கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்
ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பெரியாரின் 50-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், 24.12.2023 அன்று மாலை 6.00 மணிக்கு குருவரெட்டியூர் பெரியார் திடல், தோழர் பிரகலாதன் நினைவரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகசோதி கூட்டத்திற்கு தலைமை வகிக்க, வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். மறைந்த தோழர் பிரகலாதன் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். நிகழ்வின் தொடக்கத்தில் கோபி யாழ் திலீபன், அறிவுக்கனல் ஆகியோர் பாடல்கள் பாடினர். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமிக்கு அடுத்ததாகப் பேசிய, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், திராவிடம் – சனாதனம் குறித்து உரையாற்றினார்.
அப்போது, தோழர்கள் கழக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்ட இராம. இளங்கோவன், அதற்கு முன்னுதாரணமாக கழக நூல் வெளியீட்டு திட்டங்களுக்காக தனது தனிப்பட்ட நிதியாக ரூ. 3,00,000. (மூன்று இலட்சம் ) வழங்குவதாக அறிவித்து, தலைவர் கொளத்தூர் மணியிடம் தோழர்களின் பெருத்த கரவொலிக்கிடையே வழங்கினார். பெரியாரிய நூல்களை தேடித்தேடி படிக்கும் ஆர்வமுடையவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், சனாதன சக்திகளின் நெருக்கடிகள் முற்றிக்கொண்டிருப்பதையும் கருத்தில்கொண்டு வெளியீடுகளை அதிகரிக்க வேண்டிய இக்காலகட்டத்தில் இராம. இளங்கோவன் வழங்கியிருக்கும் இந்த நிதி கழகத்திற்குப் பேருதவி புரியும். அந்தவகையில் இராம. இளங்கோவன் வழங்கிய நன்கொடையை கழகத் தலைவர் மகிழ்வோடு பெற்றுக்கொண்டார்.
காணொளி மூலமாக தெருமுனை பரப்புரைகளை எடுத்துச்செல்ல உதவியாக, ரூ.80,000 மதிப்புள்ள காணொளிக் கருவிகளை வழங்கிய சிருவலூரைச் சேர்ந்த பொறியாளர் அருள்குமாருக்கு கழகத்தலைவர் பொதுக்கூட்ட மேடையில் நினைவுப்பரிசு வழங்கினார். கழகத்தின் சேலம் மாநில மாநாட்டிற்கு பெருந்தொகையை நன்கொடையாக வழங்கிய மருத்துவர் இராவணன், VAO செல்வம், குமார், இராமன் ஆகியோருக்கும் கழகத் தலைவர் நினைவுப்பரிசு வழங்கினார். அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் எழுதி, நிமிர்வோம் வெளியீடாக உருவாகியுள்ள “பெரியார் மீது தூற்றும் புழுதி; அடித்து விரட்டும் ஆதாரங்கள்” நூலை தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் பேராசிரியர் த.செயராமன் வெளியிட, ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் செல்வக்குமார் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து த.செயராமனும், கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் விரிவாக கருத்துரையாற்றினர். பொதுக்கூட்டத்திற்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வகுமார், வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருவரெட்டியூர், கோபி, சத்தியமங்கலம், காவலாண்டியூர், மேட்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து தோழர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்