதாவது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது என்றும் ஐ.நா. கூறுகிறது. எனினும் அப்படி காணாமல் செய்வோரை இரகசிய சிறைகூடங்களில் அடைத்தோ அல்லது இரகசியமாக படுகொலை செய்தோ விடும் நிலை இன்னமும் தொடர்கிறது. உலகெங்கும் பல இலட்சம் பேர் காணாமல் போயுள்ளார்கள். எத்தனை பேர் என குறிப்பிட்டு நிச்சயமாக சொல்ல எந்த அமைப்பும் முயற்சி எடுக்கவில்லை.
உலக மகா யுத்தங்களின் போதே அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக இரண்டாம் உலக போரின்போது ஹிட்லரின் கொடூர நடவடிக்கையால் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் காணாமல் போயுள்ளனர்.
ரவுல் வாலன்பெர்க் (Raoul Wellenberg) : இரண்டாம் உலகப் போர் காலத்தில், காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு ஹீரோ என்றே இவரை சொல்லலாம். 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதாபிமானி என இன்றளவும் பாராட்டப்படு கிறார். காரணம் இவர் மட்டுமே ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட காணாமல் போனவர்களை அவர்களது குடும்பத்தினருக்கு மீட்டுக் கொடுத்துள்ளாராம். ஆனால் இவரின் முடிவு பரிதாபகரமானது. 1945ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனார்.
காணாமல் போனவர்களில் உலகிலேயே இரண்டாவது இடம் வகிப்பது சிறீலங்கா. முதலிடம் ஈராக்.
‘சர்வதேச காணாமல் போனவர்கள் நாளை’ யொட்டி சர்வதேசப் பொது மன்னிப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1980ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கையில் குறைந்தது 12000 பேர் வரை காணாமல் போயிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உண்மையில் போர்க் காலத்திலும் அதன் பிறகும் 30000 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தரக்கோரி தமிழீழம் எங்கிலும் மனித உரிமை அமைப்புகளும் குடிமக்கள் குழுக்களும் தொடர்ந்து போராடி வருகின்றன. காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் சங்கங்கள் அமைத்துப் போராடி வருகின்றனர்.
‘தமிழக வாழ்வுரிமை கட்சி’ நிறுவனர் வேல் முருகன், ஈழத்தில் காணாமல் போன தமிழர்கள் நிலையை விவரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் கணவர் எழிலன், போரின் இறுதிக் கட்டத்தில் இன்னும் பலரோடு மக்கள் முன்னிலையில் சரணடைந்தவர். அதன் பிறகு என்ன ஆனார் என்ற கேள்விக்கு விடையில்லை. எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் கணவரைக் கண்டுபிடிக்க முடியாமல், அனந்தி தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார். முல்லைத் தீவு நீதிமன்றத்தில் அவர் தொடுத்த ஆட்கொணர்வு வழக்கில் சாட்சிகளை இராணுவம் மிரட்டித் தடுத்து வருவதாகக் குற்றம் சாட்டுகின்றார்.
காணாமல் போனவர்கள் பலரும் இரகசியச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு அடிமைகளாய் வேலை வாங்கப்படுவதாகத் தமக்கு இரகசியத் தகவல் கிடைத்திருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.டிவி. விக்னேஸ்வரன் கூறுகிறார்.
காணாமல் போன மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு தாய் பாலேந்திரன் ஜெயகுமாரியும், மகள் விபூசிகாவும் நடத்திய போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. ஜெயகுமாரி இதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் பல மாத காலம் சிறை வைக்கப்பட்டார். கோரிக்கை மட்டும் நிறைவேறவில்லை.
போர்க் காலத்தில் குண்டுவீச்சிலிருந்து பொது மக்களுக்குத் தம் கத்தோலிக்க தேவாலயத்தில் பாதுகாப்பு வழங்கிய அருள்தந்தை ஜிம் பிரெளன் கடைசியாகக் காணப்பட்டது, ஒன்பதாண்டு முன்பு ஒரு சிங்களக் கடற்படை முகாமில்! என்ன ஆனார் என்று தெரியவில்லை. கடந்த 2009 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த அருள்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பை என்ன செய்தீர்கள்? என்ற கேள்விக்கு இராணுவம் விடை தர மறுக்கிறது.
தமிழீழத்தின் தேசியப் பாவலர் புதுவை இரத்தினதுரை எங்கே? பாலகுமாரன் எங்கே? யோகி எங்கே? திலகர் எங்கே? இந்தக் கேள்விகளுக்கு அன்றும் இன்றும் சிங்கள அரசின் விடை வெறும் மெளனமே. இது பல்லாயிரம் உயிர்களை விழுங்கி ஏப்பமிட்ட மெளனம்!
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும், அவர்களை யார் என்ன செய்தார்கள் என்பதை அறிந்து, காணாமலடித்த குற்றவாளிகளைத் தண்டிக்கவும் சர்வதேசப் புலனாய்வும் சர்வதேசப் பொறிமுறையும் தேவை. சிங்களம் நிகழ்த்திய தமிழினப் படுகொலையின் ஒரு கூறுதான் காணாமல் போனவர்களின் அவலம்!
“இனக் கொலைக்குப் பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும்! குற்றவாளிகளைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்ற வேண்டும்” என்று வேல்முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
பெரியார் முழக்கம் 27082015 இதழ்