பொறியாளர்கள் சிறப்பு பூஜை நடத்த நீர்வளத் துறை சுற்றறிக்கை

வெட்கம்! மகாவெட்கம்!

தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள நீர்வள ஆதாரத் துறை மேட்டூர் உள்பட தமிழக நீர் தேக்கங்களில் நீர் நிரம்புவதற்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கை விடுத் துள்ளது. இந்தத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளரான சோ. அசோகன், துறையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு இந்த சுற்றறிக்கையை அனுப்பி யிருக்கிறார். (சுற்றறிக்கை நகல் நம்மிடம் உள்ளது) அதில்,
“மேட்டூர் அணையில் நல்ல நீர்வரத்து, நீர் இருப்பினைப் பெறுவதற்கும் மற்ற அணைகளில் நீர் நல்ல இருப்பினைப் பெறுவதற்கும், இயற்கை அன்னையின் அருள்வேண்டி அந்தந்த கோட்டங்களின் ஆளுகைக்கு உட்பட்ட முக்கிய கோயில்களில் வருகிற 1.6.2015 அன்று சிறப்பு பூஜைகள் செய்திட உரிய ஏற்பாடுகள் மேற் கொள்ள செயற்பொறியாளர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு 2.6.2015 அன்று காலை 10 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்திட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறையே இப்படி பொறி யாளர்களை பூஜை போடும் வேலைகளுக்கு பணிப்பது, தமிழ்நாட்டுக்கே தலைகுனிவாகும். நீர்வளத் துறை பொறியாளராக இருப்பவர் ‘இந்து’வாகவும், ‘பூஜை’ சடங்குகளில் நம்பிக்கையுள்ளவராகவும் இருக்க வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாகவே இந்த ஆட்சி அறிவித்தாலும் வியப்பதற்கு இல்லை. ‘இந்து’ மதத்தைத் தவிர, வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் எவரும் பொறி யாளராக பணியாற்ற முடியாது என்பதும் இந்த சுற்றறிக்கை வழியாக பொதுப் பணித்துறை சுட்டிக் காட்டியிருக்கிறது. கருநாடகம் காவிரி தண்ணீரைத் திறந்து விடுவதற்கும் இதேபோல் பூஜைகள் செய்யலாமே! உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளை ஏறியிருக்க வேண்டாமே!
இதேபோல் கருநாடக அரசும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விடாமல், தங்கள் மாநிலத்தின் புதிய திட்டங்களுக்கே பயன்படுத்த சிறப்பு பூஜைகள் நடத்த உத்தரவிட்டால் அப்போது, ‘பகவான்’ தமிழ்நாட்டின் பக்கம் நிற்பாரா? அல்லது கருநாடகத்தின் பக்கம் நிற்பாரா? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் கடும் மின்வெட்டு நிலவியபோது இதேபோல் மின்சாரம் தாராளமாகக் கிடைக்க தமிழக மின் வாரியம், கோயில் களில் சிறப்பு பூஜைகளை ஏற்பாடு செய்திருக்கலாமே! ‘அம்மா’வின் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற மொட்டை அடிப்பது, மண்சோறு சாப்பிடுவது, யாகம் நடத்துவது எல்லாம் நடந்து முடிந்த பிறகும் வழக்கு உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்குப் போவதை எந்தப் ‘பகவானாலும்’ தடுக்க முடியவில்லையே! அதனால் என்ன? உச்சநீதிமன்றத்தில் ‘அம்மா’ விடுதலை பெற அடுத்தகட்ட பூஜைகள், யாகங்கள் தொடங்கினால் போச்சு என்று கூறுவார்கள் போலிருக்கிறது!
இதற்கு முன் இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தது இல்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இப்போதாவது கோடையில் மழை பெய்திருக்கிறது. கடந்த ஆண்டு மழையே இல்லை. அப்போது இப்படி சுற்றறிக்கைகள் வரவில்லை. இப்போது ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆனதற்காக, அணை நீர் மட்டங்களின் பெயரில் இப்படி ஒரு சுற்றறிக்கை வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா, கருநாடக சிறையில் இருந்தபோது ஆயுத பூஜை வந்தது. அப்போது அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் கொண்டாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஆயுத பூஜையும் நடக்கவில்லை. இந்த பூஜைகளுக்கு எந்த நிதியிலிருந்து செலவு செய்யப்படும் என்பது குறித்தும் விளக்கம் இல்லை. அதிகாரிகள் தங்களின் 10 சதவீதத்துக்கு உட்பட்ட சொத்துக் குவிப்பு பணத்திலிருந்து செலவு செய்வார்கள் போலும்!

பெரியார் முழக்கம் 04062015 இதழ்

You may also like...

Leave a Reply