பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறத் தொடங்கியிருக்கிறது. அதற்கேற்ப மக்கள் மனநிலையைக் கட்டமைக்கும் விதமாக, பல ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை திணிக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கும் அளவுக்குக்கூட வளர்ந்திடாத பாஜக 18% வாக்குகளுக்கு மேல் பெறும் என்றும், 4 முதல் 6 தொகுதிகள் வரை வெல்லக்கூடும் என்றும் புதிய தலைமுறை ஊடகம் கூட கருத்துத் திணிப்பு செய்தது. இப்படி பாஜகவிற்கு ஆதரவாக கருத்துருவாக்கம் செய்ய முயலும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எப்படி நடத்தியிருக்கிறது என்பது பெரும் விவாதத்துக்கு உரியது. இதுகுறித்து “தி ஸ்கிரால்” ஊடகத்தில் அயூஷ் திவாரி என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:
2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 180 நாடுகளில் 140-வது நாடாக இருந்தது. அதுவே மோசமான நிலைதான் என்றால், இப்போது 163வது இடத்துக்கு மேலும் பின்தள்ளப்பட்டுள்ளது. 1. அரசாங்கத்திற்கான ஊடக அணுகல் எப்படி இருந்தது? 2. பத்திரிகையாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு அளவு 3. ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகள் ஊடகங்களை எப்படி பாதித்தன? கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஊடகங்கள் எப்படி நடத்தப்பட்டன என்பதை இந்த 3 அளவீடுகளில் இருந்து விளக்கலாம்.
அணுகல் :
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களின் ஒற்றை கேள்வியைக் கூட பிரதமர் மோடி எதிர்கொண்டதே இல்லை. ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது 10 ஆண்டுகால ஆட்சியின் கடைசி 2 ஆண்டுகளான 2012 முதல் 2014 வரையில் மட்டும் 117 முறை பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்றுள்ளார். முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்த மணிஷ் திவாரி கொடுத்த அதிகாரப்பூர்வ தகவல் இது.
கடந்த 10 ஆண்டுகளில் இரண்டே முறை மட்டும்தான் மோடி பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறார், அதுவும் இந்தியாவுக்கு வெளியில். 2015ஆம் ஆண்டு இங்கிலாந்திலும், 2023ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் இந்த பத்திரிகையாளர் சந்திப்புகள் நடந்தன.
பத்திரிகையாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் ஒன்றிய அமைச்சகங்களை அணுகுவதில் கடுமையான தடைகளை மோடி ஆட்சியில் எதிர்கொண்டுள்ளனர். அதிகாரிகளை சந்திக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டுமென்ற என்ற நிபந்தனையை 2019ஆம் ஆண்டில் ஒன்றிய நிதியமைச்சகம் கொண்டு வந்தது. கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து பத்திரிகையாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவிட்டன.
வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் காஷ்மீர் மற்றும் அசாமுக்கு சென்று செய்தி சேகரிக்க வேண்டுமென்றால், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இருந்து வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்களில் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சிறப்புரிமை ரத்து மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டங்களால் இந்த கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் விசாக்கள் தள்ளுபடி செய்யப்படுவதும் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது.
குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கை விவரிப்பது தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை ஒன்றிய அரசு தடை செய்தது ஊடகங்களின் மீது நடத்தப்பட்ட மிக முக்கியமான ஒரு தாக்குதல். தடையோடு மட்டும் இது முடியவில்லை. அதேகாலகட்டத்தில் பிபிசி அலுவலகங்களில், பத்திரிகையாளர்களின் வீடுகளில் வருமான வரி சோதனையும் ஏவப்பட்டது.
வெளிநாட்டு பயணங்களின் போது, உடன் பத்திரிகையாளர்களையும் அழைத்துச் செல்லும் முந்தைய பிரதமர்களின் வழக்கத்தையும் நரேந்திர மோடி முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்.
கொள்கை:
இந்திய ஊடகங்களின் (டிஜிட்டல், அச்சு, காட்சி) முதன்மை வருவாய் என்பது விளம்பரங்கள்தான். முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விடவும், ஒன்றிய பாஜக அரசு முதல் 3 ஆண்டுகளில் ஊடகங்களுக்கான விளம்பர கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. ஆனால் 2017ஆம் ஆண்டில் இருந்து விளம்பரக் கட்டணம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது.
டைம்ஸ், ஏபிபி, இந்து குழும பத்திரிகைகளின் விமர்சனங்களுக்கு பதிலடியாக, அந்நிறுவனங்களுக்கு விளம்பரம் கொடுப்பதையே 2019ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு நிறுத்தியது. ஊடகங்களில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பும் 26 விழுக்காட்டில் இருந்து 49 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. எனினும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு மட்டும் வெளிநாட்டு முதலீடு குவிந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு 26 விழுக்காட்டை அதிகபட்ச வரம்பாக நிர்ணயித்தது ஒன்றிய பாஜக அரசு.
இணையத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் மோடி அரசு கொண்டுவந்த சட்டங்களும் டிஜிட்டல் மீடியாக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. தொலைக்காட்சிகளுக்கு உரிமம் வழங்குவதிலும் மோடி அரசு பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல புளூம்பெர்க் நிறுவனம் குயிண்ட் நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டலில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டு நிறுவனம் செய்திச் சேனல் ஒன்றை தொடங்குவதற்காக, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் 3 ஆண்டுகளாக அனுமதி கிடைக்காததை அடுத்து, செய்திச் சேனல் தொடங்கும் திட்டத்தையே அந்நிறுவனம்
கைவிட்டுவிட்டது. ஆனால் சமகாலத்தில் தொடங்கப்பட்ட ரிபப்ளிக் டிவிக்கு ஒரே மாதத்தில் உரிமம் வழங்கப்பட்டது. (பாஜக ஆதரவாளரான அர்ணாப் கோஸ்வாமி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இருந்து 2016 நவம்பரில் வெளியேறி, 2017 மே மாதத்தில் ரிபப்ளிக் டிவியை தொடங்கினார்.)
மலையாள செய்தி சேனலான மீடியா ஒன்றின் உரிமத்தை புதுப்பிக்கவும் 2022 ஜனவரியில் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதி மறுத்துவிட்டது. பின்னர் அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்துக்கு சென்றே உரிமத்தைப் புதுப்பித்தது.
பாதுகாப்பு:
பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறை முன்பிருந்ததை விட மோடி ஆட்சியில் 4 மடங்கு அதிகரித்துவிட்டது. பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் (Committee to Protect Journalists) தரவுகளின்படி, 2014- 23 வரையிலான காலகட்டத்தில் 36 பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் சிறைபடுத்தபட்டுள்ளனர். ஆனால் முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 8 பத்திரிகையாளர்கள் மட்டுமே சிறைபடுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் மீது பயன்படுத்த வேண்டிய உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு) சட்டத்தின் கீழ் 16 பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 29 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக Reporters Sans Frontieres அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. இதிலும் மோடி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை. மோடி ஆட்சியிலும் இதுவரை 28 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இவை மட்டுமல்ல, ஸ்பைவேர்கள் (உளவு மென்பொருள்) கொண்டு அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் கண்காணிக்கப்பட்டதைப் போல பத்திரிகையாளர்களும் உளவு பார்க்கப்பட்டனர். சில இளம் பத்திரிகையாளர்கள் வீடுகளில் கூட சோதனைகள் நடந்தன. சில ஊடகங்களில் நியூஸ் ரூம்களே பந்தாடப்பட்டு, சீட்டுக் கட்டுக்கள் போல பத்திரிகையாளர்கள் கலைக்கப்பட்டனர். மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பத்திரிகையாளர்கள், ஊடகங்களின் நிலைமை இதுதான்.
இப்படிப்பட்ட அடக்குமுறைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் எதிராக ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள் பாஜகவின் ஊதுகுழலாக ஒலித்துக்கொண்டு, கருத்துத் திணிப்புகளை செய்யத் தொடங்கியிருக்கின்றன என்பதுதான் வேதனைக்குரியது.
பெரியார் முழக்கம் 07032024 இதழ்