“நாத்திக வாழ்க்கை நோக்கி வாருங்கள்”

நாத்திக வாழ்வியல் ஏற்று உன்னதமான லட்சிய வாழ்க்கையை நோக்கி வருமாறு மக்களுக்கு நாத்திகர் விழா வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
முன்மொழிந்தவர்: இரண்யா

தீர்மானம்-4: கடவுள், மத நம்பிக்கை இல்லாமல் மானுடத்தையும் அதன் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டதே நாத்திக வாழ்வியல் நெறி. சமத்துவம் மற்றும் அறிவியலை இலக்காகக் கொண்டு ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூக சமத்துவத்தை நோக்கியது.

இதில் பார்ப்பனிய கருத்தியல்களான ஜாதியத்துக்கோ, பெண்ணடிமைக்கோ, மூடநம்பிக்கைக்கோ இடமில்லை. வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு சிந்தனைகள் தொடங்கிவிட்டன.

உலகம் முழுவதும் கடவுள் மத கற்பனைகளை ஏற்காத நாத்திகர்கள் வாழ்கிறார்கள். கடவுள் மத நம்பிக்கை இல்லாத அதிக மக்களைக் கொண்ட நாடு பின்லாந்து. உலகிலேயே மகிழ்ச்சியாக வாழும் நாடு பின்லாந்து தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எப்படி கடவுள் மத நம்பிக்கைக்கும், அதனை பரப்புவதற்கும் உரிமை வழங்குகிறதே அதனை போல கடவுள் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் மனசாட்சி உரிமை என்ற அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் (பிரிவு 25) உரிமை வழங்கி உள்ளது: பல உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் இந்த உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளன.

சொல்லப்போனால் ஒவ்வொரு மதமும் பிற மதங்களின் கடவுள்களை மறுக்கிறது. நவீன சமூக வாழ்க்கையில் ஒவ்வொரு முன்னேற்றமும் மருத்துவ, விஞ்ஞானத்தின் மகத்தான வளர்ச்சியும் கடவுள் பெயரால் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைக்களைப் புறந்தள்ளியே வருகிறது என்பதே எதார்த்தம்.

கடவுள் மத நம்பிக்கையாளர்களும் கடவுள் மதத்தை விலக்கி வைக்கும் இந்த வாழ்க்கை முறையை ஏற்றுத்தான் வாழ்கிறார்கள். நாத்திகம் என்பது மதவாதிகள் பரப்புவதைப் போல எதிர்மறையானது அல்ல. அது ஆக்கபூர்வமான அறிவியல் வாழ்வு.

பெரியார் நாத்திகத்தை சமூக விடுதலையுடன் இணைத்தார். மானமும் அறிவும் நிறைந்த வாழ்க்கைக்கு நாத்திக நெறிமுறையை பெரியார் முன்மொழிந்தார். எனவே நாத்திகத்தை கொள்கையாகவும் வாழ்க்கையாகவும் ஏற்று உன்னதமான இலட்சிய வாழ்க்கையை நோக்கி வருமாறு இந்த நாத்திகர் விழா நாட்டு மக்களை அறைகூவி அழைக்கிறது.

குறிப்பாக பெண்கள் நாத்திக வாழ்க்கையை ஏற்று வாழும் போதுதான் சமூக மாற்றத்தை பாய்ச்சலாக்கி முன் நகர்த்தும் என்று இந்த நாத்திகர் விழா சுட்டிக் காட்டுகிறது.
பெரியார் முழக்கம் 29052025இதழ்

You may also like...