பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2) – விடுதலை இராசேந்திரன்
வேலை இல்லாத் திண்டாட்டம் மிக மோசம்
வேலைவாய்ப்பு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என்று உறுதி கூறி பதவிக்கு வந்தார் மோடி. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுவோம். இஸ்ரேல் நாடு இப்பொழுது காசா மக்கள் மீது மிகப்பெரிய போரை தொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏராளமானவர்கள் அங்கே உயிர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் ஜியோனிசம் என்ற கொள்கையை பின்பற்றுகிறது. இது இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. மோடி ஆட்சி பேசுகிற இந்து ராஷ்டிரமும் இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே சித்தாந்த ரீதியில் இருவரும் ஒரே தளத்தில் பயணிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அங்கே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும்போது இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை அனுப்புகிற முயற்சியில் ஒன்றிய ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக இஸ்ரேல் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டு 45 ஆயிரம் இந்தியர்களை இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்புவது என்று முடிவுக்கு வந்தார்கள்.
போர் தொடங்கியதற்கு பிறகு இஸ்ரேல் பல பாலஸ்தீனியர்களை வேலையில் இருந்து வெளியேற்றி விட்டது. அவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் மீது தாக்குதலை தொடுப்பார்கள் என்ற அச்சத்தில் இந்த வெளியேற்றம் நடந்தது. இந்த நிலையில் அங்கே வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்த காரணத்தினால் நாங்கள் உங்களுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புகிறோம் என்று இந்தியா முன்வந்து இந்தியாவினுடைய திறன் வளர்ச்சி அமைப்பு அதாவது ஸ்கில் டெவலப்மென்ட் அமைப்பு இந்த வேலைக்கான ஆட்களை தேர்வு செய்கின்ற உரிமையை கையில் எடுத்துக் கொண்டது. வேலைக்கான ஆட்களை தேர்வு செய்கின்ற அந்த அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் பெரிதாக மாட்டப்பட்டு வேலைக்கு வருகின்ற “இளைஞர்களிடம் போர் நடக்கிறது என்பதால் உங்களுக்கு எந்த அச்சமும் வேண்டாம் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்தியா உங்களுக்கு வழங்கும்” என்று கூறி அவர்களை இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே போர் நடக்கின்ற இடத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டு நாங்கள் மீண்டும் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று மனு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆக போர் நடக்கின்ற ஒரு சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தாக இருந்தாலும் கூட, நாங்கள் இஸ்ரேல் நாட்டுக்கு வேலைக்கு போகிறோம் என்று இங்கு இருக்கிற இளைஞர்கள் துணிகிறார்கள். அதற்கு விதிகளை திருத்தி நீங்கள் தாராளமாகப் போய் வாருங்கள் என்று இந்திய அரசே அனுப்பி வைக்கிற அளவுக்கு தான் இங்கே வேலை இல்லாத் திண்டாட்டம் இருக்கிறது.
கிராமப்புற வேலை திட்டத்தின் கீழ் பலர் சலுகைகளை பெற்று ஓரளவுக்கு நிதிப் புழக்கம் கிராமப்புறத்தில் இருந்திருக்கிறது. அந்தத் திட்டத்திற்கான நிதியை நிதிநிலை அறிக்கையில் கணிசமாக குறைத்து மாநில அரசுகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியையும் கொடுக்காமல் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிற காரணத்தினால் கிராமப்புற வேலைத் திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. கிராமப்புற வேலை திட்டத்தில் வேலை செய்கிறவர்கள் ஆதார் அடையாள அட்டையோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அதன் காரணமாக ஏற்கனவே வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பெரும்பாலானவர்களை வேலையில் இருந்து நிற்கச் செய்கின்ற ஒரு முடிவையும் இந்திய அரசு செய்து அதிலும் வேலை வாய்ப்பை குறைத்து விட்டது.
நீதிமன்றங்கள் அவ்வப்போது பல பிரச்சனைகளில் இந்த ஆட்சியை குட்டிக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. அதுதான் இன்றைக்கு நீதிமன்றத்தின் மீது அவர்களுக்கு மிகப்பெரிய கோபத்தை உருவாக்கி இருக்கிறது. ராகுல் காந்தி பதவி நீக்கப்பட்டதற்குப் பிறகு அதைத் தவறு என்று சொன்னது உச்ச நீதிமன்றம். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் தான் நியமிக்கப்படும் ஆளுநர்களை விட அதிகாரம் பெற்றவர்கள் என்று டெல்லி யூனியன் பிரதேசம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது. அதற்குப் பிறகு அரசு, சட்டத்திலே ஒரு திருத்தம் கொண்டு வந்து ஆளுநர்களுக்குத்தான் அதிகாரம் என்று அதை அவர்கள் மாற்றி அமைத்தார்கள். அதற்குப் பிறகு மாநிலங்களவையில் தலையிட்ட ஆளுநர்களைக் கண்டித்து குறிப்பாக, பஞ்சாப் மாநில ஆட்சி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர்களைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான் அதிகாரம் உண்டு, ஆளுநர்கள் மாநில அரசுகளின் நடவடிக்கைகளில் குறிக்கிடமுடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக அப்போதும் ஒரு தீர்ப்பை வழங்கியது.
தேர்தல் பத்திர ஊழல்
தேர்தல் பத்திரம் என்ற ஒரு முறையைக் கொண்டுவந்து அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி பல நிறுவனங்களில் சோதனைகள் நடத்தி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை தங்கள் தேர்தல் நிதியாக வசூலித்துக் கொண்டிருந்தது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி. அதில் நடந்த மிகப்பெரிய ஊழல்கள் இப்பொழுது அம்பலமாகி வருகின்றன. தேர்தல் பத்திரங்களின் வாயிலாக நன்கொடைகள் பெறுவதற்காக அமலாக்கத்துறை பல நிறுவனங்களில் சோதனைகள் நடத்தி மிரட்டியிருக்கிறது. அதற்குப் பிறகு தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பணம் வாங்கியிருக்கிறது. பணம் வாங்கிய நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை ஒன்றிய ஆட்சி வழங்கியிருக்கிறது. 170 நிறுவனங்கள் இதை போல் சலுகைகள் பெற்று இருக்கின்றன.
எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த பல மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியை கலைத்தார்கள். மேகாலயா சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களை மட்டுமே கொண்ட பாஜக ஆட்சி ஆட்சியை கவிழ்த்து, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்தது. மேகாலயா மட்டுமல்ல, கோவா, சிக்கிம், கர்நாடகா, மத்திய பிரதேசம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சிக் கவிழ்ப்பு செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை சிதைத்தார்கள். இவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தேசம் மெஜாரிட்டி மக்களான இந்துக்களால் ஆளப்படுகிற ஒரு தேசம் என்று சொல்கிறார்கள். எனவே இது இந்து தேசமாக இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள் மெஜாரிட்டி என்பதை இந்து மதத்தோடு இணைத்து அவர்கள் பேசுகிறார்கள்.
இந்து தேசியம் என்ற புனைவு
மெஜாரிட்டி என்பது இந்து மதத்தோடு இணைக்கப்படுகிறது. தேசம் தேசியம் என்பதும் இந்து மதத்தோடு இணைக்கப்படுகிறது. தேசத்தின் அடையாளமாக இந்து என்கிற மதச்சார்பை பூசுவதை நாம் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது. இது குறித்து அண்மையில் வெளி வந்திருக்கிற ஒரு நூலில் ரொமிலா தாபர், தேசம் தேசபக்தி என்கிற கட்டமைப்பு இங்கே முறைகேடாக செயல்படுத்தப்படுகிறது, என்பதை விரிவாக விளக்கி இருக்கிறார். ஒரு ஜனநாயகத்தில் மெஜாரிட்டியை வாக்காளர்களாகிய குடிமக்கள் தேர்தெடுக்கிறார்கள். இந்து குடிமக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கான ஆட்சி என்று அரசியல் சட்டம் கூறவில்லை. குடிமக்கள் என்று சொன்னால் அவர்கள் அனைத்து மதத்தையும் சேர்ந்தவர்களாகவும், மதத்திற்கு அப்பாற்பட்டவர்கமாகவும் இருக்கலாம். குடிமக்கள் என்பதற்கு இந்துக்கள் என்று இவர்கள் அடையாளம் செலுத்துவது அரசியல் சாசன சட்டத்தின் நோக்கத்தை சிதைப்பதாகும். ஒரு ஜனநாயக கட்டமைப்பில் மெஜாரிட்டி மைனாரிட்டிக்கு அடிப்படைக் கருத்தியல் ‘ஈக்குவாலிட்டி’ (Equality) என்பதே!
எனவே, பாஜக என்கிற இந்த மதவாத, ஜனநாயகக் கட்டமைப்புகளை சிதைக்கிற, மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கின்ற, நாட்டின் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கின்ற ஒரு ஆட்சிக்கு விடை கொடுக்க வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் இன்றைக்கு வரலாறு நம் மீது சுமத்தி இருக்கின்ற பொறுப்பும் கடமையும் ஆகும்.
தேர்தல் பத்திரங்களில் தோண்டத் தோண்ட ஊழல்!
மோடி அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் என்ற மெகா மோசடித் திட்டத்தைத் தோண்டத் தோண்ட ஊழல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பால் தேர்தல் பத்திரங்கள் முறை ஒழிக்கப்பட்டு, ரகசியங்கள் வெளியிடப்பட்டன. மொத்த தேர்தல் பத்திரங்களில் பாஜகவுக்கு மட்டுமே ரூ.8250 கோடி கிடைத்தது தெரியவந்தது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததும் எஸ்.பி.ஐ. தரவுகளை ஆய்வு செய்ததில் அம்பலமானது.
இந்த நிலையில், குஜராத்தில் பட்டியல் சமூக விவசாயியின் குடும்பத்திடம் நிலம் வாங்குவதுபோல் ஏமாற்றி , பாஜவுக்கு ரூ.10 கோடி நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது. அதானி குழுமத்துக்கு நெருக்கமான வெல்ஸ்பன் நிறுவனம் இந்த மோசடியைச் செய்திருக்கிறது. அங்குள்ள கட்ச் மாவட்டத்தின் அஞ்சார் பகுதியில் புதிய தொழில் தொடங்க பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்கியது வெல்ஸ்பன் நிறுவனம். இதில் பட்டியல் சமூக விவசாயி ஹரேஷ் சவகரா என்பவரின் 11 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.16.61 கோடிக்கு நிலம் விற்பனையானது. இதில், ரூ.2.80 கோடி முன்பணமாக தரப்பட, மீதமுள்ள ரூ.13.81 கோடி ஹரேஷ் சவகரா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், மொத்தம் ரூ.11 கோடிக்கு சவகரா குடும்பம் சார்பில் தேர்தல் பத்திரங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கப்பட்டன. இதில், ரூ.10 கோடியை பாஜவும், ரூ.1 கோடியை சிவசேனா கட்சியும் பணமாக்கி உள்ளன. தேர்தல் பத்திர திட்ட விவரங்களை ஆய்வு செய்த பத்திரிகையாளர்கள் சிலர் இது பற்றி ஹரேஷ் சவகராவை சந்தித்து விளக்கம் கேட்ட பின்னர்தான், தாங்கள் ஏமாற்றப்பட்டதே தெரிய வந்திருக்கிறது. அதன்பிறகு அஞ்சார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பத்திரிகையில் அளித்திருக்கும் பேட்டி: “எங்கள் குடும்பத்துக்கு மொத்தம் ரூ.16.61 கோடி கிடைத்ததால் மகிழ்ச்சியாக இருந்தோம். அப்போது, என்னையும் என் தந்தையையும் வெல்ஸ்பன் நிறுவன விருந்தினர் விடுதிக்கு அழைத்து அந்த நிறுவன அதிகாரி மகேந்திர சிங் சோதா பேசினார். அப்போது, நகர பாஜ தலைவர் ரஜினிகாந்த் ஷா உடனிருந்தார். இவ்வளவு பெரிய தொகையை வங்கியில் வைத்திருந்தால் ஐ.டி ரெய்டு வரும் என்று மிரட்டினார். ரெய்டில் இருந்து தப்பிக்க தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள், நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினார். இதனால், அதற்கு சம்மதித்தோம். இப்போதுதான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. எங்களை ஏமாற்றி பாஜவுக்கு நிதி கொடுக்க வைத்த வெல்ஸ்பன் நிறுவன இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, 11 ஏக்கர் நிலத்துக்கு குஜராத் அரசு முதலில் ரூ-76 கோடியை விலையாக நிர்ணயித்தது. ஆனால், அந்த தொகையை தர வெல்ஸ்பன் நிறுவனம் மறுத்துவிட்டது. ஓராண்டுக்கு பிறகு கட்ச் மாவட்ட சப் கலெக்டர் தனது அதிகார வரம்பை மீறி நிலத்தின் மதிப்பை ரூ.16.61 கோடியாக முறைகேடாக குறைத்ததாக சவகரா குடும்பத்தின் வழக்கறிஞர் புகார் கூறியுள்ளார். வங்கி டெபாசிட் பத்திரத்துக்கும் தேர்தல் பத்திரத்துக்கும் கூட வித்தியாசம் தெரியாத அப்பாவி பட்டியல் சமூகக் குடும்பத்தை அதானிக்கு நெருக்கமான வெல்ஸ்பன் உள்ளூர் பாஜக நிர்வாகிகளோடு சேர்ந்து ஏமாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடக்கத்தில் இருந்தே பாஜகவை பாதுகாக்கும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறது. பல உண்மைகளையும் மறைத்துக் கொண்டிருக்கிறது. கோடக் மஹிந்த்ரா குழுமம் 130 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியதாகக் கணக்குத் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் எஸ்பிஐ வெளியிட்ட விவரங்களில் 60 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் குறித்த தகவல்கள் மட்டுமே உள்ளன. மீதம், 70 கோடி ரூபாய் குறித்த தகவல்கள் இல்லை.
பூஜ்யம் ரூபாய் கூட இலாபம் இல்லாத மற்றும் இழப்பைச் சந்தித்த நிறுவனங்களும் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. அத்தகைய 33 நிறுவனங்கள் வழங்கிய தேர்தல் பத்திரங்களின் மதிப்பு 576.2 கோடி ரூபாய். இதில் 434.2 கோடி ரூபாய் பாஜகவுக்கு மட்டுமே சென்றுள்ளது. அதாவது இலாபம் ஈட்டாத மற்றும் இழப்பைச் சந்தித்த நிறுவனங்களில் 75% நிறுவனங்கள் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் மிரட்டப்படாமல் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியிருக்குமா? அல்லது இலாபத்தை மறைத்து கொள்ளையடிக்கும் நிறுவனங்களிடம் லஞ்சமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக நன்கொடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை இதிலிருந்து ஊகிக்க முடிகிறது. தேர்தல் பத்திரங்களைத் தோண்ட தோண்ட பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகிக் கொண்டே உள்ளன. பாஜகவின் இந்த மெகா மோசடியில் சம்மந்தப்பட்ட அனைவரையும் உள்ளடக்கி உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்