சுயமரியாதை இயக்கம் ஏன்? எதற்காக? – 1- பெரியார்

பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை.
சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925இல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால் தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும்.
எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சி யடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு அவசியமென்று தோன்றாத) எந்தக் காரியத்தையும் செய்திருக்கவு மாட்டேன்.
எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். எப்பொழு திருந்து எனக்கு இவைகளில் நம்பிக்கையில்லை யென்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டு பிடிக்கமுடியவே இல்லை.

எனது ஆறாவது வயதில் நான் ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பப்பட்டேன். அப்பள்ளிக் கூடம் ஈரோடு டவுனுக்குச் சற்று விலகிய தூரத்தில் இருந்தது. (இப்போது அது நடு ஊராய் விட்டது) அப்பள்ளிக்கூடத்தைச் சுற்றி வாணியச் செட்டிமார் களின் வீடுகள் உண்டு. எண்ணெய்ச் செக்கு சதா ஆடிக்கொண்டு இருக்கும். மூங்கிலில் பாய், முறம், கூடை பின்னுகின்றவர்கள், தெரு ஓரங்களில் குடிசை கட்டிக்கொண்டு தங்கள் வேலை செய்வார்கள். சில முஸ்லீம்கள் வீடும் குடிசை ரூபமாக அங்கே உண்டு.
ஆகவே அப்பள்ளிக்கூடத்தைச் சூழ்ந்திருந்த மக்கள் வாணியச் செட்டிமார், வேதக்காரர்கள் (கிறுத்தவர்கள்), சாயபுகள் ஆகியவர்கள். அந்த காலத்தில் இவர்கள் வீட்டில் மற்ற ஜாதியார்கள் என்பவர்கள் எவ்வித உணவும் அருந்த மாட்டார் களல்லவா? ஆகையால் என் வீட்டார்கள், நான் பள்ளிக்குப் போகும்போது எனக்கு ஞாபகமாய் சொல்லியனுப்புவார்கள். என்னவென்றால் “அங்குள்ள ஜாதியார், “பொழங்கக்கூடாத” ஜாதிக் காரர்கள். அவர்கள் வீட்டில் தண்ணீர் குடித்துவிடாதே. வேண்டுமானால் வாத்தியார் வீட்டில் வாங்கிக் குடி”யென்று சொல்லியனுப்புவார்கள். அதுபோலவே இரண்டொரு தடவை வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்டேன். வாத்தியார் ஓதுவார் ஜாதி. மாமிசம் சாப்பிடாத சைவர்கள். அவர்கள் வீட்டுச் சிறு பெண் எனக்குத் தண்ணீர் கொடுக்கும்போது ஒரு வெண்கல டம்ளர் கீழே வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, எடுத்துத் தூக்கிக் குடிக்கச் சொல்லும். நான் குடித்த பிறகு கவிழ்த்து வைக்கச் சொல்லும்.
பிறகு அதன் மீது தண்ணீர் ஊற்றி அதை எடுத்து நிமிர்த்தி உள்ளேயும் தண்ணீர் ஊற்றிக் கழுவி உள்ளே எடுத்துக்கொண்டு போகும். இதற்குள் எனக்குத் தூக்கிக் குடிக்கத் தெரியாமல் குடிக்கும்போது பகுதி தண்ணீர் மூக்கிலும் உடல் மேலும் விழும். பகுதி தண்ணீர் தான் வாயில் விழும். மூக்கில் விழுந்த தண்ணீரால் புரைபோய் இருமல் வந்து வாய்த் தண்ணீர் கீழே விழும். இதையெல்லாம் பார்த்து அந்தப் பெண் அசிங்கப்படும். சில சமயம் கோபித்து வையும். அதனால் நான் தாகம் ஏற்பட்டாலும் வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்பதில்லை. வாணியச் செட்டியார் பிள்ளைகள் வாத்தியார் வீட்டில் தாகத்திற்குத் தண்ணீர் கேட்ப தில்லை. எழுந்து நின்று பெரு விரலை வாத்தியாருக்குக் காட்டியவுடன் “போய்விட்டுச் சீக்கிரம் வா” என்பார். பையன் ஓடோடி அவன் வீட்டிலோ, அவனது வீடு சற்று தூரமாய் இருந்தால் சமீபத்தில் உள்ள ஒரு செட்டியார் வீட்டிலோ குடித்து விட்டு ஓடிவருவான். ஒரு நாள் நானும் அங்கு போய்த் தண்ணீர் சாப்பிடலாமென்று கருதி ஒரு செட்டியார் பையன் எழுந்து பெருவிரல் நீட்டும் போது நானும் நீட்டினேன். இருவரையும் போகும்படி வாத்தியார் தலை யாட்டினார். இருவரும் ஓடினோம், வாத்தியார் “ராமா நீ எங்கே ஓடரை?” என்றார். “தண்ணீருக்கு ஐயா!” என்றேன். “தண்ணீக்கு அவன் கூடப் போறாயே?” என்றார். பிறகு நான் வாத்தியார் வீட்டுக்கு (அதாவது ஒரு கூரைச் சாலையில் ஒரு பாகம் நிரைச்சல் கட்டித் தடுத்து அதில் வாத்தியார் குடியிருக்கிறார்) போய் தண்ணீர் குடித்து தண்ணீரை தேகமெல்லாம் சிந்திக் கொண்டு வேஷ்டியையும் நனைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்து கொண்டேன்.
அடுத்த நாள் தண்ணீர் தாகமெடுத்த போது ஒரு செட்டியார் பையனுடன் கூடப் போகத் தீர்மானம் பண்ணிக் கொண்டு அந்தப் பையனிடம் பேசிவைத்து அவர் தண்ணீர்குடிக்கப் பெருவிரலைக் காட்டு முன்பே நான் ஒன்றுக்குப் போகக் கேட்பவன் போல் எழுந்து நின்று ஆள்காட்டி விரலை நட்டத்தில் நீட்டிக் காட்டினேன். வாத்தியார் தலையை அசைத்தார். நான் வாத்தியார் வீட்டுக்குப் பின்புறம் போய் நின்று கொண்டேன். செட்டியார் வீட்டுப் பையன் தண்ணீர் குடிக்க அனுமதி கேட்டுக்கொண்டு வந்தான். அவன் வீடும் பின்புறமாய் போகக் கூடியதுதான். அவனும் நானுமாக அந்தச் செட்டியார் வீட்டுக்கு ஓடி லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். நான் சாதாரணமாக எங்கள் வீட்டில் குடிப்பதுபோல் லோட்டா விளிம்பை உதட்டில் வைத்து குடித்தேன். அந்தச் செட்டியார் வீட்டம்மாள் என்னைப் பார்த்ததும் “நீ நாயக்கர் வீட்டுத் தம்பியா?” என்றார். நான் “ஆமாம்” என்றேன். “இங்கே தண்ணீர் குடிக்கிறயே! உங்க வூட்டிலே ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?” என்றார். “சொல்லமாட்டாங்கோ” என்று சொல்லிவிட்டு ஓடினேன். அந்தப் பையனும் என்கூட ஓடிவந்தான். அதற்குள் அந்தம்மாள் அந்தப் பையனைக் கூப்பிட்டு “டே பழனியப்பா அந்தச் சொம்பைக் கழுவி உள்ளே வைத்துவிட்டுப் போடா” என்றார்.
அதேமாதிரி அந்தப் பையன் லோட்டாவைக் கழுவி வைத்துவிட்டு வீதி வழியாக முன்புறம் பள்ளிக் கூடத்திற்கு வந்தான். நான் போன வழியிலேயே பின் புறமாக பள்ளிக்கூடத்திற்கு வந்தேன். பிறகு இப்படியே -இதே மாதிரியாக மற்றொரு சமயம் வேதக்காரன் வீட்டில் தண்ணீர் சாப்பிட்டேன். இது மெல்ல மெல்ல அவர்கள் வீட்டுப் பலகாரங்களும், பிறகு அவர்கள் வீட்டில் விசேஷ காலங்களில் செய்யப்படும் காய்கறி சாமான்களும் கூடச் சாப்பிடும்படியாகச் செய்து விட்டது. எங்கள் வீட்டுக்கு இந்தச் செய்தி எட்டியது. வீடோ நல்ல பணம் வருவாய் ஏற்பட்டு பணம் பெருகி அப்பொழுதுதான் பார்ப்பனர்களைப்போல் நடக்க ஆரம்பித்திருந்த காலம். எந்நேரம் பார்த்தாலும் ஆச்சாரம், அனுஷ்டானம் என்கின்ற வார்த்தைகள் தான் உச்சரிக்கப்படும். என்றாலும் என் தகப்பனாருக்கு இதைப்பற்றி (நான் கண்ட இடத்தில் சாப்பிடுவதைப் பற்றி) அதிகமான கவலை கிடையாது. “சீச்சி இனி அப்படிச் செய்யாதே” என்று சொல்லி விடுவதோடு அவர் வேலை ஒழிந்துவிடும்.
என் தாயார் ஏதோ முழுகி விட்டது போல் கருதி மிக துயரப்படுவார். என்ன பண்ணியும் காரியம் மிஞ்சிவிட்டது. சாயபுமார் பையன் கொடுத்த பண்டம் கூடச் சாப்பிட்டு விட்டேன் என்பது என் வீட்டிற்கு தெரிந்து விட்டது. இதற்குள் என் பள்ளிப்படிப்பு எனது பத்தாவது வருஷத்திற் குள்ளாகவே முடிந்து விட்டது. ஏனென்றால் என் சினேகம் தின்னாத (பொழங்கக்கூடாத) ஜாதியாருடன் தான் அதிகம், அதனாலே நான் முரடனாகிவிட்டேன் என்பது அவர்கள் எண்ணம். காலில் விலங்கு இடப் பட்டேன். அந்த விலங்குகளுடனேயே அந்தப் பிள்ளை களுடன் கூடித் திரிவேன். ஒரு பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப் பட்டேன். அப்பொழுதும் இரு தோளிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்துக்கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவேன்.
கடைசியாக நான் அப்பள்ளிக்குப் போவது நிறுத்தப்பட்டு சர்க்கார் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப் பட்டேன். அதாவது முனிசிபல் பிரைமரி பள்ளிக் கூடத்துக்கு அதுவும் 2-ஆவதிலேயே, (10, 12வது வருஷத்திலேயே) நிறுத்தப்பட்டு எங்கள் கடையிலேயே வியாபாரத்தில் போடப்பட்டு விட்டேன். அதில் எனக்குள்ள வேலை, மூட்டைகளுக்கு விலாசம் போடுவது, சரக்குகள் ஏலங்கூறுவது, ஒழிந்த நேரங்களில் என் சொந்த வேலையாம் புராணங்களைப் பற்றி விவகாரம் செய்வது. இந்த வேலை எப்படி ஏற்பட்டதென்றால் எங்கள் வீட்டில் சந்நியாசி களுக்கும், பாகவதர்களுக்கும், சமயப் பிச்சைக்காரர்களுக்கும் (பார்ப்பனர்களுக்கும்) வித்துவான்களுக்கும் ரொம்பவும் செல்வாக்கு இருந்ததினாலும் அவர்களைக் கண்டு எனக்குப் பிடிக்காததாலும், அவர்கள் சொல்வதைப் பரிகாசம் செய்ய ஆரம்பித்து மறுத்துச் சொல்ல ஆரம்பித்து “விதண்டாவாத”க் கேள்விகள் கேட்க ஆரம்பித்து மெல்லமெல்ல அதுவே ஒழிந்த நேரவேலையாகவும் அதுவே இளைப்பாறுவதற்கு ஒரு துணைக் கருவியாகவும் எனக்கு உண்மையிலேயே உற்சாகமுள்ள வேலையாகவும் நேர்ந்துவிட்டது. நான் புராணங்களையோ வேறு எந்தத் தனிப்பட்ட புஸ்தகங்களையோ படித்த தில்லையென்றாலும் சைவம், வைணவம் ஆகிய இரு சமய சம்மந்தமாக உள்ள கதைகளோ, சரித்திரங்களோ சதா சர்வ காலம் – எங்கள் வீட்டில் இரு சமய “பக்தர்”களாலும் பண்டிதர்களாலும், காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது. ஏன்? பணம் வந்து குவியும்போது தர்மம்
செய்து தர்மப் பிரபு பட்டம் வாங்க வேண்டாமா? இவர்களைத்தானே தான பாத்திரங்களாகப் பேசப்படும். ஆதலால் இவர்கள் எங்கள் வீட்டில் குவிந்து கிடப்பார்கள். என் தாயார் இவர்கள் அளப்புகளை அதிக “பக்தி சிரத்தை”யுடன் கேட்டுக் கொண்டேயிருப்பார். தகப்பனாருக்கு இது ஒரு பெருமையாகவும் திருப்தியாகவும் இருக்கும். இதனால் எனக்கு சமய சம்மந்தமான – புராண சம்மந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும். அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும் அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) பல கேள்விகளுக்கு பதில் தாறுமாறாகவும் ஆளுக்கு ஒரு விதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு என்னை ஒரு “கெட்டிக்காரப் பேச்சுக்காரன்” என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சொல்லவுமான நிலைமை ஏற்பட்டது. என் தகப்பனார், நான் இப்படி “விதண்டாவாதமான” கேள்வி கேட்பதில் கோபம் வந்தாலும் உள்ளுக்குள் தனது மகன் இப்படி புத்தியாய் பேசுகிறானே என்கிற மகிழ்ச்சி உண்டு.
இந்தச் சம்பவங்கள் தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி மதத்திலும், கடவுள் சாஸ்திரங்கள் ஆகியவைகளிடத்திலும் நம்பிக்கையில்லாமல் போகும்படி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன்.
ஆனால் சுற்றுச்சார்புதான் ஒரு மனிதனின் வாழ்க்கை லட்சியம், கொள்கை ஆகியவைகளுக்குக் காரணமானது என்று சொல்லப்படுகிறது. அனுபவத் தில் பெரிதும் அப்படித்தான் இருந்தும் வருகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு துறையிலாவது சுற்றுச்சார்பு என்னை அடிமைப்படுத்தியதாகச் சொல்லுவதற்கு இடமே கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு தன்மையிலும் என்னைச் சுற்றி இருந்த சுற்றுச்சார்பு சகவாசம் ஆகியவைகளுக்கு மாறாகவே இருந்து வந்திருக்கிறேன்.
எதையும் நான் குறையாய் விட்டு விட்டுப் போகிறேன் என்று அதிருப்திப்படமாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆகவேண்டும்? எதாவது ஒரு வேலையில்லாமல் உயிர்வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் இதை அதாவது ஜாதி, மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானதும், முடிவானதுமான வேலையென்று இறங்கி விட்டேன்.
தொடரும்

You may also like...