காவிமயத்தில் கரையும் கல்வித்துறை! – ர.பிரகாசு
ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் கட்டாயக் கல்வி (சர்வ சிக்சா அபியான்) சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இத்திட்டத்திற்கான நிதியில் 60 விழுக்காடு ஒன்றிய அரசும், 40 விழுக்காடு மாநில அரசும் பங்களிப்புச் செய்கின்றன. அதன்படி பார்த்தால் 2024-25 கல்வி ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ.2,152 கோடி வழங்க வேண்டும். கடந்த ஜூன் மாதமே ஒன்றிய அரசு முதல் தவணையாக ரூ.573 கோடியை வழங்கியிருக்க வேண்டும். இதை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை, என்றும் கடந்த சில மாதங்களாக மாநில அரசின் முழுமையான நிதியில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
கைவிரிக்கும் பாஜக அரசு
தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி மேலும் சில மாநிலங்களுக்கும் முதல் தவணை விடுவிக்கப்படவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் நலன் கருதி நிதியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டுப் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு பாஜக அரசு தொடர்ச்சியாக நிதியைக் குறைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறது. பிரதமர் வீடு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மருத்துவக் கல்லூரிகள் கட்டுமானம், தூய்மை இந்தியா, அம்ருத் 2.0 என ஒன்றிய புதிய திட்டங்களைத் தொடங்கும்போது கொடுக்கும் பங்களிப்பு அதிகமானதாகவும், நாளடைவில் அதற்கு மாநில அரசுகளே அதிக நிதியை ஒதுக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில்தான் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி ஒரு ரூபாய் கூட விடுவிக்கப்படாததைப் போல, கட்டாயக் கல்வி திட்டத்துக்கான நிதியும் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வித் திட்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகவே நாட்டின் கல்வித்துறை பாஜக ஆட்சியில் பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவோம், நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றும் அளித்த பல வாக்குறுதிகளில் கல்வியில் எல்லோருக்கும் சம வாய்ப்பு, பெண் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம், ஆசிரியர்கள், ஆய்வாளர்களின் பற்றாக்குறை போக்கப்படும், ஜிடிபியில் கல்விக்கு 6% நிதி ஒதுக்கப்படும் என்பதும் மிக முக்கியமான வாக்குறுதிகள்.
கொத்துக்கொத்தாக மூடப்படும் பள்ளிகள்
ஆனால் 2014 முதல் 2024 வரையிலான பாஜக ஆட்சிக்காலத்தில் கல்வித்துறை சந்தித்தது பேரழிவு மட்டுமே. Financial Accountability Network India (FAN) நடப்பாண்டு ஏப்ரலில் வெளியிட்ட ஆய்வறிக்கை இதை உணர்த்துவதாக உள்ளது. அரசுப் பள்ளிகளை இணைத்து எண்ணிக்கையைக் குறைப்பது பாஜக கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கைத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோள். அதன்படி 2023ஆம் ஆண்டில் மட்டும் 4,000க்கும் அதிகமான பள்ளிகள் நாடு முழுவதும் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடிவிட்டு, அருகில் இருக்கும் வேறு பள்ளியுடன் இணைப்பது இத்திட்டம். தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், அருகாமையிலேயே பள்ளி இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும். ஆனால் அவற்றை மூடிவிட்டு, அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அதிக மாணவர்கள் இருக்கும் பள்ளியுடன் இணைப்பதால், தொலைதுர, மலைக்கிராம மாணவர்களின் கற்றல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது கட்டாயக் கல்விச் சட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் முரணானது.
இவ்வாறு மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல ஒடிசாவில் 7,438 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 35,000 பள்ளிகளை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு 16,000ஆகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 2018-19ஆம் ஆண்டில் 15,51,000ஆக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 2021-22ஆம் ஆண்டில் 14,89,115ஆகக் குறைந்துவிட்டது என்பது இந்த ஆய்வறிக்கை தருகின்ற பேரதிர்ச்சி செய்தி. இவ்வாறு மூடப்பட்ட 61,885 பள்ளிகளில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டுமே 61,361.
அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கைக் குறைந்துவரும் அதேவேளையில் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகிக் கொண்டும் வருவதும் ஒன்றிய பாஜக அரசின் கல்விக்கொள்கை யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. எடுத்துக்காட்டாக, 2014-15ஆம் ஆண்டில் நாட்டில் 11, 07,118 அரசுப் பள்ளிகளும், 83,402 அரசு உதவி பெறும் பள்ளிகளும் இருந்தன. ஆனால் 2021-22ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 10,22,386-ஆகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 82,480-ஆகவும் சுருங்கிவிட்டது. ஆனால் இதேகாலகட்டத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2,88,164-இல் இருந்து 3,35,844-ஆகப் பெருகியிருக்கிறது.
உதவித்தொகை நிறுத்தம்; சேர்க்கை சரிவு
அதேபோல ஆசிரியர் பற்றாக்குறையும் 10 இலட்சத்திற்கு அதிகமாக இருப்பதாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 33 விழுக்காடு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஐ.ஐ.டி.-களில் 40 விழுக்காடு, ஐ.ஐ.எம்.-களில் 31.6 விழுக்காடு ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. 103.39 ஆக இருக்கும் தொடக்கக்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் உயர்நிலை வகுப்புகளில் 57.56 சரிந்துவிடுவதாகவும் FAN அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களே. குறிப்பாக பட்டியல் சமூகத்தினரின் மாணவர் சேர்க்கை விகிதம் தொடக்கக் கல்வியில் 113.1ஆக இருக்கிறது என்றால் உயர்நிலைக் கல்வியில் 61.49ஆகச் சரிந்துவிடுகிறது. பழங்குடி சமூகத்தினரின் மாணவர் சேர்க்கை விகிதம் தொடக்கக் கல்வியில் 106.5-ஆக இருக்கிறது என்றால் உயர்நிலைக் கல்வியில் 52.02-ஆகச் சரிந்துவிடுகிறது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான உதவித்தொகை 2022-23 கல்வியாண்டில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதுவே உயர்கல்வியைப் பார்க்கும்போது நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. M.Phil, PhD படிக்கும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு மவுலானா ஆசாத் பெயரில் தேசிய அளவிலான உதவித்திட்டம் நீண்டகாலமாகச் செயல்படுத்தப்பட்டு வந்தது. இது சிறுபான்மை சமூக மாணவர்களின் ஆய்வுப் படிப்புகளுக்கு பேருதவியாக இருந்துவந்தது. ஆனால் மோடி அரசாங்கம் 2022ஆம் ஆண்டில் இத்திட்டத்தை நிறுத்திவிட்டது. அதேபோல தொழில் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 2014-15-ஆம் ஆண்டில் 243 கோடி ரூபாயாக இருந்த இத்திட்டத்திற்கான நிதி 2024-25ஆம் ஆண்டில் வெறும் 33.80 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
காவிமயமாகும் கல்வித்துறை
2013-14 நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 3.16 விழுக்காடு ஒதுக்கப்பட்ட நிலையில், ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் அதனைப் படிப்படியாகக் குறைத்து 2024-25 நிதியாண்டில் 1.53% ஆகச் சுருக்கிவிட்டது. இவற்றை பாஜகவின் நிர்வாகத் திறனின்மை என்ற அளவுகோலில் வைத்து பார்த்துவிட முடியாது. பாஜகவின் இந்துத்துவ சித்தாந்தத்தோடுதான் இவற்றைத் தொடர்புப்படுத்திப் பார்க்க வேண்டும். மீண்டும் வேத காலத்திற்குத் திரும்புவோம், ராமராஜ்ஜியம் அமைப்போம் என்பதே பாஜக, இந்துத்துவவாதிகளின் பெரும் முழக்கமாக இருக்கிறது. அந்தவகையில் பார்த்தோமானால், சூத்திரனும் – பஞ்சமனும் கல்வி கற்க உரிமை அற்றவர்கள் என்பதுதான் வேதம் சொல்லும் நியதி. ஓதுதலும் ஓதுவித்தலும் பார்ப்பனரின் பணி என்பதே வேதம் சொல்லும் நியதி.
பள்ளிக்கூடங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதும், ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் இருப்பதும், கல்வித்துறைக்கான போதுமான நிதியும் ஒதுக்கப்படுவதும் பாஜகவின் விரும்பும் வேத காலத்தை அமைத்துத் தராது என்பது தெளிவு. அதனால்தான் பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன. ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை, நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதையும் மீறி படிக்கச் செல்வோரும் இந்துத்துவக் கொள்கைகளுக்கு எதிரான எதையும் கற்றுவிடக் கூடாது என்பதிலும் பாஜக தெளிவோடு இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளத்தக்க சில சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக குஜராத் மாநிலப் பாடத்திட்டத்தில் காந்தியடிகளைக் கொன்றவர் கோட்சே என்பதை மறைக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. காந்தியடிகள் கொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்ட வரலாறும் நீக்கப்பட்டது. முகலாயர் ஆட்சிக்காலம் குறித்த பாடப்பிரிவுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு நீக்கப்படுவதும், குறைக்கப்படுவதும் நடந்தது. தலித்திய செயற்பாட்டாளர்களின் எழுத்துக்கள், கவிதைகள், ஜாதியப் பாகுபாடுகளை விவரிக்கும் பாடங்கள், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன.
ஆக, கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் கல்வித்துறை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ராஜாஜி ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்ட குலக்கல்வியை முறையை விட பேராபத்து நிறைந்தது. அந்தப் பேராபத்துகள் மூன்றாவது முறையாக மோடி ஆட்சியமைத்த பின்னர் பன்மடங்கு வேகமெடுத்திருக்கிறது. கட்டாயக் கல்வி சட்டத்திற்குக் கூட நிதியை விடுவிக்க மறுப்பது அதைத்தான் உணர்த்துகிறது.
தகவல்கள்: Financial Accountability Network India (FAN-India)-இன் ‘Education Report Card – 2014-24’.
பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்