கிராமத் தீண்டாமைகளைத் தடுக்க கண்காணிப்புக் குழு
ஜாதிக் கட்டமைப்புகளில் இருந்து கிராமங்கள் விடுபடவில்லை.இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்துள்ள ஒரு தீர்ப்பைக் குறிப்பிட வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் தலைவன் கோட்டை என்ற கிராமத்தில் தலித் மக்கள் வாழும் பகுதிக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்படவில்லை.பிற ஜாதியினர் வாழ்கிற பகுதிகளில் இருந்துதான் அவர்கள் தண்ணீர் எடுக்க வேண்டியிருக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறை வந்த நிலையில் தண்ணீர் எடுக்க தலித் மக்களுக்கு ஆதிக்க ஜாதியினர் தடை போட்டனர். தண்ணீர் பற்றாக்குறை வரும்போது ஜாதி பாகுபாடும் வந்து விடுகிறது. நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது.
நீதிமன்றம் அரசுக்கு விளக்கம் கேட்டதற்கு பிறகு, அரசு நிர்வாகம் தலித் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கியது. இப்போது பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
`நீதிபதி ஆர்.என். மஞ்சுளா’ தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானது.
“பொது வளங்கள் சரிசமமாக பாகுபாடு இன்றி வழங்கப்பட வேண்டும் என்பதைத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சுட்டிக்காட்டுகிறது” என்பதை நீதிபதி எடுத்துக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அடிப்படைத் தேவைகள், பொது வளங்கள் எவ்வித ஜாதிப் பாகுபாடும் இல்லாமல் கிடைக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை அரசு கண்காணிப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும். அதேபோல் பொது வளங்கள் கிராமங்களில் தலித் மக்களுக்கு போய்ச் சேர்கிறதா என்பதும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தலைமைச் செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஆகியோர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு ஒவ்வொரு கிராமங்களையும் ஆராய்ந்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை நீதிபதி வழங்கி இருப்பதோடு, ஆகஸ்ட் 21க்குள் இதுகுறித்து அரசு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். இது காலத்தின் தேவை.
வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு!
பெரியார்முழக்கம்இதழ்14082025
