தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மிக மோசமாக சித்திரிப்பு செய்கிறது வேலையில் இறங்கியிருக்கிறது பாஜக. பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரப் பிரதேசத்தில் என்ன நிலைமை என்பது கூட தெரியாமல், தமிழ்நாட்டின் மீது சேற்றை வாரி இறைக்கும் பாஜகவினருக்கு பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன் தரவுகளால் பதிலடி கொடுத்திருக்கிறார்.
15.02.2024 அன்று West Delhi-ல் இருக்கும் Aventa Company-ன் basement -ல் போதை மருந்து தயாரிப்பதற்கான pseudoephedrine எனும் மூலப்பொருள் 50.070 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய அரசின் போதைத் தடுப்புப் பிரிவின் (NCB) டெல்லி மண்டல அலுவலகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கு எண்-VIII /03/DZU/2024 – இந்த வழக்குக்கு விகாஷ் ஷர்மா என்ற ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரி.
இது சம்பந்தமாக 23-02-2024 அன்று ஜாபர் சாதிக் என்ற தமிழ்நாட்டைச் சார்ந்தவருக்கு சம்மன் வழங்கப்பட்டு,தொடர் சோதனைகள் மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜாபர் சாதிக் திமுகவில் இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு போதைப்பொருள் வர்த்தகத்தின் மையாக விளங்குகிறது என்ற தோற்றத்தை உருவாக்கும் மாபெரும் சதி அரங்கேறி வருகிறது
அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாகிறது என்ற பொய்யை திரும்ப திரும்ப பரப்பினார்கள். அதே போன்றதொரு தோற்றத்தை இப்போது போதைப்பொருள் பறிமுதல் விவகாரத்தில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். இப்போது வரை, இந்த வழக்கு குறித்து போதைப்பொருள் தடுப்பு முனையம் சார்பில் எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
அண்ணாமலையின் வார் ரூம், சவுக்கு சங்கர் போன்ற தரகர்கள்தான் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். புலனாய்வு ஏஜென்சிகள் முறையாக விசாரித்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலத்தில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பரப்பி பாஜகவும், அதன் அல்லக்கைகளும் செய்து வரும் அரசியலுக்கு வெளிப்படையாக உதவி செய்யக்கூடாது. இப்பொழுது இந்த புலனாய்வு அமைப்புகள் அதைத்தான் செய்கின்றன.
குஜராத்தின் அதானி முந்த்ரா துறைமுகத்தில் 17/09/21 மற்றும் 19/09/21 ஆகிய இரண்டு தேதிகளில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2988.21 கிலோ ஹெராயின் பிடிபட்டது. இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவு போதைப்பொருள் பிடிபட்டதில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. தற்போது NIA விசாரித்து வரும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மூன்று முறை துணை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முந்த்ரா துறைமுகத்தில் 2,988 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்படுவதற்கு முன்பாக அதைவிட 500 மடங்கு அதிகமான ஹெராயின், அதாவது 15,391.80 கிலோ பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக NCB-ன் அறிக்கை கூறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் எப்போது 15,391.80 கிலோ ஹெராயின் பிடிபட்டது? யாருக்கும் தெரியாது! யார் பறிமுதல் செய்தது? பதில் தெரியாது. எந்த ஏஜென்சி 15,391.80 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த வழக்கை விசாரிக்கிறது? அதுவும் தெரியாது.
இப்படி போதைப்பொருள் பறிமுதல் விவகாரத்தில் என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. சம்பந்தப்பட்ட ஏஜென்சியாக கூறினால் மட்டுமே மக்கள் தெரிந்துகொள்ள இயலும். குஜராத் விவகாரம் வெளியில் வரவில்லை; உத்தரப் பிரதேச விவகாரம் வெளியில் வரவில்லை. அப்படி இருக்க, டெல்லியில் பிடிபட்ட 50.070 கிலோ pseudoephedrine விவகாரத்தை மட்டும், தமிழ்நாடு அரசாங்கத்தின் துணையோடு போதைப்பொருள் சாம்ராஜ்யம் நடப்பது போல சித்தரிக்க முயல்வது அயோக்கியத்தனமானது இல்லையா?
திமுக மீதான வன்மத்தின் காரணத்தால் விவகாரத்தை பூதாகாரமாக்கி தமிழ்நாட்டின் மீது மிக மோசமான ஓவியத்தை தீட்டிக்கொண்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை போல போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் காவல்துறை இந்தியாவிலேயே வேறொன்றும் கிடையாது. தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக ஒரு மாநிலத்தையே அசிங்கப்படுத்தும் அயோக்கியத்தனத்தை எந்தவிதத்திலும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பதிவிட்டிருக்கிறார் அரவிந்தாக்ஷன்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் எதையாவது அவதூறு பரப்புவதும், அதைவைத்து தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயல்வதுமே பாஜகவின் வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் பாஜகவின் சதித் திட்டங்கள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபட்டதில்லை. இப்போதும் ஏமாற்றமே மிஞ்சப் போகிறது.
பெரியார் முழக்கம் 15032024 இதழ்