மோடியின் ஓராண்டு – கார்ப்பரேட் நலன் காக்கும் ஆட்சி
• கார்ப்பரேட் நலன்களுக்காகவே நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது. ஏற்கெனவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகக் கைப்பற்றப்பட்ட நிலங்களில் பாதியளவுகூட பயன்படுத்தாமல் கிடக்கின்றன. இப்போது மேலும், நிலங்களைப் பறிக்க ஏன் துடிக்கிறார்கள்? மன்னர்கள் ஆட்சி காலங்களில் ‘பிராமணர்’களுக்கு நிலங்களை ‘தானமாக’ வழங்கி பெருமைப்பட்டார்கள். இப்போது கார்ப்பரேட்டு களுக்கு மக்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி, ‘தானமாக’க் கொடுக்க அரசு துடிக்கிறது. பார்ப்பன ஆதிக்கத்தை வளர்க்கும் பனியாக்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும்தான் இப்போதும் நிலங்கள் கைமாறப் போகின்றன. ஆக, அன்று ‘சதுர்வேதி மங்களங்கள்’; இன்று நிலப் பறிப்புச் சட்டங்கள்!
• பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதில் காங்கிரசுக்கு சற்றும் குறைந்தது அல்ல பா.ஜ.க. இரண்டு கட்சிகளின் ஆட்சிகளும் ஒரே பாதையில்தான் பயணிக்கின்றன. அரசு பொதுத் துறை நிறுவனமான நிலக்கரி நிறுவன பங்குகளை காங்கிர°, தனியாருக்கு விற்க முயன்றபோது, தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்த்தன. இப்போது, மோடி ஆட்சியில் ரூ.22,588 கோடி மதிப்புள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. இந்திய எஃகு நிறுவன பங்குகள் ரூ.1720 கோடியும், கிராமப்புற மின்மயம் நிறுவனத்தின் (ஆர்.இ.சி.) பங்குகள் ரூ.1610 கோடி அளவுக்கும் தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டன. குறுகிய காலத்தில் ரூ.25000 கோடிக்கான பங்குகள் விற்கப்பட்டுவிட்டன. இது தவிர 13 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை ரூ.65000 கோடி அளவுக்கு இந்த ஆண்டில் விற்க முடிவு செய்யப்பட் டுள்ளது.
• காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு 26 சதவீதத் திலிருந்து 49 சதவீதத்துக்கு அதிகாரிக்கப்பட்டுள்ளது. காங்கிர° ஆட்சியில் இந்த முயற்சி நடந்தபோது, பா.ஜ.க. கடுமையாக எதிர்த்தது. பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்கா தலைமையில் ஒரு குழு அமைத்து, அறிக்கை தயாரித்து, காப்பீட்டுத் துறையை தனியாருக்கு திறந்து விடுவதால் உருவாகும் ஆபத்துகளை சுட்டிக்காட்டினர். இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவோடு அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் அவர்கள் நலனுக்குத்தானே முன்னுரிமை தருவார்கள்?
• தொடர் வண்டித் துறையில் பல பணிகள் தனியாருக்கு திறந்து விடப்பட்டுவிட்டன. எதிர்காலத்தில் அரசும் தனியாரும் இணைந்து செயல்படப் போகிறார்களாம். அதற்குப் பெயர் பி.பி.பி. திட்டம் (பொது தனியார் கூட்டு). இத்திட்டத்தினால் இலாபம் தனியாருக்கு – நட்டம் அரசுக்கு என்பதே கடந்த கால அனுபவம்.
• 2014 ஜூலையில், 108 மருந்துகளின் விலையை அரசின் ‘கட்டுப்பாட்டு விலை’யின்கீழ் மோடி அரசு கொண்டு வந்தது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதை எதிர்த்து கூச்சலிட்டன, அவ்வளவுதான். மீண்டும் மருந்து விலைகள் உயர அனுமதி கிடைத்துவிட்டது. புற்று நோய்க்கு ‘நாட்கோ’ நிறுவனம் தயாரித்த மருந்தின் விலை ரூ.5900-லிருந்து ரூ.11,500 ஆனது. இதே நோய்க்கு நோவார்டி° நிறுவனம் தயாரித்த மருந்து ரூ.8,500-லிருந்து ரூ.10,800-க்கும், இருதய நோய்க்கு ‘சனோபி’ நிறுவனம் தயாரித்த மருந்து ரூ.147-லிருந்து ரூ.1618-க்கும், நோய்க் கொல்லிக்கு சிம்லா நிறுவனம் தயாரித்த மருந்து ரூ..250-லிருந்து ரூ.399-க்கும், சர்க்கரை நோய்க்கு ‘சனோபி’ நிறுவனத்தின்
மருந்து ரூ.98லிருந்து ரூ.208க்கும், நாய்க்கடிக்கு இதே நிறுவனத்தின் தயாரிப்பு ரூ. 2670-லிருந்து
ரூ. 7000-க்கும், இரத்த அழுத்தத்துக்கு ‘ஆஸ்ட்டிரா’ நிறுவனம் தயாரித்த மருந்து ரூ.78-லிருந்து ரூ.164-க்கும் உயர்ந்து விட்டன.
பெரியார் முழக்கம் 11062015 இதழ்