இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

ஆரம்பத்தில், பெண் தோழர்கள் யாரேனும் இறக்கும் சூழலில், பெண் தோழர்களே அந்தச் சடலத்தை தூக்கிச் செல்வது என்று செயல்படுத்தினோம். இறந்தவருக்கு பெண் பிள்ளை இருந்தால், அவரைக் கொள்ளி வைக்கச் செய்தோம்
‘ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சம உரிமை பெற, கல்வியே அடிப்படை’ என்று முழங்கிய பெரியார், பாலின பேதம் கடக்க வலியுறுத்திய கொள்கைகள், முன்னெடுப்புகள் பற்பல. அதையடுத்து, ஆணுக்கு இணையாக அனைத்திலும் தங்களின் உரிமைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர், பெண்கள். என்றாலும், இன்றளவும் அவர்களால் அதிகம் பங்கு இயலாத ஒன்றாக இருந்து வருவது… வாழ்வின் வழியனுப்பலுக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள்தான். இன்றும் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் அதில் புழங்குகிறார்கள். பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் செய்தால் என்ன?’ என்ற கேள்வியே உரக்க எழுப்பப்படவில்லை.
இத்தகைய சமூகச் சூழலில்தான் அதி முக்கியத்துவம் பெறுகிறது, கொளத்தூரில் பெண்கள் குழு ஒன்று செய்து வரும் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைமுறை. சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தில், பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட திராவிடப் பெண்கள் படையினர், இறந்தவர் களின் உடலைக் கையாள்வதில் இருந்து, சுடுகாட்டுக்குச் சுமந்து சென்று, அடக்கம் செய்வது வரை அனைத்தையும் செய்து, பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர்.
கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சுதாவிடம் பேசினோம். “நான் கடந்த 19 வருஷங்களா, தோழர்கள் விடுதலை இராஜேந்திரன், கொளத்தூர் மணி தலைமையில இயங்கிட்டு இருக்கிற திராவிடர் விடுதலைக் கழகத்துல இணைஞ்சு பயணிச்சிட்டு வர்றேன். பெரியாரோட முதன்மையான கொள்கைகள், சாதி ஒழிப்பும், பெண்ணுரிமையும். ஒரு ஆணுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கோ, அதெல்லாம் பெண்ணுக்கும் இருக்குனு அவர் சொல்லியிருக்கார். இறுதி மரியாதை நிகழ்வுகளும் இதுக்கு விதி விலக்கில்ல.
ஒரு காலத்துல, பெண்கள் உடன்கட்டை ஏற சுடுகாட்டுக்குப் போயிட்டு இருந்தாங்க. அதையே ஏத்துக்கிட்ட, வேடிக்கை பார்த்த சமூகம், பெண்கள் யாராச்சும், இறுதி மரியாதை நிகழ்வுகளைச் செய்ய சுடுகாட்டுக் குத் தானும் வர்றதா கேட்டா, இப்பவும் ஏத்துக்கிறதில்ல. இந்தச் சூழலைதான், எங்க இயக்கத்தை சேர்ந்த பெண்கள் எங்க கிராமப்புறப் பகுதிகள்ல மாத்திட்டு வர்றோம்.
வீடு தொடங்கி இடுகாடு வரை இறுதி மரியாதை நிகழ்வுகளை பெண்கள் ஏன் செய்யக் கூடாதுனு கேட்டா, ‘அதெல்லாம் காலம் காலமா அப்படித்தான், எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாது’, ‘பெண்கள் இளகின மனசு உள்ளவங்க, இதையெல்லாம் அவங்களால மன திடத்தோடு செய்ய முடியாது’, ‘பொம்பளைங்க சுடுகாட்டுக்குப் போனா பேய், பிசாசு பிடிச்சுக்கும்’னு பல பதில்களை, பயமுறுத்தல்களை சமூகம் சொல்லும். ஆண் வாரிசு இல்லாத ஒருத் தருக்கு கொள்ளிவைக்க, அவருக்கு மகள் இருந்தும் அனுமதிக்காம, பங்காளிகளை அதைச் செய்ய சொல்ற வழக்கம் இப்பவும் இருக்கு. அந்தளவுக்கு ஏன் பெண்களை அந்தக் கடமைகள்ல இருந்து தள்ளி வைக்கணும்? இதையெல்லாம் இனியாச்சும் மாத்தணும். அதைத்தான் நாங்க செஞ்சிட்டு இருக்கோம். கொளத்தூர் பகுதியில, எங்களோட இந்த முன்னெடுப்பை ஒரு சமுதாயப் புரட்சியா பார்க்குறோம்’’ என்றார் பெருமையுடன்.
இந்த முன்னெடுப்புக்கான ஊர்மக்களின் ஒத்துழைப்பு பற்றி, தோழர் சரஸ்வதியிடம் கேட்டோம். “எங்க கிராமத்துல, பெரியாரோட கொள்கைகளை ஏற்றுக்கொண்டவங்க வீடு கள்ல இதை செஞ்சுட்டு வர்றோம். எந்த ஒரு சீர்த்திருத்தமும் தன்னிடமிருந்து தொடங் கணும்னு சொன்னவர் பெரியார். அந்த வகையில, அவர் கொள்கைப்படி வாழ்ந்தவங் களும், அவங்க குடும்பத்தினரும் இதை நாங்க செய்யக் காரணமா இருக்காங்க. கடந்த 10 வருஷங்கள்ல, இதுவரை 30-க்கும் மேற் பட்டோரை நாங்க அடக்கம் செய்திருப்போம்.
நாங்க பெண்களா சென்று இறுதிச் சடங்குகள்ல பங்கெடுக்குறதுடன், உயிரிழந்த வங்களோட குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையும் இதுல இணைச்சிப்போம். உடலை அடக்கம் செய்றது, தகனம் செய்றதுனு அந்தப் பெண்களும் மன தைரியத்துடன் இதையெல்லாம் செய்ய முன்வர்றாங்க. குறிப்பா, முன்னைவிட இந்த பங்களிப்பு அதிகரிச்சுட்டே வருது. இதைத்தான் எங்களோட வெற்றியா பார்க்குறோம்’’ என்றார் வார்த்தைகளில் உறுதி தெறிக்க.
இறுதி மரியாதை நிகழ்வு அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட தோழர் காயத்ரி, “துக்க வீட்டில் ஊரும் உறவுகளும் கூடியிருக்கும் சூழல்ல, நம்மை இங்க இவங்க எல்லாம் அனுமதிப்பாங்களானு தயங்காம, நாங்களே எங்களுடைய உரிமையை எடுத்துட்டு, சடலத்தைக் கையாள்வது, தூக்கி சுமந்து சுடு காட்டுக்குக் கொண்டுபோறது, அடக்கம் செய்றதுனு எல்லா வேலைகளையும் பார்ப்போம். சம்பந்தப்பட்ட குடும்பத்தினரும் எங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க. உயிரிழந்த இயக்கத் தோழருக்கு, நெத்தியில பொட்டு வைக்கிறது, காசு வைக்கிறது, தலைமாட்டுல விளக்கு வைக்கிறதுனு எந்த சம்பிரதாயங்களையும் நாங்க செய்யுறது கிடையாது. ‘அந்தச் சடங்கெல்லாம் ஆதிகாலம் தொட்டு செஞ்சுட்டு வர்றது, அதை நீங்க மாத்தக் கூடாது’னு சொல்லுவாங்க சிலர். ஆனா, ஆதி காலத்தைவிட இப்போதான் மூடநம்பிக்கைகள் அதிகமா பின்பற்றப்படுது. மூட நம்பிக்கைகளை எல்லாரும் விட்டொழிக்கணும்’’ என்று பெரியாரின் குரலாகச் சொன்னவர்,
‘`சிலர் எங்ககிட்ட, ‘சுடுகாடு வரைக்கும் போயிட்டு வந்திருக்கீங்க, காத்து, கறுப்பு அண்டப் போகுது, செத்துப் போனவங்க பேயா வந்து உங்களப் புடிச்சுக்கப் போறாங்க’, ‘உங்களுக்குப் பயமா இருக்காதா?’, ‘நைட் எப்படி திகில் இல்லாம தூங்குறீங்க?’னு பலதும் கேட்பாங்க, சொல்வாங்க. `பேயை நம்புறவங்கதான் பேயை நினைச்சு பயப்படணும். நாங்கதான் பேய்னு ஒண்ணு இருக்கிறதா நம்பவே இல்லையே? மனுஷன் பொறந்தா இறக்கணும்ங்கிறது விதி. நாளைக்கு நமக்கும் இதே நிலைதான்…’னு கொஞ்சம் பக்குவமா சொல்லுவோம்’’ என்கிறார் நிதானத்துடன்.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது குறித்துப் பேசினோம். “தமிழ்ப் பண்பாட்டில் பெண்களுக்கு உரிய இடம் உண்டு. ஆரியப் பண்பாடு, இந்து மதம் வந்த பிறகு பெண்கள் அனைத்திலும் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். இறந்தவர்களின் மனைவி, மகள் கூட சுடுகாட்டுக்கு வரக் கூடாது என்று சொல்லப்பட்ட சூழலில், நாங்கள் அதை மறுக்கின்ற அடிப்படையில்தான் இந்தப் பழக்கத்தை தொடங்கினோம்.
ஆரம்பத்தில், பெண் தோழர்கள் யாரேனும் இறக்கும் சூழலில், பெண் தோழர்களே அந்தச் சடலத்தைத் தூக்கிச் செல்வது என்று செயல்படுத்தினோம். இறந்தவருக்கு பெண் பிள்ளை இருந்தால், அவரை கொள்ளி வைக்கச் செய்தோம். என் அம்மா இறந்தபோதுகூட, என் தங்கைதான் கொள்ளி வைத்தார். நீண்ட காலமாக இந்த நடைமுறைகளைத் தொடர்ந்து வந்ததன் விளைவாக, இப்போது ஆண் தோழர்களின் இறுதி நிகழ்வுகளிலும் பெண்கள் பங்கேற்க முன்னுரிமை கொடுக்கப்படுகிறது’’ என்றார்.
நெருப்பு வளரட்டும்!
நன்றி : அவள் விகடன்,30.07.2024

பெரியார் முழக்கம் 18.07.2024 இதழ்

You may also like...