ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் அத்துமீறல் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்
கழகத் தலைவர் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் சுப்பிரமணி சேலம் பல்கலையில் பெரியார், அண்ணா, கலைஞர் இருக்கையின் தலைவராக உள்ளார். இதழியல் துறை பேராசிரியரும் கூட. தமிழ்நாடு அரசு அண்மையில் அவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெகநாதன் என்ற ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரை துணைவேந்தராக நியமித்துள்ளார். அவர் பல்கலை வளாகத்தையே ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக மாற்றிவருகிறார். ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ‘அகில இந்திய வித்தியார்த்தி பரிசத்’ அமைப்பில் சேருங்கள் என்று விளம்பரப் பலகை மட்டும் வளாகத்தில் மாட்டப்பட்டுள்ளது. இதற்கு துணைவேந்தர் அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக பதிப்பு துறை என்ற ஒரு துறையும் இயங்கிவருகிறது. 2008ம் ஆண்டு பெரியார் பெயரில் இயங்கும் இந்த பல்கலையில் பெரியார் இருக்கை உருவாக்கப்பட்டது. இதுவரை 60 பக்க அளவில் பெரியார் குறித்த ஒரு சிறு நூல் மட்டுமே வெளியிடப்பட்டது. வேறு எந்த நூலும் வெளியிடப்படவில்லை. பல்கலைப் பேராசிரியர்கள் பல்கலை சார்பில் பல ஆய்வு நூல்களை வெளியிடுவது வழக்கமானது தான். திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பெரியார் துறை தலைவராக இருந்த எஸ்.வி.ஆர் பேராசிரியர் சக்குபாய் பெரியார் குறித்த ஆய்வரங்குகளை நடத்தி ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். எம்.அய்.டி பேராசிரியர்களான எம்.எஸ்.எஸ் பாண்டியன், முனைவர் வெங்கடாசலபதி முறையே பெரியார், பாரதி, வ.உ.சி குறித்து ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கெல்லாம் பல்கலை துணைவேந்தரிடம் முன் அனுமதி பெற தேவையில்லை. துணைவேந்தர் ஜெகநாதன், பேராசிரியர் சுப்பிரமணி உரிய அனுமதி பெறவில்லை என்று காரணம் கூறுகிறார். பெரியார், மெக்காலே குறித்த ஆய்வுகள், இதழியல் சார்ந்தவை, இதழியல் சார்ந்த வெளியீடுகளுக்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று பல்கலை விதிகள் தெளிவாக்குகிறது.
ஆர்.எஸ்.எஸ் கொள்கை எதிரிகளாக ஆபத்தான 5 பேரில் மெட்டீரியலிஸ்ட் (பொருள்முதல்வாதம், கடவுளை மறுப்போர்) மெக்காலே ஆகியோரும் அடங்குவர். அந்தக் கண்ணோட்டத்தில் தான் துணைவேந்தர், முறைகேடாக பல்கலை விதிகளுக்கு நேர்முரணாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலையில் பெரியார் இருக்கையின் தலைவராக இருக்கும் பேராசிரியர் பெரியார் பற்றிய வரலாற்றை இதழியல் கண்ணோட்டத்தில் எழுதுவதற்கு தடை போடுவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது, தமிழ்நாடு உயர்கல்வித்துறை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத் தலைவர் கூறினார்.
பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்