பார்ப்பனர்களை புறக்கணிக்கிறதா பாஜக?
திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் ஒரு இசுலாமியரைக் கூட தேர்வு செய்யவில்லை என்று அதிமுகவினரும், பாஜகவினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். அதிமுக வேட்பாளர் பட்டியலிலும் ஒரு இசுலாமியர் கூட இல்லாததை அடுத்து, இந்த விவாதம் தானாக ஓய்ந்துவிட்டது. இசுலாமியர்களுக்கு திமுக இடம் ஒதுக்கியிருக்க வேண்டுமென்பது நியாயமான கேள்விதான். இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இசுலாமியர்களுக்கு ஏன் சீட் ஒதுக்கவில்லை என பாஜக ஆதரவாளர்கள் கேட்கும் கேள்விதான் நகைப்பை ஏற்படுத்துகிறது.
நாமும் அவர்களை நோக்கி ஒரு கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு பார்ப்பனர் கூட வேட்பாளர்களாக இல்லை. ஆனால் பார்ப்பனக் கட்சியான பாஜகவும் ஒரு தொகுதியில்கூட பார்ப்பனர்களை நிறுத்த முன்வரவில்லையே ஏன்? எந்த பார்ப்பனராவது பாஜகவை நோக்கி இக்கேள்வியை எழுப்பினார்களா என்றால் நிச்சயம் இல்லை. வேட்பாளராக தங்களை நிறுத்தாவிட்டாலும், பாஜக பார்ப்பனர்களுக்கான கட்சிதான், மீண்டும் பாஜக ஆட்சிதான் அமைய வேண்டுமென்ற நோக்கத்திற்காக பார்ப்பனர்கள் அமைதி காக்கிறார்கள்.
பார்ப்பனரான மாலன் நாராயணனிடம் இதுகுறித்து ‘தி பிரிண்ட்’ ஊடகம் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறது. “ஒருகாலத்தில் பாஜக என்றால் பார்ப்பன கட்சி என்ற பார்வை இருந்தது. ஆனால் அதை உடைக்க 10 ஆண்டுகளாக பாஜக முயற்சித்து வருகிறது. ஏனென்றால் இந்த பிம்பத்தால் வாக்குகள் கிடைக்காது” என்று அவர் கூறியிருக்கிறார். ஆக, எல்லா சமூகங்களின் வாக்குகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே பாஜக பார்ப்பன வேட்பாளர்களை தவிர்த்திருக்கிறது. ஆனால் சூத்திரர்களின் வாக்குகளைப் பெற்று, அதிகாரத்தைக் கைப்பற்றி பின்னர் பார்ப்பனர்களின் நலனுக்காகவே பாஜக உழைக்கும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இத்தகைய கண்ணாமூச்சி விளையாட்டை நம்பும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் இல்லை.
பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்