தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பாதுகாத்திட மாவட்டத் தலைநகரங்களில் கழகம் ஆர்ப்பாட்டம்

மாநில உரிமையைக் காப்போம்!
கல்வி உரிமையை மீட்போம்!
எனும் முழக்கத்தோடு தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!
கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை!
அன்பு தோழர்களுக்கு, வணக்கம். அண்மைக் காலமாக ஒன்றிய அரசும் ஒன்றிய அரசின் முகவராக தமிழ்நாட்டில் செயல்படும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். ரவியும் கல்வியில் முன்னேறி உள்ள தமிழ்நாட்டின் கல்வி நிலையைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒன்றிய அரசின் கல்வித் துறை இந்த ஆண்டு கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவின் சிறந்த பல்கலைக் கழகங்கள் 100இல் 22 தமிழ்நாட்டில் இருப்பதையும், சிறந்த கல்லூரிகள் 100இல் 37உம், சிறந்த பொதுப் பல்கலைக் கழகங்கள் 50இல் 10உம், சிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 13உம், சிறந்த ஆய்வு நிறுவனங்கள் 50இல் 9உம் தமிழ்நாட்டில் இருப்பதை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால் நமது ‘அறிவாளி’ ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். ரவியோ தமிழ்நாட்டின் கல்வித் தரம் கீழ்நிலையில் இருக்கிறது எனத் திருவாய் மலர்ந்திருக்கிறார். தரவரிசைப் பட்டியலில் தங்களுடைய கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆளுகிற மாநிலங்களில் நிலையை அறிந்து பேசி இருந்தால், உண்மையைப் பேசியிருந்தால் இவ்வாறு பேசியிருக்க மாட்டார்.
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக 1000 பேருக்கு 4 மருத்துவர்களுக்கு மேலாகக் கொண்டிருக்கிறது. எல்லாப் பிரிவினரும் மருத்துவராகப் பணியாற்றிவரும் நிலையில் கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஏழ்மையில் இருக்கிற நம் மக்களின் கல்விக் கனவைச் சிதைக்கும் வகையில் நீட் என்ற தேர்வு கொண்டு வரப்பட்டது. இப்போது எம்.பி.பி.எஸ். படிப்பின் முடிவில் நெக்ஸ்ட்1 என்ற தேர்வும், அதில் தேர்வு என்றால் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் ஆக பணியாற்ற முடியும் என்பதையும், அந்தக் காலம் முடிவுற்றபின் மீண்டும் நெக்ஸ்ட் 2 தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவராகப் பதிவு செய்ய முடியும் என்பதோடு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும் எழுத முடியும் என்று மேலும் மேலும் தடைகளை இட்ட வண்ணம் இருக்கிறது.
இன்னொரு பக்கம் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை என்கிற 3ஆம் 5ஆம் 8ஆம் வகுப்பினர் கூட பொதுத் தேர்வு என்ற விதிகளையும், இந்தி உள்ளிட்ட மும்மொழிக் கொள்கையும் சமஸ்கிருதத்தையும் படிக்க வேண்டும் என்றும், குறைவான மாணவர் பயிலும் பள்ளிகளைக் கல்வி வளாகம் எனப் பெரிய பள்ளியோடு இணைப்பது என்பதன் வழியாகச் சாதாரண கிராம சமூகத்தில் பின்தங்கி இருக்கிற மாணவர்கள் நெடுந்தொலைவு நடக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி அவர்களுடைய கல்வியில் பெருந்தடையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அந்தத் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்விக்கான நிதியை நிறுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு.
இவ்வாறு பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து எதிர்வரும் 10.09.2024 செவ்வாய் அன்று எல்லா மாவட்டத் தலைநகர்களிலும், வாய்ப்புள்ள பிற இடங்களிலும், ஒத்த கருத்துள்ள இயக்கங்களை, தோழர்களை இணைத்துக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மாநில உரிமையைக் காப்போம்!
கல்வி உரிமையை மீட்போம்!
– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
04.09.202024.

பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

You may also like...