பெரியார் தமிழுக்கு எதிரியா?

1956ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ் ஆட்சிமொழி மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஒட்டி, 28-ஆம் தேதி விடுதலையில் வெளியான தலையங்கம்…

“சட்டம் மட்டும் போதாது”

இனித் தமிழ்தான் ஆட்சி மொழியாயிருக்கும் என்று திரு. காமராசர் ஆட்சியின் முயற்சியினால் தமிழ்நாடு சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. சட்டசபை உறுப்பினர்களையும் மந்திரி சபையையும் பாராட்டுகிறோம். இச் சட்டத்தை இக்கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென்று பிடிவாதமிருந்த முதலமைச்சர் திரு.காமராசர் அவர்களையும் பாராட்டுகிறோம்.

ஆனால் இச்சட்டத்தை நிறைவேற்றினால் மட்டும் போதாது. இதை உடனடியாக நடைமுறையில் கொண்டுவர வேண்டும். நிர்வாகத்துக்குரிய எல்லா இங்கிலீஷ் சொற்களுக்கும் நேரான தமிழ்ச்சொற்கள் கிடைக்கும்வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. தெரியாத சொற்களை இங்கிலீஷிலேயே கலந்து எழுதலாம். இடைக்காலத்தில், ஒருசில மாதங்கள் வரையில், “மணிப்பிரவாள” நடையில் எழுதுவதனால் ஒன்றும் தவறில்லை. மனிதனின் கருத்தைத் தெரிவிப்பதற்குத்தானே மொழி? காஃபி, ஃபவுண்டன் பேனா, சைக்கிள், பேனா, டெலிபோன், காலெண்டர், மோட்டார் கார், ஃபோட்டோ, தர்மாஸ் ஃபிளாஸ்க் போன்ற பல சொற்களை இங்கிலீஷிலேயே எழுதலாம். இவைகளுக்கான தமிழ்ச்சொற்களை ஆராய்ந்து கற்பித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை.

ஆனால் ஆட்சியாளர் உடனடியாக செய்ய வேண்டிய வேலைகள் சில உண்டு. இவைகளைப் பற்றி துறையூர் எம்.எல்.ஏ. திரு ரெங்கசாமி ரெட்டியார் அவர்கள் நன்றாகத் தொகுத்து சட்டசபையில் கூறியிருக்கிறார்.

  1. தமிழ் டைப்ரைட்டிங் வளர்ச்சி
  2. தமிழ் சுருக்கெழுத்தாளர் பெருக்கம்
  3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

இம்மூன்றையும் உடனடியாகக் கவனிக்காத வரையில் தமிழ் ஆட்சிமொழியாக வந்த பிறகு, நடைமுறையில் பல தொல்லைகள் ஏற்படும். இத்தொல்லைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு, எதிரிகள் வேலை செய்வார்கள், விஷமஞ் செய்வார்கள்.

தமிழ் டைப்ரைட்டிங் இயந்திரங்களை திருத்தியமைத்தாலொழிய இங்கிலீஷைப்போல் நிமிஷத்துக்கு 40-50 சொற்கள் வீதம் விரைவாக அடிக்க முடியாது. இப்போதுள்ள டைப்ரைட்டருடைய “கீ போர்டை” (key board) திருத்தியமைக்க வேண்டும். இதற்கு முன்பாக, தமிழில் தேவையற்ற எழுத்துக்களாகிய ஐ,

போன்ற சுமார் 20 எழுத்துக்களை நீக்கிவிடலாம். இந்த எழுத்து மாற்றத்தை திரு அவிநாசிலிங்கனார் அவர்கள் அமைச்சராயிருந்தபோது, பல நிபுணர்களை கொண்ட ஆராய்ச்சிக்குழு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதன்படி பாடப்புத்தகங்கள் எழுதப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டிய சமயத்தில், மந்திரி சபையில் மாற்றம் ஏற்பட்டது. அதற்குப்பிறகு வந்த மலையாளி கல்வியமைச்சர் இந்த முயற்சியைக் குப்பைத் தொட்டியில் எறிந்தார். அதற்குப் பிறகு வந்த அமைச்சர்களுக்கு இதுபற்றிய அறிவும் இல்லை; அக்கறையும் இல்லை.

“பெரியார் சொல்லி நாம் ஒப்புக் கொள்வதாவது? நம் படிப்பென்ன? பட்டமென்ன?” – என்ற அகம்பாவத்தினால்  “அறிஞர்கள்  ” என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்ட கண்ணீர்த் துளிகள் இந்த எழுத்து மாற்றத்தை அன்றுமுதல் இன்றுவரையில் கேலி செய்து வருவதுபோல், ஆட்சியாளரும் அகம்பாவ உணர்ச்சிகொண்டு நடப்பார்களானால் தமிழ் வளர்ச்சிக்குத்தான் தடையே ஒழிய பெரியாருக்கோ அவரது கட்சிக்கோ எந்தவிதமான கஷ்டமமும் இல்லை.

“எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறள் இந்த அகம்பாவக் கூட்டத்துக்கு மண்டை கர்வம் படைத்த பட்டதாரி கூட்டத்துக்கு ஆகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்று கருதுகிறோம்.

ஆதலால் தமிழ் எழுத்து மாற்றத்தை உடனடியாக கவனிக்க வேண்டுகிறோம். தமிழின் பிற்கால வளர்ச்சிக்கு இதுதான் அடிப்படை. “சு.மி” ஆசிரியர் திரு சி.ஆர்.சீனுவாசன்; காலஞ்சென்ற திரு. கல்கி; திரு.ரா.பி.சேதுப்பிள்ளை; திரு.ஓமந்தூர் ரெட்டியார்; திரு.எஸ்.குருசாமி- போன்ற பல கட்சித் தோழர்களைக் கொண்ட எழுத்து ஆராய்ச்சிக் குழுவில்தான் இந்த எழுத்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. (கண்ணீர் துளிகளில் ஒருவர்கூட இக்குழுவில் கலந்துகொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.) ஆகையால் அந்த முடிவை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவந்து பாடப்புத்தகங்களில் மாறுதல் செய்ய வேண்டும்.

எழுத்துச் சீர்திருத்தம் நடந்த பிறகுதான் டைப்ரைட்டர்; டெலிபிரிண்டர்; மானோ டைப்; கம்போசிங்; தந்தி- ஆகிய துறைகளில் தமிழை கையாள முடியும். மண்டைக்கனம் பிடித்தவர்களுக்கும் படித்த “தற்குறிகளுக்கும்” இந்த எழுத்துச் சுருக்க பிரச்னை புரியாது. இதன் அவசியமும் புலனாகாது. தலைவர் பெரியார் அவர்கள் 30 ஆண்டுகளாக இதுபற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். பெரியார் அவர்கள், கவிஞர் திரு.பாரதிதான் அவர்கள், புலவர் வை.பொன்னம்பலம் அவர்கள் ஆகியோரிடம் நேரிற்கேட்டுத் தெரிந்துகொண்டால்தான் சிறிதாவது புரியும்.

இனி தமிழ் மொழி சுருக்கெழுத்துப் பற்றி ஒருவார்த்தை இத்துறையில் ஒரு பெரிய சதிவேலை நடந்து வருகிறது. இந்தத் தேர்வுக்கு 100 மாணவர்கள் சென்றால் இரண்டொருவருக்குத்தான் வெற்றி கிடைக்கிறது. காரணம் இன்றுள்ள சுருக்கெழுத்து முறையானது இங்கிலீஷ் (சுலோன்குப்ளயான்) முறையை பின்பற்றியதாயிருப்பதுடன் இதில் தேர்வு நடத்துகின்ற யாவரும் ஆரியர்களாகவே இருந்து வருகின்றனர்.

இனி இந்த பன்னாடை முறை ஒழிக்கப்பட வேண்டும். 100க்கு 30, 40 பேருக்காவது வெற்றி கிடைக்குமாறு செய்ய வேண்டும். புதிய சிறப்பான சுருக்கெழுத்து முறையை வகுக்க வேண்டும். தமிழாசிரியர்களுக்கு இந்த சுருக்கெழுத்து தேர்வை கட்டாயமாக்க வேண்டும்.

 

இங்கிலீசும் தமிழும் நன்றாக படித்துத் தேர்ந்தவர்களையே சர்க்கார் பணிமனைகளில் எழுத்தாளர்களாக நியமிக்க வேண்டும். விரிவான தமிழ்ப் படிப்புள்ள தமிழர்களான வக்கீல்களைக் கொண்டு நல்ல இங்கிலீஷ் நூல்களையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கச் செய்ய வேண்டும். இதற்காக தனி இலாகாவை ஏற்படுத்த வேண்டும்.

இம்மாதிரி முறைகளை அவசரமாகக் கையாளாவிட்டால் நேற்று நிறைவேற்றப்பட்ட சட்டம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தானிருக்கும்.

விடுதலை – 18.12.56

பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

You may also like...