உடைந்து தொங்கும் மோடி பிம்பம்
10 ஆண்டுகால மோடி ஆட்சியில் உலக நாடுகள் கண்டு அஞ்சுகிற அளவுக்கு மிகப்பெரிய வல்லாதிக்க சக்தியாக இந்தியாவை வளர்த்துவிட்டார் என பார்ப்பனக் கூட்டம் தங்களுக்கு தாங்களே குதூகலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகளின் புள்ளி விவரங்கள் அனைத்தும் மோடி ஆட்சி இந்தியாவின் இருண்ட காலம் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிக்கொண்டிருக்கின்றன.
• உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்த ஆண்டு இந்தியா 159வது இடத்துக்கு பின்தங்கிவிட்டதாக உலகளாவிய ஊடக கண்காணிப்பு நிருபர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது. தரவரிசையில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கையே 176-தான். இந்த பட்டியலில் 2022ஆம் ஆண்டில் 150-வது இடத்தில் இந்தியா இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது.
• 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 111-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. மொத்த நாடுகளின் எண்ணிக்கை 125. இந்த பட்டியலிலும் முந்தைய ஆண்டில் இந்தியா 107-வது இடத்தில் இருந்தது.
• 2022ஆம் ஆண்டு கணக்குப்படி இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் இந்தியாவில் 23.22 விழுக்காடாக உள்ளது. ஆனால் அண்டை நாடுகளான பாகிஸ்தானில் 11.3 விழுக்காடாகவும், வங்கதேசத்தில் 12.3 விழுக்காடாகவும், சீனாவில் 13.2 விழுக்காடாகவும், பூடானில் 14.4 விழுக்காடாகவும் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறது உலக வங்கி.
• இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2022-இன் படி இந்தியாவில் வேலையில்லாமல் இருப்பவர்களில் 82 விழுக்காட்டினர் இளைஞர்கள்.
• உலகளாவிய அடிமை அட்டவணையிலும் ஜி20 நாடுகளில் உச்சத்தில் இருக்கும் நாடு இந்தியா.
இதுபோக, மோடி ஆட்சியின் மனித உரிமை மீறல்கள், இந்துத்துவவாதிகளால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்தும் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. எதிர்ப்புகளும் எழத் தொடங்கியிருக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன. மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், குருகிராமில் வெடித்த மதக்கலவரம் குறித்தும் அமெரிக்கா கவலை தெரிவித்தது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்தியாவில் ‘மத சுதந்திரம் குறைந்து வருகிறது’ என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டியதுடன், மத சுதந்திரம் பறிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகி சிறையில் இருக்கும் 37 பேரை விடுவிக்க மோடி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.
தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையும் உலக நாடுகளால் கண்டனத்துக்கு உள்ளானது. ஆனால் இந்திய பகுதிகளை இணைத்து வரைபடம் வெளியிடும் சீனாவுக்கு எதிராக துணிச்சலாக கருத்துச் சொல்லவே அஞ்சுகிறது ஒன்றிய பாஜக அரசு. இத்தகைய போக்குகளால் மோடியின் பிம்பம் உலக நாடுகள் முன் உடைந்து நொறுங்கியிருக்கிறது. மீண்டும் இந்தியாவில் மோடியின் ஆட்சி அமையுமானால் அது மோசமான சர்வாதிகாரத்திற்கே இட்டுச் செல்லும் சென்றும் சர்வதேச ஏடுகள் எச்சரித்துள்ளன.
பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்