பெரியார் முழக்கத்துக்கு பாராட்டு
“பெரியார் மண்” என்ற தலைப்பில் பெரியார் தொண்டர்கள் சாதனை குறித்து “முரசொலியில்” ர.பிரகாசு எழுதி வரும் கட்டுரைத் தொடரை “பெரியார் முழக்கம்” தொடர்ந்து வெளியிட்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. பெரியார் தொண்டர்கள் கிராமங்களில் நடத்தியப் புரட்சிகளை படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது. எதிர்ப்புகளில் எதிர்நீச்சல் போட்டு அவர்கள் போட்டுத் தந்த பாதைகளில்தான் நாம் இன்றைக்கு எளிதாகப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். கரடுமுரடான பாதைகளில் அவர்கள் நடந்தார்கள். நாம் நெடுஞ்சாலையில் வாகனத்தில் வசதியாக பயணிக்கிறோம்.
3-ம் பக்கத்தில் “கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை” கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. மதவெறிக்கு பலியான பகுத்தறிவாளர்களின் பட்டியலை ரிவோல்ட் வெளியிட்டுள்ளதை பெரியார் முழக்கம் வெளியிட்டுள்ளது மிகவும் சிறப்பு. பெரியார் நடத்திய இதழ்கள் 1930ஆம் ஆண்டிலேயே எவ்வளவு அறிவு செறிவோடு வெளிவந்திருக்கிறது என்பது வியக்க வைக்கிறது. அதே கட்டுரயில் “நான் தூக்கு மேடையில் நின்று கொண்டு பரிசுத்த நாத்திகன் என்று கூப்பாடு போட்டு சொல்வேன்” என்ற பெரியார் பேச்சை 1929 குடிஅரசு இதழிலிருந்து எடுத்து “பெரியார் முழக்கம்” வெளியிட்டு இருக்கிறது. இப்படி ஒரு பெரியார் பேச்சை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இந்த வரலாற்றுப் பதிவுகள் தொடர்ந்து வெளிவர வேண்டும்.
மு.சாமிநாதன்
நாமக்கல் மாவட்டத் தலைவர்
பெரியார்முழக்கம்இதழ்14082025
