பகவத்கீதை பெண்களைத் துப்பாக்கி ஏந்த அனுமதிக்கிறதா?
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். பெண் ஒருவர் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்றிருப்பது நாட்டிற்கும் பெண் இனத்திற்கும் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இதை நாம் பாராட்டி வரவேற்கிறோம்.
ஆனால், தனது வெற்றிக்கு காரணம் பகவத் கீதை தான், நான் பகவத்கீதையை ஆழமாகப் படித்தேன். பலனை எதிர்பார்க்காதே கடமையை செய்! உன்னுடைய தலைவிதி உன் கையில் இல்லை. இலக்கு நோக்கி முன்னேறிச் செல் என்ற இந்த மூன்று கருத்துக்களும் தான் என்னை ஊக்கப்படுத்தியது. எனவே பகவத்கீதை தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.
ஒலிம்பிக்கில் பகவத்கீதைக்கு தங்கப் பதக்கம் கிடைத்ததை போல ஊடகங்கள் இதை கொண்டாடி வருகின்றனர். இந்த கருத்து நியாயம் தானா என்பது குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பகவத் கீதை எப்போது உருவானது. புத்த மதம் செல்வாக்குமிக்கதாக திகழ்ந்த காலத்தில் அதனுடைய சாக்கிய தத்துவம் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த புத்த மதத்தை வீழ்த்துவதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்றுதான் ஊடுருவி அழித்தல் முறை. அதன் காரணமாக சாக்கிய தத்துவத்தின் பல கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு வேதாந்தத்தின் கருத்துகளையும், வர்ணாசிரம கருத்துகளையும் உள்ளே புகுத்தி உருவாக்கப்பட்ட ஒன்றுதான் பகவத் கீதை. இதனுடைய நோக்கம் பவுத்தத்தை ஊடுருவி அழிப்பதாகும். இது பல வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.
கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே என்ற கருத்து யாருக்காக சொல்லப்பட்டது? அரசியல் சட்டத்தில் இன்றுவரை எல்லோரும் எல்லா தொழிலையும் செய்யலாம், நீங்கள் கடமையை செய்யுங்கள் என்று சொல்லப்பட்டது அல்ல. அப்போது இருந்த வர்ணாசிரம தர்மத்தின் கீழ் சாஸ்திரங்கள் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை செய், அதற்கான பலனை எதிர்பார்க்காதே என்றுதான் அது கூறுகிறது.
பிராமணனுக்கு சூத்திரன் அடிமை வேலை செய்ய வேண்டும். அதற்கான பலனை எதிர்பார்க்க கூடாது. இதுதான் கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே என்ற தத்துவத்தின் விளக்கம். இந்த தத்துவம் மானுட குலத்துக்கு சொல்லப்பட்டது அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான்கு வர்ணத்தையும் நான் தான் படைத்தேன், இதை மாற்றுவதற்கு எனக்கே உரிமை இல்லை என்று கிருஷ்ணன் கூறிவிட்டான். இது குணத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது தானே ஒழிய பிறப்பின் அடிப்படையில் சொல்லவில்லை என்று பலரும் விளக்கமளித்து வருகின்றனர். இதனை மறைந்த காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி கடுமையாக எதிர்த்து கிருஷ்ணன் பிறப்பின் அடிப்படையில் தான் இதைச் சொன்னார் என்று கூறியிருக்கிறார். பிறப்பு முதல் இறப்பு வரை பிராமணன் பிராமணன் தான், சூத்திரன் சூத்திரன் தான். இதை யாராலும் மாற்ற முடியாது. எனவே இதை குணங்களோடு ஒப்பிட முடியாது என்பது காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தாகும்.
பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது கீதை? பெண்களைப் பெற்றெடுத்த உறுப்புகள் பாவம் செய்தவை என்று பகவத்கீதை கூறுகிறது. போரிடு! உடல் தான் அழியும், ஆத்மா அழியாது என்று போரை தூண்டும் ஒரு நூலாகத்தான் பகவத் கீதை இருக்கிறது. இதைத்தான் கிருஷ்ணன் வலியுறுத்துகிறான். ஆகவே போர் வெறியைத் தூண்டுகிற பகவத் கீதை இரஷ்யாவுக்கும் இஸ்ரேலுக்கும் வேண்டுமானாலும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கலாம்.
எனவே பெண்களை அவமானப்படுத்துகிற, சூத்திரர்களை இழிவுபடுத்துகிற, போர் வெறியை தூண்டுகிற ஒரு நூலாகத்தான் பகவத் கீதை இருக்கிறது.
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே-வும் பகவத்கீதையைத் தான் துணைக்கு அழைத்தான். காந்தியை சுட்டுக் கொல்வதற்கு துப்பாக்கியை கையில் எடுத்த கோட்சே, அதனை நியாயப்படுத்துவதற்காக பகவத் கீதையை துணைக்கு அழைத்தான். பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா, தர்மத்தை அழிப்பதற்கு கொலை செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். அந்த பகவத்கீதையின் அடிப்படையில் தான் காந்தியை சுட்டுக் கொன்றேன் என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தவர் கோட்சே.
பெண்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் போர் தொழில் அல்ல என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து கையில் துப்பாக்கியை ஏந்தி பகவத்கீதைக்கு நேரெதிராக களமிறங்கியுள்ள மனு பாக்கர், தனது வெற்றிக்கு காரணம் பகவத்கீதை தான் என்று பேசியிருப்பது மிகப்பெரும் முரண்பாடு ஆகும். பகவத்கீதையே ஒரு முரண்பாடான நூல் தான். எனவே பகவத்கீதையை கொண்டாடுவதற்கு எந்தவித நியாயமும் இல்லை. அது போர் வெறியை தூண்டுகிற, வர்ணாசிரம தர்மத்தை காப்பாற்றுகிற, பெண்களை இழிபடுத்துகிற ஒரு நூலே.
விடுதலை இராசேந்திரன்
பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்